Thursday, December 17, 2015

தமிழகத்திற்கு ரூ.40,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்

மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின் போது தமிழகத்தின் வெள்ள நிலைமை, அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை குறித்து பிரதமர் அவர்களிடம் விரிவாக விளக்கினார்.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்கிய அவர்,‘‘ சென்னையில் கடந்த 108 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த திசம்பர் ஒன்றாம் தேதி மட்டும் சென்னையில் 46 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால்  அடையாற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கூவம் ஆற்றிலும் பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையில் பாதிப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இரவில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை விமான நிலையம், தொடர்வண்டி பாதைகள் ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சென்னையில் அனைத்து வகை போக்குவரத்தும்  தடைபட்டது. ஒட்டுமொத்த சென்னையும் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனித் தீவாக மாறிப்போனது.

சென்னை வெள்ளம் நமக்கு இரு பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. இவ்வளவு பெரிய பேரிடரை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இல்லை. 2005 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு முழு அளவில் செயல்பட்டிருந்தால் இந்த பேரிடரை எதிர்கொண்டு சமாளித்திருக்க முடியும். பேரிடரின் போது பல்வேறு துறைகளின் பணிகளை ஒருங்கிணைப்பது தான் இந்த ஆணையத்தின் பணியாகும். ஆனால், சென்னையில் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் ஒருங்கிணைப்பே இல்லை. அதுமட்டுமின்றி சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு மழை மட்டுமே காரணம் அல்ல. சென்னையின் மிகப்பெரிய வடிகால் பகுதியாக திகழ்ந்த பள்ளிக்கரனை சதுப்பு நிலம் கடந்த பல ஆண்டுகளில் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 4500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அப்பகுதி இப்போது 500 ஹெக்டேர் ஆக சுருங்கி விட்டது. அதேபோல் சென்னையின் பெரும்பகுதி மூழ்கியதற்கு மழை காரணமல்ல. முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அடையாற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது தான் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இந்த வெள்ளத்தில் சிக்கி பல தூக்கத்திலேயே உயிரிழந்து விட்டனர்.

சென்னையில் மழை வெள்ள பேரிடரை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அவை தோல்வியடைந்தது குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதற்காக பேரிடர் மேலாண்மையில் வல்லமை பெற்ற வெளிநாட்டு வல்லுனர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இந்த விசாரணையில் தெரியவரும் அம்சங்களை அடிப்படையாக வைத்து இனிவரும் காலங்களில் பேரிடர் ஏற்படும் போது அதை சமாளிப்பது எப்படி? என்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டும்’’ என்று கூறினார். அதைக்கேட்ட பிரதமர் இத்தகைய விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தரவளித்தார். இந்த விசாரணை பிரதமரின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்திய போது, கண்டிப்பாக அத்தகைய விசாரணைக்கு ஆவண செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை குறித்தும் பிரதமரிடம் அன்புமணி இராமதாஸ் விளக்கினார். ‘‘ கடலூர் மாவட்டம் அடுத்தடுத்து பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. 2004 ஆம் ஆண்டில் சுனாமி, 2011 ஆம் ஆண்டில் தானே புயல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் இப்போது கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பொறுப்பற்ற செயல் ஆகும். 

அந்த நிறுவனத்தின் சுரங்கங்களில் தேங்கிக்கிடந்த தண்ணீர் முன்னறிவிப்பின்றி வெளியேற்றப் பட்டதால் தான் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கின. ஆண்டுக்கு ரூ.1,700 கோடி லாபம் ஈட்டும் அந்த நிறுவனம் கடலூர் மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடாமல் அம்மாவட்ட மக்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து பொறுப்பற்ற முறையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை அந்த நிறுவனமும் மேற்கொள்ள வேண்டும் என்று  அதன் நிர்வாகத்திற்கு பிரதமராகிய நீங்கள் ஆணையிட வேண்டும். 

வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும், மறுவாழ்வுப் பணி களை மேற்கொள்வதற்காகவும் சென்னை மண்டலத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி, கடலூர் மாவட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.40 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டார். அதைக்கேட்ட பிரதமர், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக கூறினார்.

மழை&வெள்ளத்தால்  போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் மட்டும் குடிமைப்பணித் தேர்வுகளை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், இந்த தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டதால் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என பிரதமர் தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: