தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 13-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளன. இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவது அல்லது நிரந்தரமாக மூடுவதற்கான திட்டத்தை இம்மாதம் 17 ஆம் தேதிக்குள் தயாரிக்கும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் ஆணையிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். என்னால் உருவாக்கப்பட்ட வழக்குரைஞர்கள் சமூகநீதிப்பேரவை தொடர்ந்த வழக்கில் தான் இந்த ஆணை கிடைத்துள்ளது. தமிழகத்தைப் போலவே பஞ்சாப், ஹரியானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் இதே உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மற்ற மாநில அரசுகள் ஆராய்ந்து வரும் நிலையில், தமிழகம் மட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை தேடிக் கண்டுபிடித்து வருகிறது. தமிழகத்தின் மாநில நெடுஞ்சாலைகளில் 1500&க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ள நிலையில், அவற்றில் சிலவற்றை மட்டும் இடமாற்றம் செய்துவிட்டு, மீதமுள்ள கடைகளை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்துக்களும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு குடிபோதையில் வாகனங்களை ஓட்டியது தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. சமூக நீதிப் பேரவை தொடர்ந்த இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதால் கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சாலைவிபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதே இதற்கு ஆதாரம் ஆகும்.
நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பது தான் சாலை விபத்துக்களுக்கு காரணம் என்பதையும், இவை மிகப்பெரிய சமூக அச்சுறுத்தல் என்று உச்சநீதிமன்றமே கூறியிருப்பதையும் நன்றாக அறிந்துள்ள போதிலும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூட தமிழக அரசு தயங்குவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதற்காக தமிழக அரசு சார்பில் கூறப்படும் காரணம் மிகவும் கொடுமையானது. ‘‘மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகளை அகற்றினால், அவற்றை குடியிருப்பு பகுதிகளில் தான் அமைக்க வேண்டும்; அது மக்களுக்கு இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதை எதிர்க்கிறோம்’’ என்று அரசு கூறியுள்ளது. மக்கள் மீது அக்கறை இருப்பதைப் போல காட்டிக்கொண்டு நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை அப்படியே தொடரச் செய்யும் அணுகுமுறை மிகவும் ஆபத்தானது. ஒருவேளை மக்கள் மீது தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 6800&க்கும் அதிகமான மதுக்கடைகளை உடனடியாக மூடி மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் சரியான தீர்வாக அமையும்.
எனவே, இந்த வழக்கு இம்மாதம் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் போது ‘‘தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்’’ என்று தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மீதமுள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். இவற்றை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை மறுநாள் (13.02.2015) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்க அறப் போராட்டம் நடைபெறவுள்ளது. பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையில் நடைபெறவிருக்கும் இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். மது விலக்கில் விருப்பமுள்ள அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment