Sunday, February 22, 2015

பரவும் பன்றிக் காய்ச்சல்: நோய் தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்: ராமதாஸ்


பன்றிக் காய்ச்சல் பரவுவதையடுத்து, நோய் தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. நிலைமை சமாளிக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாலும், உயிர்களைப் பறிக்கும் இந்நோயைக் கட்டுப்படுத்த இது போதுமானதல்ல.

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை 8 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருகிறது. உண்மையில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். தொடக்கத்தில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலின் தாக்கமே இல்லை என்று கூறிவந்த அரசு, ஒரு கட்டத்தில் நிலைமை மோசமடைந்த பிறகு தான் விழித்துக் கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. 

தமிழகத்தில் 250&க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களில் சுமார் 100 பேர் இன்னும் மருத்துவமனையில்  மருத்துவம் பெற்று வருகிறார்கள். பன்றிக் காய்ச்சல் தாக்கினால் இறப்பு உறுதி என்பதைப் போன்று தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் மக்களிடையே ஒருவித அச்சமும், கவலையும் ஏற்பட்டிருகிறது.

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது, சிகிச்சை அளிப்பது ஆகியவை ஒருபுறம் இருந்தாலும், பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன? அந்தக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பன்றிக் காய்ச்சல் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் அச்சமூட்டும் செய்திகள் தான் பரப்பப்படுகின்றனவே தவிர, நம்பிக்கையூட்டக் கூடிய உண்மையான செய்தி மக்களை சென்றடையவில்லை. 

பன்றிக் காய்ச்சல் பரவுவதற்கு பன்றிகள் தான் காரணம் என்று தவறாக கருதிக் கொண்டு பன்றிகளையெல்லாம் காட்டுக்குள் விரட்டியடித்து விட்டதாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுகாதார அதிகாரிகள் கூறியிருப்பதிலிருந்தே பன்றிக் காய்ச்சல் குறித்து மக்களிடம் எந்த அளவுக்கு தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் ஆய்வு செய்வதற்காக ரூ.8,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இதைத் தடுக்கும் வகையில் பன்றிக் காய்ச்சல் ஆய்வுக்கு ரூ.3750-க்கும் மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று  உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில் பன்றிக் காய்ச்சலுக்கான மருத்துவ ஆய்வுக்கு அதிகபட்சமாக ரூ.1500 தான் செலவாகும் என்று தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியிருக்கிறார். 

அவ்வாறு இருக்கும் போது தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது. பன்றிக் காய்ச்சல் தாக்குதலை ஓர் அசாதாரண நிகழ்வாகக் கருதி, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தனியார் மருத்துவமனைகளும் அரசுடன் கைகோர்க்க வேண்டும். இதை ஒரு சேவையாக கருதி இலவசமாகவோ அல்லது இப்போது நிர்ணயிக்கப்பட்டிருப்பதைவிட குறைந்த கட்டணத்திலோ மருத்துவ ஆய்வும், சிகிச்சையும் வழங்க தனியார் துறையினர் முன்வர வேண்டும்.

சென்னை போன்ற மாநகரங்களுக்கு வெளியாட்கள் அதிகம் வந்து செல்வார்கள் என்பதால் விமான நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் மட்டுமின்றி, பேரூந்து நிறுத்தங்களிலும் பன்றிக் காய்ச்சல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பன்றிக் காய்ச்சல் தாக்கியதாக உறுதி செய்யப்பட்டவர்கள் வாழும் பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பி மக்களுக்கு  ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவியபோது, மருத்துவர்களும், மருத்துவத்துறையின் இதர பணியாளர்களும் ஆற்றிய பணி காரணமாக நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல், இப்போதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஒன்றாக கைகோர்த்து பன்றிக் காய்ச்சலை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: