Thursday, February 14, 2013

தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும்: 4 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாலாறு கண்ணிவெடி தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 தமிழர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாகவும், அடுத்த இரு வாரங்களில் அவர்கள் தூக்கிலிடப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீசை மாதையன், சைமன், ஞானப்பிரகாசம், புலவேந்திரன் ஆகிய 4 பேருமே அப்பாவிகள். கண்ணிவெடித் தாக்குதலுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் மொத்தம் 124 பேர் மீது குற்றஞ்சாற்றப்பட்டிருந்த போதிலும், அவர்களில் 117 பேர் விசாரணை நீதிமன்றத்திலேயே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். மீதமுள்ள இவர்கள் 4 பேர் உட்பட 7 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த போது, மூவரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம், இந்த நால்வர் மீதான இரு குற்றச்சாற்றுகளையும் தள்ளுபடி செய்தனர். தடா சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் தான் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
தடா என்ற அடக்குமுறை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் தான் இச்சட்டம் காலாவதியாக அனுமதிக்கப்பட்டது. இப்படி காலாவதியான ஒரு சட்டத்தின் அடிப்படையில் 4 அப்பாவிகளின் உயிர்களை பறிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காந்தியடிகளும், புத்தரும் பிறந்த இந்திய மண்ணில் தூக்கு தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது. ஆனால், இந்திய அரசோ மனித உயிர்களுக்கும், உரிமைகளுக்கும் சற்றும் மதிப்பளிக்காமல் தூக்கு தண்டனைகளை அரங்கேற்றி வருகிறது.
அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஒட்டுமொத்தமாக இரண்டு கருணை மனுக்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புதிய குடியரசுத் தலைவராக பிரனாப் முகர்ஜி பதவிக்கு வந்த 7 மாதங்களில் 4 தமிழர்கள் உட்பட 7 பேரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.
அப்சல் குருவின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் , அதை எதிர்த்து அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்வதற்கு கூட அவகாசம் தராமல் ரகசியமாக அவரை மத்திய அரசு தூக்கிலிட்டது. அதேபோல் 4 தமிழர்களின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்றுவரை வெளியிடாமல், அவர்களை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை அரசு ரகசியமாக செய்துவருகிறது. இத்தகைய போக்குகள் சரியானவை அல்ல.
மனிதர்களின் உயிர்வாழும் உரிமையை பறிப்பதை விட மிகக்கொடிய மனித உரிமை மீறல் எதுவும் இருக்கமுடியாது. எனவே, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 தமிழர்களையும் விடுதலை செய்வதுடன், இந்தியாவில் தூக்கு தண்டனையை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: