Tuesday, December 29, 2015

ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாளிகை, வணிக நிறுவனம், கல்விக் கடைகளை அகற்ற என்ன திட்டம் இருக்கிறது? ராமதாஸ் கேள்வி

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அடையாற்றின் கரையோரம் குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரும் திட்டத்தின்படி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 10,000  வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடுகளைப் பெறுபவர்களில் சிலருக்கு  அதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.

மாற்று இடங்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சைதாப்பேட்டை ஆற்றுமா நகரில் இருந்த நூற்றுக்கணக்கான குடிசைகள் இடித்து தள்ளப்பட்டிருக்கின்றன. மற்றப் பகுதிகளிலும் இந்த நடவடிக்கை தொடரவிருக்கிறது. அடையாற்றின் கரைகளில் வசித்த மக்களுக்கு அவர்களின் குடிசைகளை அகற்றி விட்டு, அடுக்குமாடி வீடுகளை ஒதுக்குவதை குறை கூற முடியாது. ஆனால், அவை எங்கு ஒதுக்கப் பட்டிருக்கின்றன என்பது தான் சிக்கலே. ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக யாரும் குடியேறாமலிருந்த வீடுகள் தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் அண்மையில் ஏற்பட்ட மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தான் உள்ளன. அந்த வீடுகள் எதிர்காலத்தில் மழை&வெள்ளம் ஏற்பட்டால் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது மில்லியன் டாலர் வினா. அதுமட்டுமின்றி, இந்த குடிசைகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்தோ, தெருவோர வணிகம் செய்தோ பிழைப்பவர்கள். இதை சென்னையில் இருந்து தான் செய்ய முடியும் என்பதில்  இருவேறு கருத்து இருக்க முடியாது.
ஆனால், அவர்களை இப்போது அவர்கள் குடியிருந்த பகுதிகளில் இருந்து பல கி.மீ. தொலைவில் அரசு குடியமர்த்தியிருக்கிறது. இப்போது குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல், அவர்கள் நாள்தோறும் சென்னைக்கு வந்து பிழைப்பு தேடுவதும் சாத்தியமற்றது. அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த ஏழை மக்கள் கடந்த காலங்களில் பலமுறை இவ்வாறு குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பிழைப்பு கிடைக்காததால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை விட்டு ஏற்கனவே தாங்கள் வசித்த பகுதிக்கே திரும்பி குடிசை போட்டு வாழத் தொடங்கியிருக்கின்றனர். இத்தகைய சூழலில் குடிசைவாசிகளுக்கு தொலைதூரத்தில் மாற்று இடங்களை ஒதுக்கும் தமிழக அரசின் திட்டம் சரியானதாக தோன்றவில்லை.

நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆற்றங்கரையோரம் பாதுகாப்பு இல்லாமல் வாழும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவது தான் பாதுகாப்பானதும் கூட. ஆனால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் மாற்று இடம் பாதுகாப்பானதாகவும், எளிதில் வாழ்வாதாரம் தேடக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். எனவே, அடையாற்றின் கரைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு அவர்கள் ஏற்கனவே வசித்த பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவுக்குள் மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், நீர்நிலைகளில் இருந்த குடிசைகளை மிகவும் எளிதாக அகற்றிவிட்ட தமிழக அரசு,  நிகழ்கால மற்றும் கடந்த கால ஆளுங்கட்சி ஆதரவுடன் ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாட மாளிகைகளையும், வணிக நிறுவனங்களையும், கல்விக் கடைகளையும் அகற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்பதைப் போல ஏழைகளின் குடிசைகளை அகற்றிவிட்டு பணம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை பாதுகாக்க அரசு முயன்றால் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: