Tuesday, December 29, 2015

ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாளிகை, வணிக நிறுவனம், கல்விக் கடைகளை அகற்ற என்ன திட்டம் இருக்கிறது? ராமதாஸ் கேள்வி

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அடையாற்றின் கரையோரம் குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரும் திட்டத்தின்படி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 10,000  வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடுகளைப் பெறுபவர்களில் சிலருக்கு  அதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.

மாற்று இடங்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சைதாப்பேட்டை ஆற்றுமா நகரில் இருந்த நூற்றுக்கணக்கான குடிசைகள் இடித்து தள்ளப்பட்டிருக்கின்றன. மற்றப் பகுதிகளிலும் இந்த நடவடிக்கை தொடரவிருக்கிறது. அடையாற்றின் கரைகளில் வசித்த மக்களுக்கு அவர்களின் குடிசைகளை அகற்றி விட்டு, அடுக்குமாடி வீடுகளை ஒதுக்குவதை குறை கூற முடியாது. ஆனால், அவை எங்கு ஒதுக்கப் பட்டிருக்கின்றன என்பது தான் சிக்கலே. ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக யாரும் குடியேறாமலிருந்த வீடுகள் தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் அண்மையில் ஏற்பட்ட மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தான் உள்ளன. அந்த வீடுகள் எதிர்காலத்தில் மழை&வெள்ளம் ஏற்பட்டால் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது மில்லியன் டாலர் வினா. அதுமட்டுமின்றி, இந்த குடிசைகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்தோ, தெருவோர வணிகம் செய்தோ பிழைப்பவர்கள். இதை சென்னையில் இருந்து தான் செய்ய முடியும் என்பதில்  இருவேறு கருத்து இருக்க முடியாது.
ஆனால், அவர்களை இப்போது அவர்கள் குடியிருந்த பகுதிகளில் இருந்து பல கி.மீ. தொலைவில் அரசு குடியமர்த்தியிருக்கிறது. இப்போது குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல், அவர்கள் நாள்தோறும் சென்னைக்கு வந்து பிழைப்பு தேடுவதும் சாத்தியமற்றது. அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த ஏழை மக்கள் கடந்த காலங்களில் பலமுறை இவ்வாறு குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பிழைப்பு கிடைக்காததால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை விட்டு ஏற்கனவே தாங்கள் வசித்த பகுதிக்கே திரும்பி குடிசை போட்டு வாழத் தொடங்கியிருக்கின்றனர். இத்தகைய சூழலில் குடிசைவாசிகளுக்கு தொலைதூரத்தில் மாற்று இடங்களை ஒதுக்கும் தமிழக அரசின் திட்டம் சரியானதாக தோன்றவில்லை.

நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆற்றங்கரையோரம் பாதுகாப்பு இல்லாமல் வாழும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவது தான் பாதுகாப்பானதும் கூட. ஆனால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் மாற்று இடம் பாதுகாப்பானதாகவும், எளிதில் வாழ்வாதாரம் தேடக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். எனவே, அடையாற்றின் கரைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு அவர்கள் ஏற்கனவே வசித்த பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவுக்குள் மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், நீர்நிலைகளில் இருந்த குடிசைகளை மிகவும் எளிதாக அகற்றிவிட்ட தமிழக அரசு,  நிகழ்கால மற்றும் கடந்த கால ஆளுங்கட்சி ஆதரவுடன் ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாட மாளிகைகளையும், வணிக நிறுவனங்களையும், கல்விக் கடைகளையும் அகற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்பதைப் போல ஏழைகளின் குடிசைகளை அகற்றிவிட்டு பணம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை பாதுகாக்க அரசு முயன்றால் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 

ஆட்சி மாற்றத்திற்கான 2016-ஐ வரவேற்போம்: பாமக

 
’’தமிழ்நாட்டை சீரழித்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் 2016 ஆம் ஆண்டை வரவேற்போம்; 2015 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம் என்ற நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள மாங்கனி அரங்கில் வரும் 31-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு  இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. முதல மைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன்  ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 தமிழ்நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.’’

அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்



மாநில அமைச்சரவையை உடனடியாக கூட்டி, 161 ஆவது பிரிவின்படி இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு ஆளுனருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன்  உள்ளிட்ட 7 தமிழர்களையும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432&ஆவது பிரிவின்படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில், அவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள் என்ற வினா எழுந்துள்ளது. அவர்களை விடுதலை செய்ய மாற்றுவழி இருக்கும் போதிலும் அதை பயன்படுத்த தமிழக அரசு தயங்குவது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், இராபர்ட் பயாஸ் ஆகிய 7 தமிழர்களுமே இராஜிவ் கொலை வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டவர்கள் தான். இவ்வழக்கில் பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை வேண்டுமென்றே திரித்து பதிவு செய்ததாக அந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் அளித்த ஒப்புதல் வாக்குமூலமே இதை நிரூபிக்கும். தவறாக தண்டிக்கப்பட்ட இவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களிலாவது அரசு கருணை காட்டியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோரில் நளினியின் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மூவரும் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருந்தனர். அவர்களின் கருணை மனுக்களை 12 ஆண்டுகளாக ஆய்வு செய்த குடியரசுத் தலைவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இதில் ஏற்பட்ட கால தாமதத்தைக் காரணம் காட்டி அவர்கள் மூவரின் தூக்கு தண்டனையை கடந்த ஆண்டு பிப்ரவரி பிப்ரவரி மாதம் ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. ஆனால், அதற்குப் பிறகும் அவர்களால் சிறையிலிருந்து மீள முடியவில்லை.

பேரறிவாளன் உட்பட இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 ஆவது பிரிவின்படி தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியது. ஆனால், மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்திய வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை குறைக்கவோ, விடுதலை செய்யவோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முட்டுக்கட்டை போட்டது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், எழுவரின் விடுதலை கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் இன்னும் தீர்ப்பளிக்கப்பட வில்லை என்ற போதிலும், இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்திருப்பதால், 7 தமிழர்களையும் 432&ஆவது பிரிவின்படி விடுதலை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பது உறுதியாகிவிட்டது.

குற்றமே செய்யாமல் தண்டிக்கப்பட்ட 7 பேரும் 25 ஆண்டுகளாக சிறை விடுப்பு கூட வழங்கப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் திரும்பப்பெற முடியாத இளமைப் பருவத்தை சிறைக் கொட்டடிகளில் இழந்து விட்டனர். ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 10 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 7 ஆண்டுகளிலும் விடுவிக்கப்படும் நிலையில், அப்பாவிகளான இவர்கள் ஆயுள் முழுவதும் அடைபட்டுக் கிடக்க வேண்டும் என சிலர் விரும்புவது என்ன மாதிரியான மனநிலை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களவைத்தேர்தலில் வாக்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காக, அதற்கு முன்பாக 7 தமிழர்களின் விடுதலை செய்வதைப் போன்று நாடகங்களை அரங்கேற்றிய தமிழக ஆட்சியாளர்கள், இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது நமது சாபக்கேடாகும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 ஆவது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்வதற்கு தான் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே தவிர, அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மற்ற அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்ள எந்த முட்டுக்கட்டையும் போடவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்கீழ், எந்த ஒரு வழக்கிலும் ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவோ, இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ ஆளுனருக்கு விரிவான அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஆளுனர் செய்ய முடியும். மத்திய அரசு புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகள், மாநில காவல்துறை விசாரித்த வழக்குகள் என்ற எந்த வித்தியாசமும் இந்த பிரிவுக்கு இல்லை. இதேவழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை இந்த பிரிவை பயன்படுத்தி தான் 2000&ஆவது ஆண்டில் குறைக்கப் பட்டது என்பதால் அதையே இதற்கான முன்னுதாரணமாக காட்ட முடியும். இப்போதைய தேவையெல்லாம்  25 ஆண்டுகளாக சிறைக்கொட்டயில் வாடிக்கொண்டிருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருணை தமிழக ஆட்சியாளர்களின் மனதில் ஊற்றெடுக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

எனவே, மாநில அமைச்சரவையை உடனடியாக கூட்டி, 161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு ஆளுனருக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன்மீது ஆளுனரை உடனடியாக முடிவெடுக்க வைத்து புத்தாண்டில் 7 தமிழர்களும் விடுதலையாவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tuesday, December 22, 2015

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ்

 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும்  கேள்விக்குறியாக்கி உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும். இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர். 2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா,  இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு போட்டித் தேர்வும்  நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தகுதித் தேர்வில் வெற்றி பெற 60% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தகுதித் தேர்வில் பங்கேற்ற 7 லட்சம் பேரில்  ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். அதன் பயனாக தகுதி மதிப்பெண்களை 55% ஆக குறைத்த தமிழகஅரசு, நியமன நடைமுறையிலும் மாற்றம் செய்தது. 

அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், தகுதிகாண்(Weightage) மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60% மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15%, 12 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 10% சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை தான் லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவை அடியோடு கலைத்திருக்கிறது.

தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் பொதுவானது. தகுதித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு ஒரே மாதிரியாக  மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தகுதிகாண் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் விடையில் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் மதிப்பீடு செய்யப்படும். இதனால் அப்போது 80% மதிப்பெண்கள் எடுப்பதே பெருஞ்சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100% மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது. 

இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 10&15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 84.84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் 3.97 லட்சம் பேர் தகுதிகாண் மதிப்பெண் வரம்புக்குள் வரக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். ஏற்கனவே 40 வயதைக் கடந்து நிரந்தர வேலையில்லாமல் தவிக்கும் இவர்களால் தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை ஆசிரியர்கள் ஆக முடியாது. 

இதற்கெல்லாம் மேலாக தகுதிகாண் மதிப்பெண் என்பது இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. தகுதிகாண் மதிப்பெண் முறை காரணமாக தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 75,000 பட்டதாரி ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, சமூக நீதியை காக்கும் வகையில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்து காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும்.’’

மழை வெள்ளத்தின் போது இஸ்லாமியர்கள் காட்டிய மனிதம் : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மிலாதுன் நபி வாழ்த்துச் செய்தி :

  ’’ இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு  வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.    

   அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்கவேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள். எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே அவர் வாழ்ந்து காட்டினார். அண்ணல் நபிகளின் போதனையை இங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தவறாமல் கடைபிடிப்பவர்கள் என்பதை  சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை&வெள்ளத்தின் போது  அவர்கள் ஆற்றிய பணியிலிருந்தே இந்த உலகம் உணர்ந்து கொண்டது. பிறர் செய்யத் தயங்கும், முகம் சுழிக்கும் பணிகளைக் கூட இன்முகத்துடன் செய்ததன் மூலம் மனிதம்  மதங்களைக் கடந்தது  என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் நிரூபித்திருக்கின்றனர். இந்த சகோதரத்துவம் தொடர வேண்டும்.

  தொல்லை கொடுப்பவர்களையும், துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு மனிதகுலத்திற்கு வேண்டும்-; எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை அன்பால் எதிர்கொண்டு, எதிரிகளையும் அரவணைக்கவேண்டும் என்ற தத்துவத்தை போதித்த அவர், அதை தமது வாழ்விலும் கடைபிடித்தார். நபிகள் நாயகம் கற்பித்த இந்த போதனைக ளையும் நம் வாழ்வில்  கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் என்று கூறி வாழ்த்துகிறேன்.’’

Monday, December 21, 2015

நானே முதல்வர் வேட்பாளர்... பா.ம.க. தலைமையிலேயே கூட்டணி என்பதில் சமரசமே கிடையாது: அன்புமணி

சென்னை: "தாமே முதல்வர் வேட்பாளர்; பா.ம.க.வே தலைமை" என்பதை ஏற்கும் தி.மு.க; அ.தி.மு.க. அல்லாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் எந்த ஒரு சமரசமுமே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தினமணி நாளேட்டுக்கு அன்புமணி நேற்று அளித்த பேட்டி ஒன்றில், மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் எப்படி உங்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் என்ற கேள்விக்கு, "கூட்டணி என்று ஏற்படும்போது அதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். யார் முதல்வர் என்பதல்ல பிரச்னை. திமுக, அதிமுகவுக்கு மாற்று ஏற்படுத்துவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்" எனக் கூறியதாக இடம்பெற்றிருந்தது.

இதனால் பா.ம.க. தன்னுடைய முதல்வர் வேட்பாளர் நிலைப்பாட்டில் இருந்து சமரசம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை அன்புமணி திட்டவட்டமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:"கூட்டணி என்று ஏற்படும்போது அதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். யார் முதல்வர் என்பதல்ல பிரச்னை. திமுக, அதிமுகவுக்கு மாற்று ஏற்படுத்துவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம் என தெரிவித்திருந்ததாக" தினமணி பேட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது முற்றிலும் தவறானது."பேசித் தீர்த்துக் கொள்ளலாம்' எனக் குறிப்பிட்டது எதை? முதல்வர் வேட்பாளர் குறித்த வினாவுக்கு நான் விடையளித்தபோது, இரு விஷயங்களில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ளத் தயாராக இல்லை.முதலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.இரண்டாவதாக, முதல்வர் வேட்பாளராக கட்சித் தலைமை என்னை ஒருமனதாக ஏற்கெனவே அறிவித்து, கடந்த 10 மாதங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவரும் நிலையில், அதில் எந்தச் சமரசமும் செய்து கொள்ள முடியாது.அதே நேரத்தில் துணை முதல்வர் பதவி, கூட்டணி ஆட்சி ஆகியவற்றுக்கு பாமக தயாராக இருக்கிறது. இது பற்றியெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நான் குறிப்பிட்டேன்.கூட்டணிக்கு நிபந்தனை என்ன? பாமகவின் தலைமையையும், அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றுக் கொள்ளும் அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறோம் என்று ராமதாஸ் பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதுதான் பாமகவின் உறுதியான நிலைப்பாடு. இதில் எவ்வித மாற்றத்துக்கும், சமரசத்துக்கும் இடமில்லை என உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Thursday, December 17, 2015

தமிழகத்திற்கு ரூ.40,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்

மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின் போது தமிழகத்தின் வெள்ள நிலைமை, அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை குறித்து பிரதமர் அவர்களிடம் விரிவாக விளக்கினார்.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்கிய அவர்,‘‘ சென்னையில் கடந்த 108 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த திசம்பர் ஒன்றாம் தேதி மட்டும் சென்னையில் 46 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால்  அடையாற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கூவம் ஆற்றிலும் பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையில் பாதிப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இரவில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை விமான நிலையம், தொடர்வண்டி பாதைகள் ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சென்னையில் அனைத்து வகை போக்குவரத்தும்  தடைபட்டது. ஒட்டுமொத்த சென்னையும் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனித் தீவாக மாறிப்போனது.

சென்னை வெள்ளம் நமக்கு இரு பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. இவ்வளவு பெரிய பேரிடரை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இல்லை. 2005 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு முழு அளவில் செயல்பட்டிருந்தால் இந்த பேரிடரை எதிர்கொண்டு சமாளித்திருக்க முடியும். பேரிடரின் போது பல்வேறு துறைகளின் பணிகளை ஒருங்கிணைப்பது தான் இந்த ஆணையத்தின் பணியாகும். ஆனால், சென்னையில் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் ஒருங்கிணைப்பே இல்லை. அதுமட்டுமின்றி சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு மழை மட்டுமே காரணம் அல்ல. சென்னையின் மிகப்பெரிய வடிகால் பகுதியாக திகழ்ந்த பள்ளிக்கரனை சதுப்பு நிலம் கடந்த பல ஆண்டுகளில் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 4500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அப்பகுதி இப்போது 500 ஹெக்டேர் ஆக சுருங்கி விட்டது. அதேபோல் சென்னையின் பெரும்பகுதி மூழ்கியதற்கு மழை காரணமல்ல. முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அடையாற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது தான் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இந்த வெள்ளத்தில் சிக்கி பல தூக்கத்திலேயே உயிரிழந்து விட்டனர்.

சென்னையில் மழை வெள்ள பேரிடரை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அவை தோல்வியடைந்தது குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதற்காக பேரிடர் மேலாண்மையில் வல்லமை பெற்ற வெளிநாட்டு வல்லுனர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இந்த விசாரணையில் தெரியவரும் அம்சங்களை அடிப்படையாக வைத்து இனிவரும் காலங்களில் பேரிடர் ஏற்படும் போது அதை சமாளிப்பது எப்படி? என்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டும்’’ என்று கூறினார். அதைக்கேட்ட பிரதமர் இத்தகைய விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தரவளித்தார். இந்த விசாரணை பிரதமரின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்திய போது, கண்டிப்பாக அத்தகைய விசாரணைக்கு ஆவண செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை குறித்தும் பிரதமரிடம் அன்புமணி இராமதாஸ் விளக்கினார். ‘‘ கடலூர் மாவட்டம் அடுத்தடுத்து பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. 2004 ஆம் ஆண்டில் சுனாமி, 2011 ஆம் ஆண்டில் தானே புயல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் இப்போது கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பொறுப்பற்ற செயல் ஆகும். 

அந்த நிறுவனத்தின் சுரங்கங்களில் தேங்கிக்கிடந்த தண்ணீர் முன்னறிவிப்பின்றி வெளியேற்றப் பட்டதால் தான் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கின. ஆண்டுக்கு ரூ.1,700 கோடி லாபம் ஈட்டும் அந்த நிறுவனம் கடலூர் மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடாமல் அம்மாவட்ட மக்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து பொறுப்பற்ற முறையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை அந்த நிறுவனமும் மேற்கொள்ள வேண்டும் என்று  அதன் நிர்வாகத்திற்கு பிரதமராகிய நீங்கள் ஆணையிட வேண்டும். 

வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும், மறுவாழ்வுப் பணி களை மேற்கொள்வதற்காகவும் சென்னை மண்டலத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி, கடலூர் மாவட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.40 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டார். அதைக்கேட்ட பிரதமர், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக கூறினார்.

மழை&வெள்ளத்தால்  போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் மட்டும் குடிமைப்பணித் தேர்வுகளை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், இந்த தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டதால் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என பிரதமர் தெரிவித்தார்.

Sunday, December 13, 2015

செம்பரம்பாக்கம் பேரழிவு: அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிக்க அரசு முயல்வதா? ராமதாஸ் கண்டனம்

 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் செம்பரம்பாக்கம்  ஏரியிலிருந்து திசம்பர் 1-ஆம் தேதி முன்னறிவிப்பின்றி அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது தான் காரணம் என்ற குற்றச்சாற்றுக்கு விளக்கமளித்து தலைமைச்செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த அறிக்கையில் உண்மை இல்லை;பொய்யும், புறம் கூறுதலும் தான் நிறைந்திருக்கின்றன.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் வழக்கத்தை விட 90% அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அவ்வாறு மழை பெய்தால் அதன் மூலம் ஏரிக்கு கூடுதலாக வரும் நீரால் பாதிப்பு ஏற்படாமல் முன்கூட்டியே ஏரியின் நீர்மட்டத்தை குறைத்திருக்க வேண்டும். அதற்கான அனுமதி கேட்டு செம்பரம்பாக்கம் ஏரியை நிர்வகிக்கும் பொறியாளர்கள் நவம்பர் 26 ஆம் தேதியே பொதுப்பணித்துறை செயலருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அவரும் தலைமைச் செயலருக்கு தகவல் அனுப்பியுள்ளார். ஆனால், அதன் மீது முதல்வரும், தலைமைச்செயலரும் நடவடிக்கை எடுக்காததால் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து நிலைமை மோசமானது என்பது தான் அரசு மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாற்று ஆகும். இதற்கு பதிலளித்துள்ள தலைமைச்செயலாளர் ஞானதேசிகன், திசம்பர் 1ஆம் தேதி 50 செ.மீ. மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கவில்லை; அதனால் தான் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.  முன்னெச்சரிக்கை கருதி திசம்பர் 26 ஆம் தேதி பொறியாளர் அனுப்பிய அறிவுரையை 5 நாட்களாக கிடப்பில் போட்டுவிட்டு, வானிலை மையம் முன்னெச்சரிக்கை செய்யவில்லை என காரணம் கூறி தப்பிக்க முயல்வது  தலைமைச் செயலாளர் பதவியில் உள்ளவருக்கு அழகா? என்பதை ஞானதேசிகன் தான் விளக்க வேண்டும்.

அடுத்ததாக செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி ஒலிப்பெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஞானதேசிகன் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அறிக்கையில் அவர் கூறியுள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. அறிக்கையின் 6-ஆவது பக்கத்தில் திசம்பர் 1 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும், 12.00 மணிக்கு 12 ஆயிரம் கன அடி வீதமும், பிற்பகல் 2.00 மணிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டதாக  கூறப்பட்டுள்ளது.

ஆனால், அடுத்த பக்கத்தில், சென்னை ஆட்சியர் வெள்ள எச்சரிக்கை வெளியிட்டது பற்றி விளக்கும் போது, திசம்பர் 1-ஆம் தேதி காலை 11.20 மணிக்கு 7500 கனஅடி வீதமும்,  பிற்பகல் 1.32 மணிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளார். இந்த இரு புள்ளி விவரங்களில் எது உண்மை? என்பதை தமிழக அரசு தான் விளக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட எந்த பகுதியிலும் திசம்பர் 1ஆம் தேதி இரவு வரை ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கப்படவில்லை; தலைமைச் செயலர் கூறியவாறு எந்த பகுதியிலும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

திசம்பர் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 29,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டதாகவும், அடுத்த நாள் மாலை 3 மணி வரை அதேநிலை பராமரிக்கப் பட்டதாகவும் தலைமைச்செயலாளர் கூறியிருப்பது உண்மையல்ல. ஒன்றாம் தேதி இரவு ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 33,500 கன அடியாக உயர்த்தப்பட்டதாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. 

அதுமட்டுமின்றி, ஒரு கட்டத்தில் நீர்மட்டம் அதிகரித்து ஏரி நிரம்பி வழியத் தொடங்கியதாக பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.  அடையாறு வெள்ளத்தில் சைதாப்பேட்டை பாலம் மூழ்கி விட்டது; ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலத்தின் இரு ஓரங்களும் மூழ்கி விட்டன. வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்தால் தான் இது சாத்தியமாகும். அடையாற்றுக்கு வேறு ஆதாரங்களிலிருந்து தண்ணீர் வந்ததாக தலைமைச்செயலர் கூறுவது உண்மை தான். ஆனால், ஆற்றில் வந்த ஒரு லட்சம் கனஅடியில் பெரும்பகுதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து  வெளியேறியது தான் என்பதை மறுக்க முடியாது. எனினும், இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு ஏரியிலிருந்து 29,000 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டதாக தலைமைச்செயலர் ஞானதேசிகன் கூறியிருக்கிறார். இதை எந்த வகையான பொய்யில் சேர்ப்பது எனத் தெரியவில்லை.

இன்னொரு அபாண்டத்தையும் தலைமைச் செயலாளர் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நகருக்குள் நுழையவில்லை; மாறாக அடையாறு ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஓடியதால், சென்னையில் பெய்த மழை நீர் அடையாற்றில் கலக்க முடியாமல் போனதால் தான் நகரில் வெள்ளம் ஏற்பட்டது என்பது தான் தலைமைச்செயலரின் விளக்கம். இதுவும் உண்மைக்கு மாறான தகவல் தான். அடையாற்றில் இரவு நேரத்தில் அதிக நீர் திறக்கப்பட்டதால், கடலுக்கு உரிய வழக்கத்தின்படி, இரவு நேரத்தில் கடல் தண்ணீரை ஈர்த்துக் கொள்ளாமல் எதிர்த்து தள்ளியது. இதனால் தான் சென்னையின் பல இடங்களில் அடையாற்று நீர் ஊருக்குள் புகுந்தது. அடையாற்றுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத தேனாம்பேட்டை வரைக்கும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது என்பதிலிருந்தே அடையாற்று நீர் எந்த அளவுக்கு நகருக்குள்  புகுந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதை மறைத்து விட்டு அடையாற்று வெள்ளம் சென்னைக்குள் நுழையவில்லை என்பது முழுப் பூசணிக்காயை கைப்பிடி சோற்றில் மறைக்கும் செயல் என்பதைத் தவிர வேறில்லை.

இதற்கெல்லாம் மேலாக, ஏரியிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடுவது குறித்து தம்மிடமோ, பொதுப்பணித்துறை செயலரிடமோ செம்பரம்பாக்கம் ஏரி அதிகாரிகள் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக தம் மீதும், முதலமைச்சர் மீதும் கூறப்படும் குற்றச்சாற்றுகள் தீய நோக்கம் கொண்டவை என்றும் ஞானதேசிகன் கூறியுள்ளார். ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் அதன் பொறியாளருக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் எழுதப்படாத சட்டத்தின்படி, முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி அணுவும் அசையமுடியாது என்பது தானே உண்மை. வாய்க்காலில் தண்ணீர் திறப்பது குறித்த அறிவிப்பு கூட முதலமைச்சரின்  பெயரில் தானே வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது ஏரி திறப்பு குறித்து மேலிட அனுமதி தேவையில்லை என அவர் கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? ஒருவேளை இது உண்மை என்றால் அதுகுறித்து விளக்கமளிக்க 4 நாட்கள் தாமதமானது ஏன்? என்பன உள்ளிட்ட வினாக்கள் எழுகின்றன. ஆனால், அனைத்தையும் மூடி மறைக்கும் அரசிடமிருந்து இவற்றுக்கு பதில் கிடைக்காது.

சென்னையில் ஏற்பட்ட பேரழிவுக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மிக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதும், முன்கூட்டியே படிப்படியாக தண்ணீர் திறந்து விடும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் யோசனைக்கு தலைமைச் செயலர் குறித்த காலத்தில் அனுமதி வழங்காததும் தான் காரணம் என்று மீண்டும் குற்றஞ்சாற்றுகிறேன். இந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமானால் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை காண வேண்டியது அவசியமாகும்....

1. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்க பொறியாளர் சார்பில் பொதுப்பணித் துறை செயலரிடம் அனுமதி கோரப்பட்டதா... இல்லையா? இதுகுறித்த கோப்பை தலைமைச் செயலரின் ஒப்புதலுக்காக பொதுப்பணித்துறை செயலாளர் அனுப்பி வைத்தாரா இல்லையா?

2. வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டதா? வெள்ளம் வருவதற்கு முன்பே அப்பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

3. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 29,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட வில்லை என்பது உண்மையா?

4. அடையாற்றிலிருந்து சென்னை மாநகருக்குள் வெள்ளம் புகுந்ததா... இல்லையா?

5. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதை நவம்பர் இறுதியிலேயே முறைப்படுத்தி இருந்தால் வெள்ளத்தை தவிர்த்திருக்க முடியுமா?   

 இந்த வினாக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் விளக்கங்களை ஏற்க முடியாது. நீதிபதிகளைக் கொண்டும்,  நீர் மேலாண்மை வல்லுனர்களைக் கொண்டும் விசாரணை நடத்துவதன் மூலம் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும். எனவே, கட்டுக்கதைகளை கட்டுரைகளாக எழுதி விளக்கம் என்ற பெயரில் வெளியிடுவதை விடுத்து, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் வெளிமாநில நீர் மேலாண்மை வல்லுனர்கள் அடங்கிய விசாரணை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Friday, December 11, 2015

வெள்ள பாதிப்புக்காக எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி வழங்குவதாக அன்புமணி அறிவிப்பு

வெள்ள பாதிப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தை ‘‘கடுமையான பாதிப்புகள்’’ ஏற்பட்ட மாநிலம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கலாம் என்று நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதனடிப்படையில், எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி ரூபாய் செலவிடவுள்ளேன்.
நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்
அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “மழை வெள்ளத்தால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க பசுமைத் தாயகம் சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வட்டங்களிலும் 12.12.2015 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2015 ( ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணி முதல் மாலை வரை நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தப்படவுள்ளது.
மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு என்று அமைக்கப்பட்டுள்ள முகாமை நானும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியும் தொடங்கி வைக்க உள்ளோம். இதையடுத்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தப்படும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்ட விவகாரம்: வழக்கு தொடர பாமக முடிவு

செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது தொடர்பாக பாமக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அக்கட்சியின் இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

சென்னை தியாகராய நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக சார்பில் நலத்திட்ட உதவிகளை அக்கட்சியின் இளைஞரணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தான் சென்னையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிதி போதாது எனவும், மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியும் போதாது என்றும் கூறினார்.

மேலும், வெள்ள பாதிப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அனைத்து கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

தற்போது தமிழக அரசு அமைத்துள்ள சுகாதார முகாம்கள் போதிய அளவில் இல்லை என்பதால் கூடுதலாக முகாம்களை திறக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

சென்னையில் 200 வட்டங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்: அன்புமணி ராமதாஸ்

 


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் 200 வட்டங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளாலும், தேங்கிக் கிடக்கும் தண்ணீராலும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படக்கூடும்.

சென்னையில் தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுக்க பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் துணை அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் முதல்கட்ட மழை பெய்து ஓய்ந்தவுடன், பாமக நிறுவனர் ராமதாஸால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பல இடங்களில் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் பயனடைந்தனர். மூன்றாம் கட்ட மழையால் சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் ஏற்படுவதைத் தடுக்க சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக பசுமைத் தாயகம் சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வட்டங்களில், ஒரு வட்டத்திற்கு ஓர் இடம் என்ற அடிப்படையில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. நாளையும், நாளை மறுநாளும் (12.12.2015, 13.12.2015) காலை 8.00 மணி முதல் மாலை வரை நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் செயல்படும். 

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை நாளை காலை நானும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி அவர்களும் தொடங்கி வைக்க உள்ளோம். இம்முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைவார்கள். தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்திலும் இத்தகைய நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tuesday, December 8, 2015

ஆயிரம் விளக்கு பகுதியில் பாமக நிவாரண உதவி

thanks-Nakkheeran.in


சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தாமஸ் ரோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தியும் இன்று (செவ்வாய்) வழங்கினர்.

கடலூரில் நிவாரண உதவிகளை வழங்கிய அன்புமணி இராமதாஸ்

Thanks-Nakkheeran.in


கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. எம்பியும், இளைஞரணித் தலைவருமான அன்புமணி இராமதாஸ் இன்று (08.12.2015) நிவாரண உதவிகளை வழங்கினார்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி, காட்டுக்கூடலூர் பகுதியில் (படங்கள் 2,3,4) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்புமணி இராமதாஸ் இன்று (08.12.2015) நிவாரண உதவிகளை வழங்கினார்.

Friday, December 4, 2015

மீட்பு, நிவாரண பணி செய்ய துப்பில்லாத அரசு... எரிமலையாக வெடிக்கும் மக்கள் கோபம்.... ராமதாஸ் காட்டம்

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணப் பொருட்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டுவது என்பது மிகவும் மட்டமான அரசியல் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான இராதாகிருஷ்ணன் நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்ற அமைச்சர்களை விரட்டியடித்து பொதுமக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் பெயரளவுக்குக் கூட மேற்கொள்ளப்படாதது தான் இதற்குக் காரணம் ஆகும்.சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதி என்றாலும் அங்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் அந்த தொகுதியில் மிக மோசமான அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், பாதிப்புகளை சரி செய்யவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன், பசியில் தவிக்கும் மக்களுக்கு உணவு கூட வழங்கப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் டி.இராஜு, கோகுல இந்திரா ஆகியோர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று அங்கு சென்றனர். அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு, அவற்றை போக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சர்களோ ஆடம்பரமாக ஏராளமான மகிழுந்துகள் புடைசூழ தொகுதிக்கு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, ஜெயலலிதா வழியில் நடப்பதாகக் கூறிக் கொள்ளும் அவர்கள், ஜெயலலிதாவைப் போலவே மகிழுந்தை விட்டு இறங்காமல் பாதிப்புகளை பார்வையிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களையும் மரியாதைக்குறைவாக நடத்தியுள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அமைச்சர்களின் மகிழுந்துகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போதாவது மக்களின் உணர்வுகளை அமைச்சர்களும் அவர்களுடன் சென்றவர்களும் மதித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அமைச்சர்களுடன் சென்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் மக்களை மிரட்டி பணியவைக்க முயன்றுள்ளார்.இதனால் கொதித்துப் போன மக்கள் வெற்றிவேலை அடித்து விரட்டியுள்ளனர். அதன்பிறகு மகிழுந்தில் இருந்த அமைச்சர்களை கீழே இறங்க வைத்ததுடன், வெள்ள நீரில் நடந்து சென்று பாதிப்புகளை பார்க்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். ஆனால், சிறிது தூரம் மட்டுமே நடந்து சென்ற நத்தம் விஸ்வநாதனும் மற்ற அமைச்சர்களும் தங்களால் வெள்ள நீரில் நடக்க முடியாது என்று கூறி மகிழுந்தில் ஏறிக்கொண்டனர்.இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மக்கள் அனைத்து அமைச்சர்களையும் விரட்டி அடித்தனர். வெள்ள நீரில் சிறிது தூரம் நடந்து செல்லவே அமைச்சர்களுக்கு அருவறுப்பாக இருந்தால், அவர்களின் இதய தெய்வத்தை சட்டமன்ற உறுப்பினராகவும், முதலமைச்சராகவும் ஆக்கிய மக்கள் அந்த நீரிலேயே கடந்த ஐந்து நாட்களாக உணவு தண்ணீரின்றி வாழ்கிறார்களே, அவர்களின் அவல நிலையை என்னவென்று சொல்வது?இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது, ஒவ்வொரு வீடாக நடந்து சென்று கெஞ்சி வாக்குக் கேட்ட அமைச்சர்கள், இப்போது உதவி தேவைப்படும் நேரத்தில் உதாசீனப்படுத்தியதால் தான் அவர்களுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்துள்ளனர். இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. ஒட்டுமொத்த சென்னையிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளிலும் மக்கள் கோபம் எரிமலையாக கொதித்துக் கொண்டிருக்கிறது.மற்ற பகுதிகளுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லாததால் மக்களின் கோபத்திலிருந்து தப்பித்துள்ளனர். வாய்ப்பு கிடைக்கும் போது ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் கோபத்தை காட்டுவர் என்பது உறுதி.வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அலட்சியம் காட்டும் அரசும், ஆளுங்கட்சியும் விளம்பரம் தேடுவதில் மட்டும் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பில் உணவு, குடிநீர், பால், பாய், போர்வை போன்றவை வழங்கப்படவில்லை. தொண்டு நிறுவனங்கள் தான் இவற்றை வழங்கி வருகின்றன.ஆனால், ஆளுங்கட்சியினரோ இதிலும் விளம்பரம் தேடும் நோக்குடன் அனைத்து பொருட்கள் மீதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். உதவிப் பொருட்களுடன் சென்னைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மாநகர எல்லையில் தடுத்து நிறுத்தும் ஆளுங்கட்சியினர், உதவிப் பொருட்கள் மீது ஜெயலலிதாவின் உருவப்படங்களை ஒட்டி அனுப்புகின்றனர். ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்படாத உணவுப் பொட்டலங்களை பொதுமக்களுக்கு வினியோகிக்க ஆளுங்கட்சியினர் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான உணவுப் பொட்டலங்கள் குப்பையில் கொட்டப்பட்டன. குறிப்பாக ஜெயலலிதாவின் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மற்ற கட்சிகளின் சார்பில் உதவி வழங்க அனுமதிக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு துப்பில்லாத அரசும், ஆளுங்கட்சியினரும் மற்றவர்கள் வழங்கும் உதவிப் பொருட்கள் மீதும் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி விளம்பரம் தேட முயல்வது மிகவும் மட்டமான அரசியல் ஆகும்.மனிதநேயமுள்ள எந்த அரசும் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளாது. இனியாவது இத்தகைய போக்கை கைவிட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு சார்பில் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவதுடன், மற்றவர்களும் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ளூர் பேரூந்துகள் மட்டும் இலவசமாக இயக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தொலைதூர பேரூந்துகளும் இலவசமாக இயக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நிவாரணப் பணிகளுக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை குறைந்தபட்சம் அடுத்த இரு வாரங்களுக்கு மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

Thursday, December 3, 2015

7 தமிழர்களை மீட்க அரசியல் ரீதியான முயற்சிகளை அரசு தொடங்க வேண்டும்! : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆதாரமின்றி தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களின் தண்டனையை குறைத்து விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை; மத்திய அரசுக்கு தான் இருக்கிறது என உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. அப்பாவி தமிழர்கள் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்தீர்ப்பு பெரும் ஏமாற்றமளிக்கிறது.

இராஜீவ் கொலை வழக்கில் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதன்பின் குறைக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன்,  ஜெயக்குமார், இராபர்ட் பயாஸ் ஆகிய எழுவரும் ஏதோ ஒரு வகையில் தவறாக தண்டிக்கப்பட்டவர்கள் தான். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதியதால் தான் அவர் தண்டிக்கப்பட்டதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் வெளிப்படையாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு பல மாதங்களுக்கு அவர் விண்ணப்பம் அனுப்பினார். ஆனால், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இராஜீவ் கொலை தொடர்பான சதி தம்மைத் தவிர யாருக்கும் தெரியாது என மத்திய புலனாய்வுப் பிரிவினர் ஒட்டுக்கேட்டு பதிவு செய்த உரையாடலில் சிவராசன் கூறியிருக்கிறார். அப்படி இருக்கும் போது கொலைச்சதி குறித்து எதுவுமே தெரியாதவர்கள் எந்த அடிப்படையில் தண்டிக்கப்பட்டார்கள் என்ற வினாவுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

வழக்கின் தன்மை குறித்து ஒதுக்கிவைத்து விட்டு பார்த்தாலும் இவர்கள் விடுதலை செய்யப்பட  வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 1991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். அவர்களை இனியும் சிறையில் அடைத்து வைப்பது நியாயமல்ல என்பதால் தான், அவர்களின் விடுதலை குறித்து இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432ஆவது பிரிவின்படி தமிழக அரசு முடிவு செய்யலாம் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அச்சட்டப்பிரிவில் மத்திய அரசுடன் ஆலோசனை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதன் பொருள் ஆலோசனை மட்டும் தானா... அல்லது ஒப்புதல்  பெற வேண்டுமா? என்பது தான் இந்த வழக்கில் விடை காணப்பட வேண்டிய வினாவாக இருந்து வந்தது.

இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு, மத்திய அரசின் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உண்டு; எனவே 432 ஆவது பிரிவின்படி ஒருவரை விடுவிப்பது குறித்து மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தான் மாநில அரசு அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.  ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலத்தையும் தாண்டி 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்ட நிலையில், அவர்களை விடுவிப்பது தான் மனித நேயமாக இருக்குமே தவிர, சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளைக் காரணம் காட்டி, 7 தமிழர்களும் ஆயுள் முழுவதும் சிறையில் அடைபட்டு கிடக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்ப்பது சரியல்ல.

7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கில், அவர்களை விடுதலை செய்வதற்கான வழிமுறை குறித்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் முடிவு எடுத்திருந்தால் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்காது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சட்டத்திற்குட்பட்டு 7 பேர் விடுதலை குறித்த பரிந்துரையை தமிழக அரசு முன்வைத்திருப்பதால் அதை ஏற்றே தீர வேண்டும் என்ற அழுத்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால், 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக எடுத்தேன்... கவிழ்த்தேன் அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடித்ததால் இது இரு அரசுகளுக்கும் இடையிலான கவுரவப் பிரச்சினையாக மாறி விட்டது.

உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்புக்குப் பிறகு சட்ட அடிப்படையிலான மேல் நடவடிக்கைகள்  உடனடியாக பயனளிக்காது என்றே தோன்றுகிறது. 7 தமிழர்களின் விடுதலை குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுத்து அதன் மூலம் நமது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வது தான் அறிவார்ந்த செயலாக இருக்கும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் 7 தமிழர்கள் விடுதலை குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தில்லி சென்று பிரதமர்  நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து தீர்மானத்தின் நகலை ஒப்படைத்து 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும். 7 தமிழர் நலனில் அக்கறையிருந்தால் இதை தமிழக அரசு செய்ய வேண்டும்.’’

Saturday, November 28, 2015

தொலைநோக்கு திட்டம் - 2023 என்ன ஆனது? வெள்ளை அறிக்கை வேண்டும் : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டம் (விஷன்) &2023 வெளியிடப்பட்டு 45 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், தொலை நோக்குத் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான முதல் அடியைக் கூட தமிழக அரசு எடுத்து வைக்கவில்லை. வெற்று அறிவிப்புகளின் மூலம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

ஒளிமயமான தமிழகத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கப் போவதாக கூறி தொலைநோக்குத் திட்டம்&2023 என்ற வளர்ச்சித் திட்ட அறிக்கையை 22.03.2012 அன்று வெளியிட்டார். இத்திட்டம் செயல்படுத் தப்பட்டால் 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வறுமையே இருக்காது; வளமையும், செழுமையும் பொங்கி வழியும் என்றெல்லாம் ஜெயலலிதா முழக்கமிட்டார். இந்த வெற்று அறிவிப்புகளை எல்லாம் தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ இவற்றையெல்லாம் ஜெயலலிதா மறந்து விட்டார். இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள பணிகள் குறித்த இரண்டாம் கட்ட அறிக்கையை 22.02.2014 அன்று வெளியிட்டதைத் தவிர இதுவரை வேறு எந்த நடவடிக்கையையும் ஜெயலலிதா மேற்கொள்ளவில்லை.
அதனால், தொலைநோக்குத் திட்டம் &2023 இலக்குகளை எட்டுவதில் சிறிய முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. உதாரணமாக...

*   தமிழ்நாடு அடுத்த 11 ஆண்டுகளுக்கு தலா 11% வளர்ச்சியை எட்டும். 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருவாய் ரூ.6.50 லட்சமாக இருக்கும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 5 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. அதேபோல், தனிநபர் வருமானம் நடப்பாண்டு இறுதிக்குள் ரூ.2.16 லட்சமாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியான ரூ. 1 லட்சத்தைக் கூட தாண்டவில்லை.

*    எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் வகையில் அனைவருக்கும் பயனுள்ள வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், 2012 ஆம் ஆண்டில் 73 லட்சமாக இருந்த வேலையில்லாத இளைஞர்கள் எண்ணிக்கை இப்போது 86 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

*   குழந்தைகள் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் உள்ளிட்ட சுகாதாரக் குறியீடுகள் சிறப்பாக மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக தருமபுரி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொத்துக்கொத்தாக குழந்தைகள் இறந்த கொடுமை நடந்தது.

*    மின்சாரம், போக்குவரத்து, கல்வி, பாசனம், துறைமுகம், விமானநிலையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.6 ஆயிரம் கோடி கூட முதலீடு செய்யப்படவில்லை. இதனால் உட்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் இந்தியாவில் 17&ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

*   ஆரோக்கியமான முதலீட்டு சூழல் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாக கூறப்பட்ட போதிலும் ஒரு தொழிற்சாலைக்கு கூட இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

*   கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தமிழகம் அறிவுசார் மையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் ஏலத்தில் விடப்படும் அவலம் தான் ஏற்பட்டிருக்கிறது.

*   மனித வளத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டது. ஆனால், பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற அளவுக்குத் தான் மனித வளம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

*   பாரம்பரிய கட்டிடக் கலையும், சூழலியலும் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

*   இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாக்குறுதி எந்தளவுக்கு காப்பாற்றப் பட்டது என்பதற்கு கடலூர், சென்னை மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தான் சாட்சி.

*   அரசு நிர்வாக அமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மாறாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களை நியமித்து தகவல் ஆணையம் முடக்கப்பட்டிருக்கிறது. லோக் அயுக்தா, பொது சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை கொண்டு வர முடியாது என தமிழக அரசே திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

தொலைநோக்குத் திட்டம் &2023ல் 10 வகையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அவற்றை 2023 ஆம் ஆண்டிற்குள் எட்ட வேண்டும் என்பது தான் தொலைநோக்குத் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இலக்குகளை எட்டுவதில் கண்ணுக்குத் தெரிந்த முன்னேற்றம் எட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இலக்குகளை எட்ட நடவடிக்கைகள் எடுக்காமல், தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்வதாகக் கூறி பொது மக்களை முட்டாள்களாக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நான்காண்டு ஆட்சி... நாலாபுற வளர்ச்சி என்று கூறும் தமிழக அரசு, தொலைநோக்குத் திட்டம் &2023 இலக்குகளை எட்டுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்பதை சவாலாகவே முன்வைக்கிறேன்.’’

Thursday, November 26, 2015

மது விலக்கு: நிதிஷ்குமாரின் மக்கள் அக்கறை ஜெயலலிதாவுக்கும் வருமா? ராமதாஸ்

 
மது விலக்கு, நிதிஷ்குமாரின் மக்கள் அக்கறை ஜெயலலிதாவுக்கும் வருமா? என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிகார் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாளிலிருந்து  முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். பிகார் மாநில மக்கள் நலனில் அக்கறை கொண்டு இம்முடிவை எடுத்த அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், நேற்று நடைபெற்ற  மதுவிலக்கு நாள் கொண்டாட்டத்தின் போது மக்கள் மனம் குளிரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ‘‘பிகாரில் மதுவால் பெரும் சீரழிவு ஏற்படுகிறது; குடும்ப வன்முறை அதிகரித்து விட்டது; அடித்தட்டு மக்கள் தங்களின் வருவாயை குடிப்பதற்கே செலவிடுவதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குடும்ப அமைதி ஏற்படும். மதுவுக்காக செலவிடப்படும்  நிதியை சேமித்து குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்துக்கு செலவிட முடியும்’’ என்று நிதிஷ்குமார் கூறியிருக்கிறார். மக்கள் நலனில் அவர் கொண்டிருக்கும் அக்கறையை அவரது உரை காட்டுகிறது.

மதுவுக்கு எதிராக தமிழகத்தில் நடப்பது போன்ற வலிமையான போராட்டங்கள் பிகார் மாநிலத்தில் நடைபெறவில்லை. ஆனாலும், நிதிஷ்குமார் தாமாக முன்வந்து மதுவிலக்கு வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றுகிறார். ஒரு முதல்வர் மக்களை எப்படி நேசிக்க வேண்டும், அவரது தொலைநோக்குப் பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு நிதிஷ்குமார் வாழும் உதாரணமாக திகழ்கிறார். அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை சற்று கூர்ந்து கவனியுங்கள். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களால் 34 ஆண்டுகளுக்கு தொடங்கப்பட்ட போராட்டம் தமிழ்நாட்டில் இப்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. பிகாரில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு என்னென்ன நியாயங்கள் உள்ளனவோ, அதைவிட ஆயிரம் மடங்கு நியாயங்கள் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு சாதகமாக உள்ளன.

4 வயது குழந்தை மது அருந்துவது, பெண்கள் மது அருந்திவிட்டு பொது இடங்களில் தகராறு செய்வது, முதல்முறையாக மது அருந்துபவர்களின் சராசரி வயது முப்பதிலிருந்து 13 ஆக குறைந்தது,  மதுவால் ஆண்டுக்கு 2 லட்சம் அப்பாவி மக்கள் உயிரிழப்பது, ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள் உருவாவது, பள்ளியில் பலகைகளை உடைத்து விற்று, அந்த காசில் மது அருந்தும் அவலநிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டது, இதற்கெல்லாம் மேலாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள  திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்த 11 ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்தி மயங்கி விழுந்தது என மதுவால் ஏற்படும் சீரழிவுகள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் முழு மதுவிலக்கு கோரிக்கையை ஏற்பதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனையை 25% அதிகரிக்க வேண்டும், எந்த திருநாள் வந்தாலும் அந்த நாளில் சில நூறு கோடிகளுக்கு கூடுதலாக  மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கும் தமிழக அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும்?

ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜூலை மாதத்தில் அளித்த வாக்குறுதியை நவம்பர் மாதத்தில் நிதிஷ்குமார் நிறைவேற்றிவிட்டார்.ஆனால், தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டு, அதன்பின் 4 முறை புதுப்பிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் மத்தியில் எழுந்த எழுச்சியைப் பார்த்து அந்த வாக்குறுதியை மீண்டும் தூசு தட்டி எடுத்து ஏமாற்றுவதற்கான நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பிகாரிலும், கேரளத்திலும் மக்கள் நலனில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருப்பதால் அவர்கள் மதுவை அழிக்கிறார்கள்.... ஆனால், ஆள்பவர்களும், ஆண்டவர்களும் மது ஆலைகளை நடத்தும் தமிழகத்தில் மக்கள் உழைத்து ஈட்டும் பணத்தின் மீது தான் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருப்பதால், மதுவைக் கொடுத்து மக்களை அழிக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஒருவேளை தமிழகத்தை ஆட்சி செய்யும் ஜெயலலிதா அவர்களுக்கு மக்கள் நலனில் சிறிதளவேனும் அக்கறை இருந்தால் தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றும் வகையில் உடனடியாக மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஏற்கனவே நாங்கள் வாக்குறுதி அளித்தவாறு எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைந்தவுடன் முதல் நாள்... முதல் கையெழுத்து முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவில் இடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Wednesday, November 25, 2015

சபரிமலையில் தமிழக அரசு சார்பில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும்! : அன்புமணி



பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை
’’தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், சபரிமலை புனிதப் பயணத்தின் போது அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் கணக்கில் அடங்காதவை. 

கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விரதமிருந்த பிறகு இவர்கள் கேரள மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி திரும்புவர். இந்த பக்தர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கடமை ஆகும்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசு செய்திருக்கும் போதிலும், கோடிக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் செல்வதால் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்காத நிலை ஏற்படுக்கிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையை மாற்றி சபரிமலை பயணம் சுகமான அனுபவமாக மாற்ற சில திட்டங்களைத் தயாரித்துள்ள கேரளம் அதற்கு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய அரசுகளின் ஒத்துழைப்பைக் கோரியிருக்கிறது. பக்தர்களுக்கு வசதிகளை செய்து தரும் கடமையையும்,  விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் கேரளம் முன்வைத்துள்ள கோரிக்கையாகும்.

தென் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் இளைப்பாற பொதுவான வசதிகளை செய்வதற்கு பதிலாக மாநில வாரியாக வசதிகளை செய்து கொடுத்து, அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்கலாம் என்பது தான் கேரளத்தின் திட்டமாகும். அதற்காக சபரிமலைக்கு செல்லும் வழியில்  நிலக்கல் என்ற இடத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய அனைத்து மாநிலங்களுக்கும் தலா 5 ஏக்கர் நிலத்தை கேரள அரசு ஒதுக்கியிருக்கிறது. 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அந்தந்த மாநில அரசுகள் சமுதாயக் கூடங்களை கட்டினால், அவற்றில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் எளிதாக தங்கி இளைப்பாறி செல்ல முடியும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதேபோல், சென்னை, பம்பா ஆறு, சன்னிதானம்  உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதேனும் அவசரத் தேவை என்றாலோ, சிக்கல் என்றாலோ உடனடி தகவல் பரிமாற்றம் செய்து, தேவையான உதவிகளை பெற முடியும் என்பது இதன் இன்னொரு நோக்கமாகும்.

கேரள அரசின் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள தெலுங்கானா அரசு, நிலக்கல் பகுதியில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொண்டது. அங்கு பக்தர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாயக் கூடங்களை அமைப்பது, கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை தெலுங்கானா அரசு மேற்கொள்ள உள்ளது.

 தமிழக அரசும் கேரள அரசால் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர்    நிலத்தை பெற்றுக் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களுக்காக சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட  வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, பக்தர்கள் தாங்கள் பயன்படுத்திய ஆடை உள்ளிட்ட உடமைகளை பம்பை ஆற்றில் விட்டு வர வேண்டும் என்பது தவறான நம்பிக்கை என்பதாலும், இது தண்டனைக்குரிய குற்றம் என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பதாலும் அது குறித்த விழிப்புணர்வையும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களிடம் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

Tuesday, November 24, 2015

மாணவ சமுதாயத்தைக் காப்பாற்ற மதுவிலக்கை நடைமுறைப்படுத்துக!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 11 ஆம் வகுப்பு மாணவிகள் 7 பேர் வகுப்பறையில் மது குடித்ததாக வெளியாகியுள்ள செய்தி  மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து மாணவ சமுதாயத்தின் சீரழிவுக்கு வழிவகுத்த அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், பள்ளிக்கூடத்திற்கு காலை 8.00 மணிக்கே வந்த இந்த மாணவிகள் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து குடித்துள்ளனர். இவர்களில் 2 மாணவிகள் தான் மது வாங்கி வந்து மற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர். மது குடித்த மாணவிகளில் சிலர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். 

இதை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியை 7 மாணவிகளையும் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளார். அவர்களில்  4 மாணவிகளின் பெற்றோரை அழைத்து மாற்றுச்சான்றிதழ்களையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இத்தகைய மது அருந்தும் நிகழ்வுகள் நடப்பது இது முதல் முறையல்ல. திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் அண்மையில் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். மாணவ சமுதாயத்தின் சீரழிவுக்கு இவை வெட்கப்பட வேண்டிய உதாரணங் களாகும்.

ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் அளவுக்கு துணிந்திருக்கின்றனர் என்றால் அதற்கான புறச்சூழல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று தான் பொருள். தமிழகத்தில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு மதுக்கடை திறக்கக்கூடாது என்று விதிகளில் கூறப்பட்டிருந்தாலும், அதை செயல்படுத்த வேண்டிய அரசே, அந்த விதியை மீறி பள்ளிகளுக்கு அருகில் மதுக்கடைகளை திறக்கிறது. கைக்கெட்டும் தொலைவில் மது தாராளமாக கிடைப்பது தான் மாணவ, மாணவியர் மதுப் பழக்கத்திற்கு ஆளாவதற்கு முதன்மைக் காரணமாகும்.

தமிழகத்தில் மதுக்கடைகள் காலை 10.00 மணிக்குத் தான் திறக்கப்பட வேண்டும். ஆனால், காலை 08.00 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு வரும் போதே மது பாட்டில்களை வாங்கி வந்துள்ளனர். அவர்கள் முதல் நாளே மதுவை வாங்கி வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் நிகழ்வன்று காலையில் தான் வாங்கியிருக்க வேண்டும். அப்படியானால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே அரசு மதுக்கடைகளிலோ, வேறு இடங்களிலோ மது விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 21 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு மட்டும் தான் மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். 

இவ்விதி முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி பா.ம.க. தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது,‘‘ மதுக்கடைகளில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்க மாட்டோம்; தேவைப்பட்டால் மது வாங்க வருபவர்களிடம் வயது சான்றை கோருவோம்’’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்து மூலம் உத்தரவாதம் அளித்தது. இத்தகைய சூழலில் 15 வயது மாணவிகளுக்கு மது விற்பனை செய்யப்பட்டது கடுமையான விதி மீறல் ஆகும்.

வகுப்பறையில் மாணவிகள் மது அருந்தியது பெரும் தவறு என்பதில் அய்யமில்லை. பள்ளியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும், இனியும் பள்ளியில் மது அருந்தும் துணிச்சல் வேறு யாருக்கும் வந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சம்பந்தப்பட்ட மாணவிகளை பள்ளியிலிருந்து நீக்க தலைமை ஆசிரியர் முடிவு செய்ததையும் தவறாக பார்க்க முடியாது. ஆனால், அவ்வாறு செய்வதன் மூலம் இரு வகையான மோசமான விளைவுகள் ஏற்படும். முதலாவதாக வகுப்பறையில் மது அருந்தியது மாணவிகளின் குற்றம் என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம், சட்டவிரோதமாக அவர்களுக்கு மது கிடைக்க காரணமாக இருந்த மதுக்கடை விற்பனையாளர் முதல் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் வரை அனைவரின் கடமை மீறலும் மூடி மறைக்கப்படுகிறது. இது ஆபத்தானதாகும்.

இரண்டாவதாக வகுப்பறையில் மது அருந்திய மாணவிகளை குற்றவாளிகளாக பார்க்கக்கூடாது; மாறாக மதுவால் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்க வேண்டும். அவர்களை பள்ளியிலிருந்து நீக்கினால் அவர்கள் இதையே காரணமாக வைத்து இன்னும் அதிகமாக மதுவுக்கு அடிமையாகும் ஆபத்துள்ளது. பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு வேறு பணிகள் இருக்காது என்பதால் அவர்கள்  மது உள்ளிட்ட தவறான வழிகளில் செல்ல அதிக நேரம் கிடைக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, ஒரு மாணவரை பள்ளியிலிருந்து நீக்குவது தண்டனை அல்ல... எதிர்காலத்தை சீரழிக்கும் செயல். மது அருந்துவதால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை விட கல்வி மறுக்கப்படுவதால் அதிக பாதிப்பு ஏற்படும்.


எனவே, வகுப்பறையில் மது அருந்தியதாக இப்போதும், இதற்கு முன்பும் பள்ளியிருந்து நீக்கப்பட்ட மாணவ, மாணவியரை கண்டித்து அறிவுரைகளும், மனநல ஆலோசனைகளும் வழங்கி தொடர்ந்து கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேநேரத்தில் மாணவ, மாணவியருக்கு சட்ட விரோதமாக  மது கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? அதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கெல்லாம் மேலாக மாணவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சீரழித்து வரும் மதுவை ஒழிக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை இதை செய்ய அரசு மறுத்தால் பா.ம.க. ஆட்சியில் முதல் நடவடிக்கையாக மது விலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

கிரானைட் ஊழல்: சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும்: ராமதாஸ்

 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் கொள்ளை குறித்து உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி  விசாரணை நடத்திய சட்ட ஆணையர் சகாயம், அவரது விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில்  நேற்று தாக்கல் செய்திருக்கிறார். அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும், 1991&ஆம் ஆண்டு முதல்  நீடிக்கும் கிரானைட் கொள்ளை குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளையை ஆதாரங்களுடன் அரசுக்கு தெரிவித்தவர் அம்மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் தான். இந்த உண்மையை கண்டறிந்ததற்காக தான் மதுரை   மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். சகாயம் கண்டறிந்த கிரானைட் கொள்ளை குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நான் தான்.  அதைத் தொடர்ந்து இந்த சிக்கல் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி சட்ட ஆணையராக நியமிக்கப்பட்டு கடந்த ஆண்டு திசம்பர்  மாதத்தில் விசாரணையைத் தொடங்கிய இ.ஆ.ப. அதிகாரி சகாயம்  ஓராண்டில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

1991 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியில் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடைபெற்று இருப்பதாகவும், இந்த கொள்ளைக்கு அரசு உயரதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் உயரதிகாரிகள் பலரும் இந்த முறைகேட்டுக்கு துணையாக  இருந்திருப்பதால் இந்த ஊழல் குறித்து தமிழ்நாட்டை சாராத பல்துறை அதிகாரிகள் அடங்கிய மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் படையைக் கொண்டு விசாரிக்க வேண்டும். அதில் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தி ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கும்படியும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விசாரணைக்கு உதவிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு  பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகளையும் சகாயம் குழு முன்வைத்துள்ளது.

ஆனால், விசாரணைக்கு உதவியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை புரிந்துகொள்ள  முடியும்.  இந்த வழக்கு அதன் இயல்பான முடிவை நோக்கி செல்வதையோ, இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதையோ தமிழகத்தின் இப்போதைய ஆட்சியாளர்களும் விரும்ப மாட்டார்கள்; முன்நாள் ஆட்சியாளர்களும் ரசிக்க மாட்டார்கள். கிரானைட் கொள்ளை பற்றி சகாயம் விசாரணை நடத்துவார் என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை வாங்க தமிழக அரசு துடித்தது, சகாயம் குழுவின் விசாரணைக்கு தேவையில்லாமல் முட்டுக்கட்டை போட்டது ஆகியவற்றில் இருந்தே இவ்விஷயத்தில் தமிழக அரசின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடியும். இந்த ஊழலுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்ற சகாயம் குழுவின் பரிந்துரை பாதி உண்மை மட்டுமே. கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., தி.மு.க.  ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்த ஊழலில் தொடர்பு உள்ளது என்பது தான் முழுமையான உண்மை.

இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஊழல், கர்நாடகத்தில் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை சிறை செல்வதற்கு காரணமாக இருந்த இரும்புத் தாது ஊழல் ஆகியவற்றை விட மிக மோசமான ஊழல் கிரானைட் ஊழல் என்பது விரைவில் நிரூபிக்கப்படும். தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்த ஊழலில் தொடர்பிருக்கும் நிலையில் உள்ளூர் புலனாய்வுத் துறையோ, வழக்கமான நீதிமன்றங்களோ இவ்வழக்கை விசாரித்தால் முழுமையான நீதி கிடைக்காது. எனவே, சகாயம் குழுவின் பரிந்துரைப்படி இந்த வழக்கின் புலன் விசாரணையை பல்துறை அதிகாரிகள் அடங்கிய மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் படையிடம் தமிழக அரசு தானாக முன்வந்து  ஒப்படைக்க வேண்டும். இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தையும் அமைக்க வேண்டும்.

அதற்கெல்லாம் மேலாக கிரானைட் ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருப்பதாக சகாயம் குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறதோ, அவர்கள் அனைவர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து  கைது செய்ய வேண்டும். கிரானைட் கொள்ளை மூலம் பல்வேறு தரப்பினரும் குவித்து வைத்துள்ள  சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தமிழ்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

Monday, November 23, 2015

மீண்டும் மிதக்கிறது கடலூர் மாவட்டம்: மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்

மீண்டும் மிதக்கிறது கடலூர் மாவட்டம், மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என  பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் எது நடக்கக்கூடாது என்று மக்கள் வேண்டிக் கொண்டிருந்தார்களோ அது நடந்து விட்டது. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் இந்த மழையால் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் தீபஒளி திருநாளுக்கு முன்பாக பெய்த அடைமழையால் அம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு இந்த தீபஒளி சோக தீபஒளியாக மாறியது. கடலூர் மாவட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடலூரைத் தொடர்ந்து சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களும் மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாயின. இந்த பாதிப்புகளில் இருந்து கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மீண்டு வருவதற்கு முன்பே அடுத்த மழை தொடங்கி விட்டதால் அம்மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் கெடிலம்  ஆற்றிலும், பரவனாற்றிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் மழை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த 5 அமைச்சர்களும் மீட்பு பணிகள் முடிவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறிவிட்டனர். நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பதிலாக தங்களுக்கும், தங்களின் ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகள் கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் மக்கள் துயர வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கத்தில் கட்சிப் பதவி கிடைத்ததற்காக உற்சாக வெள்ளத்தில் திளைத்த தமிழ்நாட்டு அமைச்சர்களின் மக்கள் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.

சென்னையில் மீண்டும் கொட்டத் தொடங்கியுள்ள மழையால் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. கடந்த வாரம் பெய்த மழையால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், இப்போது தான் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். அதற்குள் அடுத்த மழை தொடங்கியிருக்கிறது. இம்மழை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சென்னை புறநகர் பகுதிகள் மீண்டும் வெள்ளக் காடாகிவிடும் ஆபத்து இருக்கிறது. ஆனால், தமிழக அரசோ, சென்னை மாநகராட்சியோ இந்த ஆபத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் ஆட்சியாளர்களின் அலட்சியம் தொடர்கிறது. சென்னை வேளச்சேரியில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சென்ற 2 பெண் குழந்தைகளை அவர்கள் காப்பாற்றி விட்டாலும், பெற்றோரை இழந்த அக்குழந்தைகள் ஆதரவற்றவர்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தான் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால் அவற்றிலிருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியும் நிரம்பியதால் அதிலிருந்து நேற்றிரவு முதல் கூடுதல் நீர் வெளியேற்றப்படுகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. அம்மாவட்டத்தில் ஓடும் ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் அங்குள்ள மக்களின் நிலை என்னவாகும்? என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் ஆபத்து அதிகரித்திருக்கிறது.

எனவே, தமிழக அரசு விளம்பர அரசியல் செய்வதை விடுத்து, கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம். மழையால் எவருக்கும் பாதிப்புகள் இல்லை என்ற உன்னத நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இணையரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Saturday, November 21, 2015

தலித் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ் ( படங்கள் )

 

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார் .

நெய்வேலித் தொகுதி காடாம்புலியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ள தலித் மக்களை சந்தித்து, அவர்களுக்கு இன்று நிவாரண உதவிகள் வழங்கினார்.

வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

 
வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள் பரவி வருவதும், அந்த நோய்களுக்கு அப்பாவி மக்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதும் மிகுந்த கவலை அளிக்கிறது. ஆனால், பரவி வரும் நோய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும்.

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான டெங்கு காய்ச்சல் ஆண்டு தோறும் தமிழகத்தில் பரவுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலையில் சென்னை மருத்துவமனைகளில் மட்டும் 545 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு டெங்கு நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு மறுக்கிறது.

டெங்கு காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோயும் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் திருச்சி மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்நாளில் மட்டும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தீபா, கரூரைச் சேர்ந்த சந்திரா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஜாஹீர் ஹுசைன்  ஆகிய 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே இந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். ஆனால், பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பன்றிக் காய்ச்சலுக்கு 10 நாட்களில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதைப்பற்றிக் கவலைப்படாத தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள்,‘‘ பன்றிக் காய்ச்சலுக்கு இப்போது பலம் குறைந்து விட்டது. பன்றிக் காய்ச்சல் என்பது மழைக் காலத்தில் வரும் சாதாரணக் காய்ச்சல் தான் என உலக சுகாதார நிறுவனமே அறிவித்து விட்டது. இதனால் பன்றிக் காய்ச்சலை நினைத்து அச்சப்படத் தேவையில்லை’’ என்று கூறியுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது. பன்றிக் காய்ச்சலுக்கு தனி அறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் எந்த அரசு மருத்துவமனையிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இன்னும் பெரும்பாலான மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சாப்பிடுவதற்கான டாமிஃபுளு மாத்திரைகள் கூட போதிய அளவில் இருப்பு வைக்கப்படவில்லை என்பது தான் உண்மை நிலையாகும்.

மற்றொரு பக்கம் மழை பாதிப்புகள் காரணமாக சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 1955 பேர் காய்ச்சலுக்காகவும், 113 பேர் வயிற்றுப் போக்குக்காகவும் சிகிச்சை பெற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி ஒப்புக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வட சென்னையிலுள்ள தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோயின் பாதிப்பு மிகஅதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்திலும் மழை சார்ந்த நோய்கள் வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் மழை சார்ந்த தொற்று நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது நல்ல அறிகுறி அல்ல. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் போதிலும், அவை போதுமானது அல்ல. குறிப்பாக பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான மருத்துவம் அளிக்கும் வசதிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்துவதுடன், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Thursday, November 19, 2015

மழை நிவாரணம்; பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒரு நாள் ஊதியம் கொடை: ராமதாஸ்


மழை நிவாரணம்; பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒரு நாள் ஊதியம் நன்கொடையாக வழங்குவார்கள் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் சென்னை, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் யூகிக்க முடியாத அளவுக்கு கொடுமையானவை. இயற்கையின் இரக்கமின்மையும்,  அரசின் அலட்சியமும் தான் அத்தனை துயரங்களுக்கும் காரணம் என்ற போதிலும் பாதிக்கப்பட்ட தமிழ் சொந்தங்களுக்கு உதவி செய்யும் கடமையிலிருந்து நம்மால் ஒருபோதும் ஒதுங்கியிருக்க முடியாது.

தமிழகத்தை சுனாமி தாக்கிய போதும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைத் தானே புயல் தாக்கிய போதும் மனிதநேயத்துக்கு உதாரணமாக செயல்பட்டு உதவிகளை வாரி வழங்கியது நாம் தான். அதேபோல், பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை கொடுக்க வேண்டியதும் நமது கடமை ஆகும். அக்கடமையை நிறைவேற்றும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்  அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள்.

அதேபோல், பாட்டாளி தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், மின் வாரியத் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்கத் தொழிலாளர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவன பணியாளர்களும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். இதற்கான ஒப்புதல் கடிதங்களை தொடர்புடைய அமைப்புகளின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

 
கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 2015-16 ஆம் ஆண்டிற்கான அரவைப்பருவம் தொடங்கி 50 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் கரும்புக்கான கொள்முதல் விலை இன்று வரை அறிவிக்கப்படவில்லை. தங்களின் கரும்புக்கு என்ன விலை கிடைக்கும் என்பது கூட தெரியாமல் சர்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு சூழலை தமிழக அரசு ஏற்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா விவசாயிகளின் வாழ்வுடன் விபரீத விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக அதை காலில் போட்டு மிதித்தார். 2011-12 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்குவதாக அறிவித்திருந்த ஜெயலலிதா ரூ.2000 கொள்முதல் விலை, ரூ.100 வாகன வாடகை என மொத்தம் ரூ.2100 மட்டுமே வழங்கினார். அதனால் மாற்றத்தை ஏற்படுத்திய விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.

2012-13 ஆம் ஆண்டிலும் ஜெயலலிதா அவரது வாக்குறுதியை காப்பாற்றவில்லை. மத்திய அரசு அறிவித்த விலையுடன் தமிழக அரசால் வழக்கமாக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.650 சேர்த்து ரூ.2350 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கினார். 2013&14 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ஜெயலலிதா மிகப்பெரிய துரோகத்தை செய்தார். அந்த ஆண்டில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.2100 அறிவித்த நிலையில் தமிழக அரசு ரூ.650 ஊக்கத்தொகை சேர்த்து ரூ.2750 வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ரூ.2,650 மட்டுமே ஜெயலலிதா வழங்கினார். அதேபோல், 2013-14 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த ரூ.2,200 விலையுடன் ரூ.650 சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.2,850 வழங்கியிருக்க வேண்டும். ஆனால், வழக்கமாக வழங்கப்படும் ஊக்கத்தொகையில் ரூ.200 குறைத்து ரூ.2,650 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கப்படும் என அறிவித்தது அதிமுக அரசு.

ஆனால், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை வழங்குவதற்குக் கூட எந்த சர்க்கரை ஆலையும் முன்வரவில்லை.  கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.1,050 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ள நிலையில், அதை பெற்றுத் தர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து செய்த துரோகங்களின் பயனாக உழவர்கள் கரும்பு விவசாயத்தை கிட்டத்தட்ட கைவிட்டு விட்டனர். அதனால், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற போது  386 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி  37% குறைந்து 2014 ஆம் ஆண்டில் 245 லட்சம் டன்னாக சரிந்து விட்டது. விவசாயத்தில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதாகக் கூறி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால், விவசாயத்தில் கடைசி மாநிலமாக மாற்றியதும், வேளாண் வளர்ச்சியை & 12.1(மைனஸ் 12.1)% என்ற  அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றதும் தான் கடந்த நான்கு ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு படைத்த சாதனையாகும்.

தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளில் பெரும்பாலானோர் கடன் வாங்கி விவசாயம் செய்பவர்கள் ஆவர். இத்தகைய சூழலில் விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி விட்டு எப்போது பணம் வரும்... எவ்வளவு பணம் வரும்? என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பது பெரும் கொடுமையாகும். அந்தக் கொடுமையிலிருந்து தமிழக விவசாயிகளை மீட்க அரசு முன்வர வேண்டும். நடப்பு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு 2300 ரூபாயை மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. தில்லியில் நேற்று முன்நாள் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.45 ஊக்கத்தொகை வழங்கவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கரும்பு சாகுபடிக்கான செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்க வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பு ஆகும். பா.ம.க. ஆட்சியில் இந்த விலை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். ஒருவேளை ஜெயலலிதா அரசால் அந்த விலை வழங்க முடியாவிட்டால் மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2345 விலையுடன் தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.650, வாகன வாடகை ரூ.100 சேர்த்து ரூ.3095 வழங்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் 5 ஆண்டுகளாக ஏமாற்றிய அ.தி.மு.க. அரசுக்கு  அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: