Tuesday, November 24, 2015

கிரானைட் ஊழல்: சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும்: ராமதாஸ்

 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் கொள்ளை குறித்து உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி  விசாரணை நடத்திய சட்ட ஆணையர் சகாயம், அவரது விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில்  நேற்று தாக்கல் செய்திருக்கிறார். அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும், 1991&ஆம் ஆண்டு முதல்  நீடிக்கும் கிரானைட் கொள்ளை குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளையை ஆதாரங்களுடன் அரசுக்கு தெரிவித்தவர் அம்மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் தான். இந்த உண்மையை கண்டறிந்ததற்காக தான் மதுரை   மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். சகாயம் கண்டறிந்த கிரானைட் கொள்ளை குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நான் தான்.  அதைத் தொடர்ந்து இந்த சிக்கல் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி சட்ட ஆணையராக நியமிக்கப்பட்டு கடந்த ஆண்டு திசம்பர்  மாதத்தில் விசாரணையைத் தொடங்கிய இ.ஆ.ப. அதிகாரி சகாயம்  ஓராண்டில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

1991 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியில் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடைபெற்று இருப்பதாகவும், இந்த கொள்ளைக்கு அரசு உயரதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் உயரதிகாரிகள் பலரும் இந்த முறைகேட்டுக்கு துணையாக  இருந்திருப்பதால் இந்த ஊழல் குறித்து தமிழ்நாட்டை சாராத பல்துறை அதிகாரிகள் அடங்கிய மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் படையைக் கொண்டு விசாரிக்க வேண்டும். அதில் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தி ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கும்படியும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விசாரணைக்கு உதவிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு  பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகளையும் சகாயம் குழு முன்வைத்துள்ளது.

ஆனால், விசாரணைக்கு உதவியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை புரிந்துகொள்ள  முடியும்.  இந்த வழக்கு அதன் இயல்பான முடிவை நோக்கி செல்வதையோ, இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதையோ தமிழகத்தின் இப்போதைய ஆட்சியாளர்களும் விரும்ப மாட்டார்கள்; முன்நாள் ஆட்சியாளர்களும் ரசிக்க மாட்டார்கள். கிரானைட் கொள்ளை பற்றி சகாயம் விசாரணை நடத்துவார் என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை வாங்க தமிழக அரசு துடித்தது, சகாயம் குழுவின் விசாரணைக்கு தேவையில்லாமல் முட்டுக்கட்டை போட்டது ஆகியவற்றில் இருந்தே இவ்விஷயத்தில் தமிழக அரசின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடியும். இந்த ஊழலுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்ற சகாயம் குழுவின் பரிந்துரை பாதி உண்மை மட்டுமே. கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., தி.மு.க.  ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்த ஊழலில் தொடர்பு உள்ளது என்பது தான் முழுமையான உண்மை.

இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஊழல், கர்நாடகத்தில் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை சிறை செல்வதற்கு காரணமாக இருந்த இரும்புத் தாது ஊழல் ஆகியவற்றை விட மிக மோசமான ஊழல் கிரானைட் ஊழல் என்பது விரைவில் நிரூபிக்கப்படும். தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்த ஊழலில் தொடர்பிருக்கும் நிலையில் உள்ளூர் புலனாய்வுத் துறையோ, வழக்கமான நீதிமன்றங்களோ இவ்வழக்கை விசாரித்தால் முழுமையான நீதி கிடைக்காது. எனவே, சகாயம் குழுவின் பரிந்துரைப்படி இந்த வழக்கின் புலன் விசாரணையை பல்துறை அதிகாரிகள் அடங்கிய மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் படையிடம் தமிழக அரசு தானாக முன்வந்து  ஒப்படைக்க வேண்டும். இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தையும் அமைக்க வேண்டும்.

அதற்கெல்லாம் மேலாக கிரானைட் ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருப்பதாக சகாயம் குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறதோ, அவர்கள் அனைவர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து  கைது செய்ய வேண்டும். கிரானைட் கொள்ளை மூலம் பல்வேறு தரப்பினரும் குவித்து வைத்துள்ள  சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தமிழ்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: