Wednesday, February 25, 2015

மதம் மாற்றுவதற்காக சேவை செய்தாரா?அன்னை தெரசாவை அவமதிக்கக்கூடாது: ராமதாஸ்

 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை:
’’ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தான் அன்னை தெரசா சேவை  செய்தார் என்று கூறியிருக்கிறார். அன்னை தெரசாவை இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது; அவரது சேவையை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. பாகவத்தின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது.

அன்னை தெரசா என்றாலே அவரது தன்னலம் கருதாத சேவை தான் நினைவுக்கு வரும். அவர் மதம், இனம், மொழி ஆகிய அனைத்தையும் கடந்தவர். அதனால் தான் மதம், மொழி, இனம் ஆகிய மூன்றின் அடிப்படையிலும் எந்த தொடர்பும் இல்லாத இந்தியாவுக்கு வந்து சேவை செய்தார். தாய், தந்தையை கடுமையான நோய் தாக்கிவிட்டால் அவர்களை கவனித்துக் கொள்ள பிள்ளைகளே முன்வராத இந்த காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தமது அன்புக் கரங்களால் அள்ளி எடுத்து கவனித்துக் கொண்டனர். இப்படிப்பட்ட சேவைக்கு மோகன் பாகவத் உள்ளர்த்தம் கற்பித்திருப்பது வேதனை அளிக்கிறது. இந்த குற்றச்சாற்றை அவரது மனசாட்சி கூட ஏற்றுக்கொள்ளாது.

அன்னை தெரசாவின் சேவையை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதை விட, மதமாற்றம் குறித்த சர்ச்சைத் தீ அவிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தான் மோகன் பாகவத்தின் நோக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். காரணம் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்தே மத வெறுப்பைத் தூண்டும் செயல்களில் தான் சங்க பரிவார் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. 

கடந்த திசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் பாகவத்,‘‘இந்தியா என்பது இந்துக்களின் தேசம். கடந்த காலங்களில் இழந்ததை இப்போது மீட்போம். கடந்த காலங்களில் மதமாற்றம் செய்யப்பட்டோரை  கட்டாயமாக மறு மதமாற்றம் செய்வோம். அதன்பின் இந்துக்களை எவரும் மதமாற்றம் செய்யாமல் தடுக்க கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவோம்’’ என்று எச்சரிக்கும் வகையில் பேசினார். அதன்பிறகு தான் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.

மற்றொருபுறம், இந்தியா ஒரே நாடு, இங்கு ஒரே மதம் தான் இருக்க வேண்டும், ஒரே மொழி தான் பேசப்பட வேண்டும் என்று நாட்டின் ஒற்றுமைக்கே உலை வைக்கும் வகையில் பேசினார். அதுமட்டுமின்றி, இந்தியாவிலுள்ள இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கு விரட்டியடிப்பது தான் உண்மையான மதமாற்றம் என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பும், சிவசேனாவும் விஷம் கக்கின. இதற்கெல்ல்லாம் மேலாக நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடி விடுங்கள் என எச்சரிக்கை விடுத்த பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் கிரிராஜ் சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து பா.ஜ.க. அழகு பார்த்தது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவோம் என்ற முழக்கங்களும் எழுந்தன.

தேசத் தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலை வைப்போம் என்று இந்து மகாசபை அமைப்பும், இந்துக்களின் மக்கள் தொகையை அதிகரிக்க அனைத்து இந்து பெண்களும் குறைந்தது 10 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று  இந்து அமைப்புகளும் பேசி வருவது சிறுபான்மையினரின் மனதில் வெறுப்பைத் தான் வளர்க்குமே தவிர நம்பிக்கையை ஏற்படுத்தாது. மத சகிப்பற்ற தன்மையை பொறுத்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி தில்லியில் எச்சரித்த பிறகும், அனைவரும் மதச்சகிப்பு தன்மையை பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிட்ட பிறகும் இத்தகைய பேச்சுக்கள் தொடர்வது சரியல்ல.

சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ வகை செய்யாத நாடு முன்னேற முடியாது என்பதை இந்து அமைப்புக்களின் தலைவர்கள் உணர்ந்து இத்தகைய பேச்சுக்களைக் கைவிட வேண்டும். இதுபோன்ற பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: