Tuesday, February 24, 2015

வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிவிட்ட நிலையில், 26-ல் ரயில்வே பட்ஜெட்டும் 28-ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான முதல் பட்ஜெட் என்பதால் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்தக் குறையுமின்றி நிறைவேற்றும் வகையில் அவற்றை தயாரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. புதிதாக அறிவிக்கப்பட்ட 58 ரயில்களில் வெறும் 5 மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன. அதே போல தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்து வதற்காக ரூ.645 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்துக்காக அறிவிக்கப் பட்ட திட்டங்களில் பெரும் பாலானவை போதிய நிதி இல்லாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் அமைய வேண்டும்.
பொது பட்ஜெட்டைப் பொறுத்த வரை அனைத்துதரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என்பது தான். வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டாவது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இதை ரூ. 5 லட்சமாக உயர்த்த பிரதமரும், நிதி அமைச்சரும் முன்வர வேண்டும். அதேபோல, சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அவற்றின் மீதான வரிவிலக்கு வரம்பை குறைந்தபட்சம் ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவத்துக்காக செலவிடப்படும் தொகையில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படுகிறது. இதை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: