பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை
’’தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், சபரிமலை புனிதப் பயணத்தின் போது அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் கணக்கில் அடங்காதவை.
கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விரதமிருந்த பிறகு இவர்கள் கேரள மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி திரும்புவர். இந்த பக்தர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கடமை ஆகும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசு செய்திருக்கும் போதிலும், கோடிக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் செல்வதால் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்காத நிலை ஏற்படுக்கிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையை மாற்றி சபரிமலை பயணம் சுகமான அனுபவமாக மாற்ற சில திட்டங்களைத் தயாரித்துள்ள கேரளம் அதற்கு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய அரசுகளின் ஒத்துழைப்பைக் கோரியிருக்கிறது. பக்தர்களுக்கு வசதிகளை செய்து தரும் கடமையையும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் கேரளம் முன்வைத்துள்ள கோரிக்கையாகும்.
தென் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் இளைப்பாற பொதுவான வசதிகளை செய்வதற்கு பதிலாக மாநில வாரியாக வசதிகளை செய்து கொடுத்து, அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்கலாம் என்பது தான் கேரளத்தின் திட்டமாகும். அதற்காக சபரிமலைக்கு செல்லும் வழியில் நிலக்கல் என்ற இடத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய அனைத்து மாநிலங்களுக்கும் தலா 5 ஏக்கர் நிலத்தை கேரள அரசு ஒதுக்கியிருக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அந்தந்த மாநில அரசுகள் சமுதாயக் கூடங்களை கட்டினால், அவற்றில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் எளிதாக தங்கி இளைப்பாறி செல்ல முடியும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதேபோல், சென்னை, பம்பா ஆறு, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதேனும் அவசரத் தேவை என்றாலோ, சிக்கல் என்றாலோ உடனடி தகவல் பரிமாற்றம் செய்து, தேவையான உதவிகளை பெற முடியும் என்பது இதன் இன்னொரு நோக்கமாகும்.
கேரள அரசின் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள தெலுங்கானா அரசு, நிலக்கல் பகுதியில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொண்டது. அங்கு பக்தர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாயக் கூடங்களை அமைப்பது, கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை தெலுங்கானா அரசு மேற்கொள்ள உள்ளது.
தமிழக அரசும் கேரள அரசால் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களுக்காக சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, பக்தர்கள் தாங்கள் பயன்படுத்திய ஆடை உள்ளிட்ட உடமைகளை பம்பை ஆற்றில் விட்டு வர வேண்டும் என்பது தவறான நம்பிக்கை என்பதாலும், இது தண்டனைக்குரிய குற்றம் என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பதாலும் அது குறித்த விழிப்புணர்வையும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களிடம் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment