Thursday, November 26, 2015

மது விலக்கு: நிதிஷ்குமாரின் மக்கள் அக்கறை ஜெயலலிதாவுக்கும் வருமா? ராமதாஸ்

 
மது விலக்கு, நிதிஷ்குமாரின் மக்கள் அக்கறை ஜெயலலிதாவுக்கும் வருமா? என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிகார் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாளிலிருந்து  முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். பிகார் மாநில மக்கள் நலனில் அக்கறை கொண்டு இம்முடிவை எடுத்த அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், நேற்று நடைபெற்ற  மதுவிலக்கு நாள் கொண்டாட்டத்தின் போது மக்கள் மனம் குளிரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ‘‘பிகாரில் மதுவால் பெரும் சீரழிவு ஏற்படுகிறது; குடும்ப வன்முறை அதிகரித்து விட்டது; அடித்தட்டு மக்கள் தங்களின் வருவாயை குடிப்பதற்கே செலவிடுவதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குடும்ப அமைதி ஏற்படும். மதுவுக்காக செலவிடப்படும்  நிதியை சேமித்து குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்துக்கு செலவிட முடியும்’’ என்று நிதிஷ்குமார் கூறியிருக்கிறார். மக்கள் நலனில் அவர் கொண்டிருக்கும் அக்கறையை அவரது உரை காட்டுகிறது.

மதுவுக்கு எதிராக தமிழகத்தில் நடப்பது போன்ற வலிமையான போராட்டங்கள் பிகார் மாநிலத்தில் நடைபெறவில்லை. ஆனாலும், நிதிஷ்குமார் தாமாக முன்வந்து மதுவிலக்கு வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றுகிறார். ஒரு முதல்வர் மக்களை எப்படி நேசிக்க வேண்டும், அவரது தொலைநோக்குப் பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு நிதிஷ்குமார் வாழும் உதாரணமாக திகழ்கிறார். அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை சற்று கூர்ந்து கவனியுங்கள். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களால் 34 ஆண்டுகளுக்கு தொடங்கப்பட்ட போராட்டம் தமிழ்நாட்டில் இப்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. பிகாரில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு என்னென்ன நியாயங்கள் உள்ளனவோ, அதைவிட ஆயிரம் மடங்கு நியாயங்கள் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு சாதகமாக உள்ளன.

4 வயது குழந்தை மது அருந்துவது, பெண்கள் மது அருந்திவிட்டு பொது இடங்களில் தகராறு செய்வது, முதல்முறையாக மது அருந்துபவர்களின் சராசரி வயது முப்பதிலிருந்து 13 ஆக குறைந்தது,  மதுவால் ஆண்டுக்கு 2 லட்சம் அப்பாவி மக்கள் உயிரிழப்பது, ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள் உருவாவது, பள்ளியில் பலகைகளை உடைத்து விற்று, அந்த காசில் மது அருந்தும் அவலநிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டது, இதற்கெல்லாம் மேலாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள  திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்த 11 ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்தி மயங்கி விழுந்தது என மதுவால் ஏற்படும் சீரழிவுகள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் முழு மதுவிலக்கு கோரிக்கையை ஏற்பதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனையை 25% அதிகரிக்க வேண்டும், எந்த திருநாள் வந்தாலும் அந்த நாளில் சில நூறு கோடிகளுக்கு கூடுதலாக  மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கும் தமிழக அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும்?

ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜூலை மாதத்தில் அளித்த வாக்குறுதியை நவம்பர் மாதத்தில் நிதிஷ்குமார் நிறைவேற்றிவிட்டார்.ஆனால், தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டு, அதன்பின் 4 முறை புதுப்பிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் மத்தியில் எழுந்த எழுச்சியைப் பார்த்து அந்த வாக்குறுதியை மீண்டும் தூசு தட்டி எடுத்து ஏமாற்றுவதற்கான நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பிகாரிலும், கேரளத்திலும் மக்கள் நலனில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருப்பதால் அவர்கள் மதுவை அழிக்கிறார்கள்.... ஆனால், ஆள்பவர்களும், ஆண்டவர்களும் மது ஆலைகளை நடத்தும் தமிழகத்தில் மக்கள் உழைத்து ஈட்டும் பணத்தின் மீது தான் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருப்பதால், மதுவைக் கொடுத்து மக்களை அழிக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஒருவேளை தமிழகத்தை ஆட்சி செய்யும் ஜெயலலிதா அவர்களுக்கு மக்கள் நலனில் சிறிதளவேனும் அக்கறை இருந்தால் தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றும் வகையில் உடனடியாக மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஏற்கனவே நாங்கள் வாக்குறுதி அளித்தவாறு எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைந்தவுடன் முதல் நாள்... முதல் கையெழுத்து முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவில் இடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: