பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆதாரமின்றி தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களின் தண்டனையை குறைத்து விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை; மத்திய அரசுக்கு தான் இருக்கிறது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அப்பாவி தமிழர்கள் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்தீர்ப்பு பெரும் ஏமாற்றமளிக்கிறது.
இராஜீவ் கொலை வழக்கில் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதன்பின் குறைக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், இராபர்ட் பயாஸ் ஆகிய எழுவரும் ஏதோ ஒரு வகையில் தவறாக தண்டிக்கப்பட்டவர்கள் தான். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதியதால் தான் அவர் தண்டிக்கப்பட்டதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் வெளிப்படையாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு பல மாதங்களுக்கு அவர் விண்ணப்பம் அனுப்பினார். ஆனால், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இராஜீவ் கொலை தொடர்பான சதி தம்மைத் தவிர யாருக்கும் தெரியாது என மத்திய புலனாய்வுப் பிரிவினர் ஒட்டுக்கேட்டு பதிவு செய்த உரையாடலில் சிவராசன் கூறியிருக்கிறார். அப்படி இருக்கும் போது கொலைச்சதி குறித்து எதுவுமே தெரியாதவர்கள் எந்த அடிப்படையில் தண்டிக்கப்பட்டார்கள் என்ற வினாவுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.
வழக்கின் தன்மை குறித்து ஒதுக்கிவைத்து விட்டு பார்த்தாலும் இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 1991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். அவர்களை இனியும் சிறையில் அடைத்து வைப்பது நியாயமல்ல என்பதால் தான், அவர்களின் விடுதலை குறித்து இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432ஆவது பிரிவின்படி தமிழக அரசு முடிவு செய்யலாம் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அச்சட்டப்பிரிவில் மத்திய அரசுடன் ஆலோசனை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதன் பொருள் ஆலோசனை மட்டும் தானா... அல்லது ஒப்புதல் பெற வேண்டுமா? என்பது தான் இந்த வழக்கில் விடை காணப்பட வேண்டிய வினாவாக இருந்து வந்தது.
இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு, மத்திய அரசின் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உண்டு; எனவே 432 ஆவது பிரிவின்படி ஒருவரை விடுவிப்பது குறித்து மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தான் மாநில அரசு அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலத்தையும் தாண்டி 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்ட நிலையில், அவர்களை விடுவிப்பது தான் மனித நேயமாக இருக்குமே தவிர, சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளைக் காரணம் காட்டி, 7 தமிழர்களும் ஆயுள் முழுவதும் சிறையில் அடைபட்டு கிடக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்ப்பது சரியல்ல.
7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கில், அவர்களை விடுதலை செய்வதற்கான வழிமுறை குறித்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் முடிவு எடுத்திருந்தால் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்காது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சட்டத்திற்குட்பட்டு 7 பேர் விடுதலை குறித்த பரிந்துரையை தமிழக அரசு முன்வைத்திருப்பதால் அதை ஏற்றே தீர வேண்டும் என்ற அழுத்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால், 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக எடுத்தேன்... கவிழ்த்தேன் அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடித்ததால் இது இரு அரசுகளுக்கும் இடையிலான கவுரவப் பிரச்சினையாக மாறி விட்டது.
உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்புக்குப் பிறகு சட்ட அடிப்படையிலான மேல் நடவடிக்கைகள் உடனடியாக பயனளிக்காது என்றே தோன்றுகிறது. 7 தமிழர்களின் விடுதலை குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுத்து அதன் மூலம் நமது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வது தான் அறிவார்ந்த செயலாக இருக்கும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் 7 தமிழர்கள் விடுதலை குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து தீர்மானத்தின் நகலை ஒப்படைத்து 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும். 7 தமிழர் நலனில் அக்கறையிருந்தால் இதை தமிழக அரசு செய்ய வேண்டும்.’’
No comments:
Post a Comment