மீண்டும் மிதக்கிறது கடலூர் மாவட்டம், மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் எது நடக்கக்கூடாது என்று மக்கள் வேண்டிக் கொண்டிருந்தார்களோ அது நடந்து விட்டது. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் இந்த மழையால் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் தீபஒளி திருநாளுக்கு முன்பாக பெய்த அடைமழையால் அம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு இந்த தீபஒளி சோக தீபஒளியாக மாறியது. கடலூர் மாவட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடலூரைத் தொடர்ந்து சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களும் மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாயின. இந்த பாதிப்புகளில் இருந்து கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மீண்டு வருவதற்கு முன்பே அடுத்த மழை தொடங்கி விட்டதால் அம்மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் கெடிலம் ஆற்றிலும், பரவனாற்றிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் மழை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த 5 அமைச்சர்களும் மீட்பு பணிகள் முடிவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறிவிட்டனர். நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பதிலாக தங்களுக்கும், தங்களின் ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகள் கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் மக்கள் துயர வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கத்தில் கட்சிப் பதவி கிடைத்ததற்காக உற்சாக வெள்ளத்தில் திளைத்த தமிழ்நாட்டு அமைச்சர்களின் மக்கள் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.
சென்னையில் மீண்டும் கொட்டத் தொடங்கியுள்ள மழையால் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. கடந்த வாரம் பெய்த மழையால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், இப்போது தான் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். அதற்குள் அடுத்த மழை தொடங்கியிருக்கிறது. இம்மழை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சென்னை புறநகர் பகுதிகள் மீண்டும் வெள்ளக் காடாகிவிடும் ஆபத்து இருக்கிறது. ஆனால், தமிழக அரசோ, சென்னை மாநகராட்சியோ இந்த ஆபத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் ஆட்சியாளர்களின் அலட்சியம் தொடர்கிறது. சென்னை வேளச்சேரியில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சென்ற 2 பெண் குழந்தைகளை அவர்கள் காப்பாற்றி விட்டாலும், பெற்றோரை இழந்த அக்குழந்தைகள் ஆதரவற்றவர்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தான் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால் அவற்றிலிருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியும் நிரம்பியதால் அதிலிருந்து நேற்றிரவு முதல் கூடுதல் நீர் வெளியேற்றப்படுகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. அம்மாவட்டத்தில் ஓடும் ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் அங்குள்ள மக்களின் நிலை என்னவாகும்? என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் ஆபத்து அதிகரித்திருக்கிறது.
எனவே, தமிழக அரசு விளம்பர அரசியல் செய்வதை விடுத்து, கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம். மழையால் எவருக்கும் பாதிப்புகள் இல்லை என்ற உன்னத நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இணையரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment