சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணப் பொருட்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டுவது என்பது மிகவும் மட்டமான அரசியல் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான இராதாகிருஷ்ணன் நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்ற அமைச்சர்களை விரட்டியடித்து பொதுமக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் பெயரளவுக்குக் கூட மேற்கொள்ளப்படாதது தான் இதற்குக் காரணம் ஆகும்.சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதி என்றாலும் அங்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் அந்த தொகுதியில் மிக மோசமான அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், பாதிப்புகளை சரி செய்யவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன், பசியில் தவிக்கும் மக்களுக்கு உணவு கூட வழங்கப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் டி.இராஜு, கோகுல இந்திரா ஆகியோர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று அங்கு சென்றனர். அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு, அவற்றை போக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சர்களோ ஆடம்பரமாக ஏராளமான மகிழுந்துகள் புடைசூழ தொகுதிக்கு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, ஜெயலலிதா வழியில் நடப்பதாகக் கூறிக் கொள்ளும் அவர்கள், ஜெயலலிதாவைப் போலவே மகிழுந்தை விட்டு இறங்காமல் பாதிப்புகளை பார்வையிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களையும் மரியாதைக்குறைவாக நடத்தியுள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அமைச்சர்களின் மகிழுந்துகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போதாவது மக்களின் உணர்வுகளை அமைச்சர்களும் அவர்களுடன் சென்றவர்களும் மதித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அமைச்சர்களுடன் சென்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் மக்களை மிரட்டி பணியவைக்க முயன்றுள்ளார்.இதனால் கொதித்துப் போன மக்கள் வெற்றிவேலை அடித்து விரட்டியுள்ளனர். அதன்பிறகு மகிழுந்தில் இருந்த அமைச்சர்களை கீழே இறங்க வைத்ததுடன், வெள்ள நீரில் நடந்து சென்று பாதிப்புகளை பார்க்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். ஆனால், சிறிது தூரம் மட்டுமே நடந்து சென்ற நத்தம் விஸ்வநாதனும் மற்ற அமைச்சர்களும் தங்களால் வெள்ள நீரில் நடக்க முடியாது என்று கூறி மகிழுந்தில் ஏறிக்கொண்டனர்.இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மக்கள் அனைத்து அமைச்சர்களையும் விரட்டி அடித்தனர். வெள்ள நீரில் சிறிது தூரம் நடந்து செல்லவே அமைச்சர்களுக்கு அருவறுப்பாக இருந்தால், அவர்களின் இதய தெய்வத்தை சட்டமன்ற உறுப்பினராகவும், முதலமைச்சராகவும் ஆக்கிய மக்கள் அந்த நீரிலேயே கடந்த ஐந்து நாட்களாக உணவு தண்ணீரின்றி வாழ்கிறார்களே, அவர்களின் அவல நிலையை என்னவென்று சொல்வது?இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது, ஒவ்வொரு வீடாக நடந்து சென்று கெஞ்சி வாக்குக் கேட்ட அமைச்சர்கள், இப்போது உதவி தேவைப்படும் நேரத்தில் உதாசீனப்படுத்தியதால் தான் அவர்களுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்துள்ளனர். இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. ஒட்டுமொத்த சென்னையிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளிலும் மக்கள் கோபம் எரிமலையாக கொதித்துக் கொண்டிருக்கிறது.மற்ற பகுதிகளுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லாததால் மக்களின் கோபத்திலிருந்து தப்பித்துள்ளனர். வாய்ப்பு கிடைக்கும் போது ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் கோபத்தை காட்டுவர் என்பது உறுதி.வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அலட்சியம் காட்டும் அரசும், ஆளுங்கட்சியும் விளம்பரம் தேடுவதில் மட்டும் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பில் உணவு, குடிநீர், பால், பாய், போர்வை போன்றவை வழங்கப்படவில்லை. தொண்டு நிறுவனங்கள் தான் இவற்றை வழங்கி வருகின்றன.ஆனால், ஆளுங்கட்சியினரோ இதிலும் விளம்பரம் தேடும் நோக்குடன் அனைத்து பொருட்கள் மீதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். உதவிப் பொருட்களுடன் சென்னைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மாநகர எல்லையில் தடுத்து நிறுத்தும் ஆளுங்கட்சியினர், உதவிப் பொருட்கள் மீது ஜெயலலிதாவின் உருவப்படங்களை ஒட்டி அனுப்புகின்றனர். ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்படாத உணவுப் பொட்டலங்களை பொதுமக்களுக்கு வினியோகிக்க ஆளுங்கட்சியினர் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான உணவுப் பொட்டலங்கள் குப்பையில் கொட்டப்பட்டன. குறிப்பாக ஜெயலலிதாவின் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மற்ற கட்சிகளின் சார்பில் உதவி வழங்க அனுமதிக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு துப்பில்லாத அரசும், ஆளுங்கட்சியினரும் மற்றவர்கள் வழங்கும் உதவிப் பொருட்கள் மீதும் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி விளம்பரம் தேட முயல்வது மிகவும் மட்டமான அரசியல் ஆகும்.மனிதநேயமுள்ள எந்த அரசும் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளாது. இனியாவது இத்தகைய போக்கை கைவிட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு சார்பில் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவதுடன், மற்றவர்களும் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ளூர் பேரூந்துகள் மட்டும் இலவசமாக இயக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தொலைதூர பேரூந்துகளும் இலவசமாக இயக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நிவாரணப் பணிகளுக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை குறைந்தபட்சம் அடுத்த இரு வாரங்களுக்கு மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.
Friday, December 4, 2015
மீட்பு, நிவாரண பணி செய்ய துப்பில்லாத அரசு... எரிமலையாக வெடிக்கும் மக்கள் கோபம்.... ராமதாஸ் காட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment