Tuesday, February 17, 2015

இலங்கை தப்பிக்க ஐ.நா. ஆணையம் காரணமாகக் கூடாது : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’ இலங்கைப் பிரச்சினையில் எது நடக்கக் கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. இலங்கைப்போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படாது என்றும் அடுத்தக் கூட்டத்தில் தான் தாக்கல் செய்யப்படும் என்றும் ஆணையத்தின் தலைவர் கூறியிருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்த விசாரணைக்கு  இலங்கை ஒத்துழைக்காத நிலையில், உலகம் முழுவதுமிருந்து  ஆதாரங்களைத் திரட்டி ஐ.நா. மனித உரிமை ஆணையக்குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவடைந்து விட்டதால் அது குறித்த அறிக்கை அடுத்த மாதம் 25&ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை தடுப்பதற்கான முயற்சியில் இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டிருப்பதையும், அதற்கு  இந்திய ஆதரவு கோரப்படுவதையும் கடந்த 10 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் விளக்கியிருந்தேன். இலங்கை போர்க்குற்ற விசாரணை அறிக்கை நிர்ணயிக்கப்பட்ட தேதியில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்படுவதை இந்தியா உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், இலங்கை மேற்கொண்ட முயற்சிகளின் பயனாகவும், திரைமறைவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக களம் இறங்கியதன் விளைவாகவும் போர்க்குற்ற விசாரணை அறிக்கை மார்ச் 25 ஆம் தேதிக்கு மாற்றாக வரும் செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. 

இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை   படுகொலை செய்த கொடியவன் இராஜபக்சேவும், அவனது கூட்டாளிகளும் கடந்த 5 ஆண்டுகளுக்கும்  மேலாக தண்டிக்கப்படவில்லை. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டிலேற்றப்பட்டு தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று பிறந்த நிலையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றம் தருகிறது. போர்க்குற்ற விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்காக கூறப்படும் காரணங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல.

போர்க்குற்ற விசாரணைத் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் இதுவரை வழங்கிய அறிவுரைகளில் ஒன்றைக்கூட இலங்கை மதிக்கவில்லை. மனித உரிமை ஆணைய விசாரணைக்குக் கூட இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை. இத்தகைய சூழலில், அந்நாட்டின் வேண்டுகோளை ஏற்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை 6 மாதங்களுக்கு ஆணையம் ஒத்திவைத்தது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கையில் புதிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், விசாரணை அறிக்கையை வலுப்படுத்தும் வகையில் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம் என்பதும் தமது முடிவுக்குக் காரணம் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அல் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.

போர்குற்றச்சாற்றுகளை வலுப்படுத்தும் வகையில் புதிய தகவல்கள் கிடைத்தால் அது முற்றிலும் வரவேற்கக் கூடியது தான். ஆனால், மனித உரிமை விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இந்த நிமிடம் வரை இலங்கை அரசு அறிவிக்கவில்லை. மேலும், போர்க்குற்றச்சாற்று குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தப் போவதாக மட்டுமே இலங்கை கூறி வருகிறது.

 இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகளை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் அளவுக்கு விசாரணைக்குழுவிடம் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எந்த வாக்குறுதியும் அளிக்காத இலங்கையை நம்பி, விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை ஒத்தி வைப்பது போரில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை தாமதிக்கும் செயலாகவே அமையும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகி விடும். மேலும், இந்த தாமதத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்ப அனுமதிக்கக் கூடாது.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து அந்த நாட்டுக்குள் சென்று விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்குழுவுக்கு அனுமதி அளிப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே விசாரணை அறிக்கை தாக்கலை ஒத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏற்கனவே அறிவித்தவாறு விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 25 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்; அது தான் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்படும் நீதியாக இருக்கும். ’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: