பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
சமையல் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளின் உரிமையாளர்கள் வாடகை உயர்வு கோரி நடத்தி வரும் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எண்ணெய் நிறுவனங்கள் எந்த முயற்சியும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் 55 இடங்களில் எரிவாயுவை சிலிண்டர்களில் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த எரிவாயு நிரப்பும் ஆலைகளுக்கு சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னகத்தில் உள்ள துறைமுகங்களில் இருந்து எரிவாயுவை கொண்டு செல்லும் பணியில் தான் இந்த சரக்குந்துகள் ஈடுபட்டுள்ளன.
இதற்கான வாடகை குறித்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்து விட்ட நிலையில் புதிய ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய எண்ணெய் நிறுவனங்கள் தவறியது தான் எரிவாயு சரக்குந்து உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கான காரணம் ஆகும். இப்போராட்டம் காரணமாக எரிவாயுவை சிலிண்டர்களில் நிரப்பும் பணி தொய்வடைந்திருக்கிறது
. எரிவாயு நிரப்பும் மையங்களில் இப்போது மிகக் குறைந்த அளவிலேயே எரிவாயு இருப்பதாக கூறப்படுகிறது. எரிவாயு சரக்குந்து வேலைநிறுத்தம் நாளைக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படாவிட்டால், எரிவாயு நிரப்பும் பணி முழுமையாக பாதிக்கப் பட்டு தென்மாநிலங்கள் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும்.
ஆனால், இந்த நெருக்கடியான சூழலை எண்ணெய் நிறுவனங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சமையல் எரிவாயு சரக்குந்து உரிமையாளர்களுடன் மிகவும் தாமதமாக இன்று தான் எண்ணெய் நிறுவன நிருவாகங்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற முடியாததும் இல்லை. இந்த வேலை நிறுத்தத்திற்கு முன்பே இருதரப்புக்கும் இடையே நடந்த 3 கட்ட பேச்சுக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒரு டன் எரிவாயுவை எடுத்துச் செல்ல கிலோ மீட்டருக்கு ரூ.2.94 தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ள நிலையில், சரக்குந்து உரிமையாளர்கள் 12 காசுகள் அதிகமாக ரூ.3.06 தரும்படி கோருகின்றனர். இருதரப்பினரும் திறந்த மனதுடன், விட்டுக்கொடுத்துப் பேசினால் இப்பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண முடியும்.
ஏற்கனவே பதிவு செய்து ஒரு மாதத்திற்குப் பிறகுதான் எரிவாயு உருளைகள் கிடைக்கின்றன. இத்தகைய சூழலில் இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, எரிவாயு சரக்குந்து உரிமையாளர் சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
No comments:
Post a Comment