Saturday, February 28, 2015

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!: ராமதாஸ்


 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களில் 2&வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருக்கின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றுடன் உள்ளூர் வரிகளும் சேர்க்கப்படும்போது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.53 என்ற அளவுக்கும், பெட்ரோல் விலை ரூ.63.50 என்ற அளவுக்கும் உயரும். 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதைக் காரணம் காட்டி இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் அரசும், எண்ணெய் நிறுவனங்களும் நேர்மையான அணுகு முறையை கையாளவில்லை என்பதுதான் உண்மை.

 உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறைந்தால், பெட்ரோல், டீசல் விலைகளை எந்த அளவுக்கு குறைக்கவேண்டுமோ அதைவிட குறைந்த அளவில்தான் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. அதே நேரத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்தால், எந்த அளவுக்கு விலையை உயர்த்தவேண்டுமோ அதைவிட அதிகமாக விலையை உயர்த்துவதை எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன. இது மிகவும் மோசமான வணிக நோக்கம் கொண்ட செயல். இது கடுமையாக கண்டிக்கத் தக்கது.

அதேபோல், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் முழு பயனையும் மக்களுக்கு அளிக்காமல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 7 ரூபாய் 75 பைசாவும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாய் 50 பைசாவும் உயர்த்திக்கொண்ட மத்திய அரசு, இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள பட்சத்தில், கலால் வரியை குறைத்துக் கொண்டு எரிபொருள் விலை உயராமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசும் அதன் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனை காவு கொடுத்திருக்கிறது.

 கச்சா எண்ணெய் விலை குறைவால் ஏற்படும் பயன்களை அரசும், எண்ணெய் நிறுவனங்களும் அனுபவிக்க வேண்டும்; விலை அதிகரிப்பால் ஏற்படும் சுமையை மக்கள் தாங்க வேண்டும் என்பது மனிதநேயமற்ற கொள்கை.

கடந்த 15 நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பதால், சரக்குந்து வாடகை உயர்ந்து, அதன் விளைவாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தேவையில்லாத சுமையை சுமத்தும் என்பதால், பெட்ரோல் & டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: