பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’2013-14 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆண்டு இழப்பு ரூ. 13,985.03 கோடியாக அதிகரித்திருக்கிறது. மின்வாரிய வரலாற்றில் இது தான் மிகப்பெரிய இழப்பாகும். 2011 ஆம் ஆண்டில் ரூ.8,000 கோடிக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் இந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதேநிலை தொடர்ந்தால் மின்சார வாரியத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றின் வரவு - செலவு கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவது வழக்கம். தமிழ்நாடு மின்சார வாரியம் அதன் வரவு- செலவு கணக்குகளை நவம்பர் மாதத்திற்குள் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த மின்சார வாரியம் வேறு வழியின்றி நேற்று தான் இந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
கடந்த 2012-13 ஆம் ஆண்டில் ரூ.11,679 கோடியாக இருந்த மின்சார வாரியத்தின் நஷ்டம், 2013-14 ஆம் ஆண்டில் ரூ.13,985 கோடியாக அதிகரித்திருக்கிறது. மின்வாரியத்தின் அத்தியாவசிய செலவுகள் எதுவும் அதிகரிக்காத நிலையில், நஷ்டம் மட்டும் ஒரே ஆண்டில் ரூ.2305 கோடி அதிகரித்திருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதுமட்டுமின்றி, 2013-14 ஆம் ஆண்டில் மின் விற்பனை மூலமான வருவாய் ரூ. 2,847.57 கோடி மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், மின்சாரம் வாங்குவதற்கான செலவு மட்டும் ரூ. 4,788.47 கோடி அளவுக்கு அதிகரித்தது ஏன்? என்பதும் மின்சார வாரியத்திற்கே வெளிச்சம். 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2550 மெகாவாட் அளவுக்கான புதிய மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததாகவும், அதனால் வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்குவது பெருமளவில் குறைந்துள்ளதாகவும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பலமுறை கூறி வந்த நிலையில், மின்சார கொள்முதலுக்கான செலவு சுமார் 20% அதிகரித்திருப்பது ஏன்? என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் தான் விளக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், மின்வாரியத்தின் கடன் கடந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.74,113 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ. 7,933 கோடி செலுத்தும் அளவுக்கு மின்சார வாரியத்தின் நிதிநிலைமை மோசமடைந்திருக்கிறது.
புதிய மின்சாரத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான மூலதனம் மின்சார வாரியத்திடம் இல்லை என்பதால், தனியாரிடம் கடன் வாங்கியும், நுகர்வோரிடம் கூடுதல் வைப்பீட்டு தொகையை வசூலித்தும் நிலைமையை மின்வாரியம் சமாளித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான நிலை என்றும், இதேநிலை நீடித்தால் மின்வாரியத்தை கடன் வலையிலிருந்து மீட்க முடியாத நிலை உருவாகிவிடும் என்றும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
மின்சார வாரியத்தின் நஷ்டம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்ததற்கு காரணம் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் நடைபெறும் ஊழல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் தான் என்பதில் சந்தேகமில்லை.
பொதுத்துறை நிறுவனங்களிடம் யூனிட் ரூ.2.95 என்ற விலையில் கிடைக்கும் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 15.10 கொடுத்து வாங்குவதால் தான் மின்சார வாரியத்திற்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே இதை தடுக்க முடியும். ஆனால், மின்சார உற்பத்தியை பெருக்குவதற்காக எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
2007 முதல் 2012 வரையிலான 11- ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் 7,808 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு மெகாவாட் அளவுக்குக் கூட புதிய அனல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை என்று இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டிருக்கிறது. மின்திட்டங்களை செயல்படுத்தி மின் உற்பத்தியை பெருக்கினால், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி ஊழல் செய்ய முடியாது என்பதாலேயே புதிய மின்திட்டங்களை அரசு செயல்படுத்த மறுக்கிறது என்ற குற்றச்சாற்றை புறந்தள்ளி விட முடியாது.
மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பைக் காரணம் காட்டி இரண்டரை ஆண்டுகளில் இருமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு விட்ட நிலையில், மின்சார வாரியத்தின் இழப்பு அதிகரித்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. எனவே, மின்சார வாரியத்தின் நிலவும் ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’
No comments:
Post a Comment