Saturday, February 9, 2013

பயிர்க் கடன்களை ரத்து செய்யவேண்டும்! இராமதாஸ் வலியுறுத்தல்!

பயிர்க் கடன்களை ரத்து செய்யவேண்டும்! இராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்துள்ள நிவாரண உதவி போதாது என்பதால் விவசாய பயிர்க் கடன்களையும் ரத்து செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பேசிய முதல்வர், இழப்பீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வந்தது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் அரசு அறிவித்துள்ள நிவாரண உதவி போதுமானதல்ல. கடந்த சில ஆண்டுகளில் உரங்களின் விலைகள் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளன; வேளாண் பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்திருப்பதால் விவசாயம் என்பது செலவு பிடிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில், 1.75 லட்சம் உழவர்களுக்கு சொந்தமான 3.61 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு மட்டுமே இந்த இழப்பீடு வழங்கப்படும் என்பது நியாயமானதல்ல. எனவே, சம்பா பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
தமிழகத்தின் 31 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்த நிலவரியை தள்ளுபடி செய்துள்ள அரசு, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களையும் அடியோடு தள்ளுபடி செய்ய வேண்டும்.
சம்பா பயிர்கள் கருகியதால் 19 உழவர்கள் தற்கொலை செய்துகொண்டும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கும் குறைந்தது ரூ. 5 லட்சமாவது இழப்பீடு வழங்குவதுடன், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட வேளாண் தொழிலாளர்களின் நலன் கருதி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை நூறிலிருந்து 150 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில் கடந்த பல மாதங்களாக வேலை கிடைக்காததால் வருவாய் இழப்பை சந்தித்து கடன் வலையில் சிக்கியுள்ள வேளாண் தொழிலாளர்களுக்கும், வறட்சி காரணமாக சம்பா சாகுபடி செய்யாமல் நிலத்தை தரிசாக வைத்திருந்த உழவர்களுக்கும் ஒருமுறை உதவியாக தலா ரூ.10,000 வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: