Wednesday, February 11, 2015

வனக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்


கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் வனக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்க ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மாணவர்கள் 2 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத் தக்கது.

வனக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகத் தான் அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். காடுகளை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கான மனித வளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய வேளாண் குழு அளித்த பரிந்துரைப்படி அனைத்து மாநிலங்களிலும் வேளாண் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் வனக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரிகளில் வனவியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு  25 ஆண்டுகளாக எந்த வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மாணவர்களின் போராட்டம் காரணமாக வனச் சரகர் பணியில்  வனவியல் மாணவர்களுக்கு 100% இடஒதுக்கீடு வழங்க  வேண்டும் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி கடந்த ஆண்டில்  74 வனவியல் பட்டதாரிகளுக்கு வனச்சரகர் வேலை வழங்கப்பட்டது.

ஆனால், திடீரென இந்த இடஒதுக்கீட்டை 25% ஆக குறைத்து தமிழக அரசு புதிய அரசாணையை   பிறப்பித்தது. இதனால் வனவியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கடந்த ஆண்டே மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போதே அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அப்போது இந்த கோரிக்கை குறித்து பேச்சு நடத்துவதாக உறுதியளித்த தமிழக அரசு இதுவரை பேச்சு நடத்தவில்லை. அதுமட்டுமின்றி, 181 வனவர் பணிக்காக ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிட்டுள்ள தமிழக அரசு அதில் வனவியல் பட்டதாரிகளுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்க வில்லை. இதைக் கண்டித்து தான் வனவியல் மாணவர்கள் பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வனவியல் மாணவர்கள் வனவர், வனச்சரகர் உள்ளிட்ட பணிகளைத் தவிர வேறு பணிகளுக்கு செல்வது மிகவும் கடினம். அவர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அரசு செயல்படக் கூடாது. எனவே, வனவியல் மாணவர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி வனச்சரகர் பணியில் 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்& வனவர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, வனவியல் பட்டதாரிகளுக்கான இடஒதுகீட்டுடன் கூடிய புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்ற 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: