Sunday, December 13, 2015

செம்பரம்பாக்கம் பேரழிவு: அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிக்க அரசு முயல்வதா? ராமதாஸ் கண்டனம்

 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் செம்பரம்பாக்கம்  ஏரியிலிருந்து திசம்பர் 1-ஆம் தேதி முன்னறிவிப்பின்றி அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது தான் காரணம் என்ற குற்றச்சாற்றுக்கு விளக்கமளித்து தலைமைச்செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த அறிக்கையில் உண்மை இல்லை;பொய்யும், புறம் கூறுதலும் தான் நிறைந்திருக்கின்றன.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் வழக்கத்தை விட 90% அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அவ்வாறு மழை பெய்தால் அதன் மூலம் ஏரிக்கு கூடுதலாக வரும் நீரால் பாதிப்பு ஏற்படாமல் முன்கூட்டியே ஏரியின் நீர்மட்டத்தை குறைத்திருக்க வேண்டும். அதற்கான அனுமதி கேட்டு செம்பரம்பாக்கம் ஏரியை நிர்வகிக்கும் பொறியாளர்கள் நவம்பர் 26 ஆம் தேதியே பொதுப்பணித்துறை செயலருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அவரும் தலைமைச் செயலருக்கு தகவல் அனுப்பியுள்ளார். ஆனால், அதன் மீது முதல்வரும், தலைமைச்செயலரும் நடவடிக்கை எடுக்காததால் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து நிலைமை மோசமானது என்பது தான் அரசு மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாற்று ஆகும். இதற்கு பதிலளித்துள்ள தலைமைச்செயலாளர் ஞானதேசிகன், திசம்பர் 1ஆம் தேதி 50 செ.மீ. மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கவில்லை; அதனால் தான் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.  முன்னெச்சரிக்கை கருதி திசம்பர் 26 ஆம் தேதி பொறியாளர் அனுப்பிய அறிவுரையை 5 நாட்களாக கிடப்பில் போட்டுவிட்டு, வானிலை மையம் முன்னெச்சரிக்கை செய்யவில்லை என காரணம் கூறி தப்பிக்க முயல்வது  தலைமைச் செயலாளர் பதவியில் உள்ளவருக்கு அழகா? என்பதை ஞானதேசிகன் தான் விளக்க வேண்டும்.

அடுத்ததாக செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி ஒலிப்பெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஞானதேசிகன் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அறிக்கையில் அவர் கூறியுள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. அறிக்கையின் 6-ஆவது பக்கத்தில் திசம்பர் 1 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும், 12.00 மணிக்கு 12 ஆயிரம் கன அடி வீதமும், பிற்பகல் 2.00 மணிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டதாக  கூறப்பட்டுள்ளது.

ஆனால், அடுத்த பக்கத்தில், சென்னை ஆட்சியர் வெள்ள எச்சரிக்கை வெளியிட்டது பற்றி விளக்கும் போது, திசம்பர் 1-ஆம் தேதி காலை 11.20 மணிக்கு 7500 கனஅடி வீதமும்,  பிற்பகல் 1.32 மணிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளார். இந்த இரு புள்ளி விவரங்களில் எது உண்மை? என்பதை தமிழக அரசு தான் விளக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட எந்த பகுதியிலும் திசம்பர் 1ஆம் தேதி இரவு வரை ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கப்படவில்லை; தலைமைச் செயலர் கூறியவாறு எந்த பகுதியிலும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

திசம்பர் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 29,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டதாகவும், அடுத்த நாள் மாலை 3 மணி வரை அதேநிலை பராமரிக்கப் பட்டதாகவும் தலைமைச்செயலாளர் கூறியிருப்பது உண்மையல்ல. ஒன்றாம் தேதி இரவு ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 33,500 கன அடியாக உயர்த்தப்பட்டதாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. 

அதுமட்டுமின்றி, ஒரு கட்டத்தில் நீர்மட்டம் அதிகரித்து ஏரி நிரம்பி வழியத் தொடங்கியதாக பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.  அடையாறு வெள்ளத்தில் சைதாப்பேட்டை பாலம் மூழ்கி விட்டது; ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலத்தின் இரு ஓரங்களும் மூழ்கி விட்டன. வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்தால் தான் இது சாத்தியமாகும். அடையாற்றுக்கு வேறு ஆதாரங்களிலிருந்து தண்ணீர் வந்ததாக தலைமைச்செயலர் கூறுவது உண்மை தான். ஆனால், ஆற்றில் வந்த ஒரு லட்சம் கனஅடியில் பெரும்பகுதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து  வெளியேறியது தான் என்பதை மறுக்க முடியாது. எனினும், இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு ஏரியிலிருந்து 29,000 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டதாக தலைமைச்செயலர் ஞானதேசிகன் கூறியிருக்கிறார். இதை எந்த வகையான பொய்யில் சேர்ப்பது எனத் தெரியவில்லை.

இன்னொரு அபாண்டத்தையும் தலைமைச் செயலாளர் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நகருக்குள் நுழையவில்லை; மாறாக அடையாறு ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஓடியதால், சென்னையில் பெய்த மழை நீர் அடையாற்றில் கலக்க முடியாமல் போனதால் தான் நகரில் வெள்ளம் ஏற்பட்டது என்பது தான் தலைமைச்செயலரின் விளக்கம். இதுவும் உண்மைக்கு மாறான தகவல் தான். அடையாற்றில் இரவு நேரத்தில் அதிக நீர் திறக்கப்பட்டதால், கடலுக்கு உரிய வழக்கத்தின்படி, இரவு நேரத்தில் கடல் தண்ணீரை ஈர்த்துக் கொள்ளாமல் எதிர்த்து தள்ளியது. இதனால் தான் சென்னையின் பல இடங்களில் அடையாற்று நீர் ஊருக்குள் புகுந்தது. அடையாற்றுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத தேனாம்பேட்டை வரைக்கும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது என்பதிலிருந்தே அடையாற்று நீர் எந்த அளவுக்கு நகருக்குள்  புகுந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதை மறைத்து விட்டு அடையாற்று வெள்ளம் சென்னைக்குள் நுழையவில்லை என்பது முழுப் பூசணிக்காயை கைப்பிடி சோற்றில் மறைக்கும் செயல் என்பதைத் தவிர வேறில்லை.

இதற்கெல்லாம் மேலாக, ஏரியிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடுவது குறித்து தம்மிடமோ, பொதுப்பணித்துறை செயலரிடமோ செம்பரம்பாக்கம் ஏரி அதிகாரிகள் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக தம் மீதும், முதலமைச்சர் மீதும் கூறப்படும் குற்றச்சாற்றுகள் தீய நோக்கம் கொண்டவை என்றும் ஞானதேசிகன் கூறியுள்ளார். ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் அதன் பொறியாளருக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் எழுதப்படாத சட்டத்தின்படி, முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி அணுவும் அசையமுடியாது என்பது தானே உண்மை. வாய்க்காலில் தண்ணீர் திறப்பது குறித்த அறிவிப்பு கூட முதலமைச்சரின்  பெயரில் தானே வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது ஏரி திறப்பு குறித்து மேலிட அனுமதி தேவையில்லை என அவர் கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? ஒருவேளை இது உண்மை என்றால் அதுகுறித்து விளக்கமளிக்க 4 நாட்கள் தாமதமானது ஏன்? என்பன உள்ளிட்ட வினாக்கள் எழுகின்றன. ஆனால், அனைத்தையும் மூடி மறைக்கும் அரசிடமிருந்து இவற்றுக்கு பதில் கிடைக்காது.

சென்னையில் ஏற்பட்ட பேரழிவுக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மிக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதும், முன்கூட்டியே படிப்படியாக தண்ணீர் திறந்து விடும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் யோசனைக்கு தலைமைச் செயலர் குறித்த காலத்தில் அனுமதி வழங்காததும் தான் காரணம் என்று மீண்டும் குற்றஞ்சாற்றுகிறேன். இந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமானால் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை காண வேண்டியது அவசியமாகும்....

1. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்க பொறியாளர் சார்பில் பொதுப்பணித் துறை செயலரிடம் அனுமதி கோரப்பட்டதா... இல்லையா? இதுகுறித்த கோப்பை தலைமைச் செயலரின் ஒப்புதலுக்காக பொதுப்பணித்துறை செயலாளர் அனுப்பி வைத்தாரா இல்லையா?

2. வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டதா? வெள்ளம் வருவதற்கு முன்பே அப்பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

3. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 29,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட வில்லை என்பது உண்மையா?

4. அடையாற்றிலிருந்து சென்னை மாநகருக்குள் வெள்ளம் புகுந்ததா... இல்லையா?

5. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதை நவம்பர் இறுதியிலேயே முறைப்படுத்தி இருந்தால் வெள்ளத்தை தவிர்த்திருக்க முடியுமா?   

 இந்த வினாக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் விளக்கங்களை ஏற்க முடியாது. நீதிபதிகளைக் கொண்டும்,  நீர் மேலாண்மை வல்லுனர்களைக் கொண்டும் விசாரணை நடத்துவதன் மூலம் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும். எனவே, கட்டுக்கதைகளை கட்டுரைகளாக எழுதி விளக்கம் என்ற பெயரில் வெளியிடுவதை விடுத்து, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் வெளிமாநில நீர் மேலாண்மை வல்லுனர்கள் அடங்கிய விசாரணை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: