Monday, February 2, 2015

ஆபிசுக்கு பைக்கை விட்டுட்டு "பிளைட்"லயா போகச் சொல்றீங்க... மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை : மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விமான எரிபொருளை விட அதிகமாக உள்ள பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து விமான எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.6.27 குறைத்துள்ளன. இதையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ. 57.45-லிருந்து ரூ. 51.18 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை.இப்போது அத்தியாவசியத் தேவைக்கான டீசல் விலையை விட, விமான எரிபொருள் விலை குறைவு என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன.இப்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.51.34 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.61.38 ஆகவும், உள்ளன. விமான எரிபொருள் விலை இவற்றைவிட குறைவாக ரூ.51.18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் பெட்ரோல் விலையை 13.22 ரூபாயும், டீசல் விலையை 09.88 ரூபாயும் மட்டுமே குறைத்த எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை மட்டும் ரூ. 25.00 குறைத்துள்ளன. அதாவது பெட்ரோல் விலையை விட சுமார் இரு மடங்கு அளவுக்கும், டீசல் விலையை விட இரண்டரை மடங்கு அளவுக்கும் விமான எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்திருக்கின்றன.இந்த 3 வகை எரிபொருட்களில் டீசலின் பயன்பாடு தான் அதிகம். விவசாயம், மீன்பிடித் தொழில், சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக தொழில் நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியத் தேவைகளுக்கும் டீசல் தான் பயன்படுத்தப்படுகிறது. இரு சக்கர ஊர்திகள் மற்றும் மகிழுந்துகளுக்கு பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், இந்த யதார்த்தத்தை மறந்துவிட்ட மத்திய அரசு கடந்த சில மாதங்களில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 7.75-ம், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.6.50ம் உயர்த்தி கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் தடுத்துவிட்டது. எனவே தான் விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களுக்கு பணக்காரர்கள் பயன்படுத்தும் எரிபொருளைவிட அதிக கட்டணம் விதிக்கப்படுவதன் பின்னணியில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, ஏற்கனவே நான் வலியுறுத்தி வருவதைப் போல பெட்ரோல், டீசல் விலைகளையும், வரிகளையும் மறு ஆய்வு செய்து, விமான எரிபொருள் விலையை விட குறைவாக இருக்கும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசையும், எண்ணெய் நிறுவனங்களையும் வலியுறுத்துகிறேன்.சமையல் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் லாரிகளின் உரிமையாளர்கள் வாடகை உயர்வு கோரி நடத்தி வரும் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எண்ணெய் நிறுவனங்கள் எந்த முயற்சியும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.லாரி உரிமையாளர்களுடன் மிகவும் தாமதமாக இன்று தான் எண்ணெய் நிறுவன நிருவாகங்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. லாரி உரிமையாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற முடியாததும் இல்லை. இந்த வேலை நிறுத்தத்திற்கு முன்பே இருதரப்புக்கும் இடையே நடந்த 3 கட்ட பேச்சுக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.ஒரு டன் எரிவாயுவை எடுத்துச் செல்ல கிலோ மீட்டருக்கு ரூ.2.94 தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ள நிலையில், லாரி உரிமையாளர்கள் 12 காசுகள் அதிகமாக ரூ.3.06 தரும்படி கோருகின்றனர்.இருதரப்பினரும் திறந்த மனதுடன், விட்டுக் கொடுத்துப் பேசினால் இப்பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண முடியும். ஏற்கனவே பதிவு செய்து ஒரு மாதத்திற்குப் பிறகுதான் எரிவாயு உருளைகள் கிடைக்கின்றன. இத்தகைய சூழலில் இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி விடும். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, எரிவாயு லாரி உரிமையாளர் சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: