சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர் வடலூர் இராமலிங்க அடிகளார். அன்பு மற்றும் கருணையை அடையாளமாகக் கொண்டிருந்த வள்ளலாருக்கு சென்னையில் நினைவிடம் அமைப்பதாக அரசு அளித்த வாக்குறுதி 12 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருப்பது தான் சோகம்.
வள்ளலார் என்றதுமே நினைவுக்கு வருவது வடலூர் சத்திய ஞான சபை தான் என்ற போதிலும், அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடம் சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் 32/14 என்ற எண் கொண்ட இல்லம் தான். வள்ளலார் 2 வயது குழந்தையாக இருந்த போதே அவரது தந்தை காலமாகிவிட்டார். அதன் பின்னர் வள்ளலார் உள்ளிட்ட குழந்தைகளுடன் இந்த வீட்டில் தான் அவரது தாயார் குடியேறினார். தமது 51 ஆண்டு கால வாழ்நாளில் 33 ஆண்டுகளை இவ்வீட்டில்தான் வள்ளலார் கழித்தார். திருவருட்பாவின் முதல் 5 திருமுறைகளை இங்கு தான் எழுதினார்; உருவ வழிபாடு கூடாது என்ற சிந்தனை அவருக்கு ஏற்பட்டதும் இந்த வீட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்புமிக்க இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்று இராமலிங்க அடிகளாரின் வழிநடப்பவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பா.ம.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பியதன் பயனாக கடந்த 04.04.2003 அன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அப்போதைய அமைச்சர் செ.செம்மலை, வள்ளலார் வாழ்ந்த ஏழுகிணறு இல்லம் நினைவிடம் ஆக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதை செயல்படுத்த இன்றுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.
எந்த உயிரையும் கொல்லக் கூடாது, புலால் உண்ணக்கூடாது, யாரையும் துன்புறுத்தக் கூடாது, பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வள்ளலாரின் போதனைகள் உலககெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் சமயங்களைக் கடந்து வள்ளலாரின் வழி நடப்பவர்கள் அவரது நினைவாக எண்ணற்ற பணிகளை செய்துவருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்கவருக்கு நினைவிடம் அமைத்து பெருமை சேர்க்க கிடைத்த வாய்ப்பை கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசு தட்டிக் கழித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வள்ளலாரின் நினைவாக அவரால் உருவாக்கப்பட்ட வடலூர் சத்திய ஞான சபையில் உணவு வழங்குவதற்காக மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்குதல், அவர் முக்தியடைந்த தைப்பூச நாளில் மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூடுதல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்ற போதிலும் அவற்றைவிட அவருக்கு நிணைவிடம் அமைப்பது முக்கியம் ஆகும். எனவே, 12 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், வள்ளலார் முக்தியடைந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி அவரது ஏழுகிணறு இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும். இதுவே வள்ளலாரின் நினைவு நாளில் நாம் அவருக்கு செய்யும் மிகப்பெரிய பெருமையாக இருக்கும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment