Tuesday, July 2, 2013

டீசல் விலை ரூ.50 பைசா உயர்வு: மக்கள் விரோத நடவடிக்கை: ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய ஆதாரமாக கருதப்படும் டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. மாநில அரசால் வசூலிக்கப்படும் மதிப்பு கூட்டு வரியுடன் சேர்த்து டீசல் விலை லிட்டருக்கு 62 பைசா உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரைரூ.53.64 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 54.16 ஆக அதிகரிக்கும். டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறி கடந்த 6 மாதங்களாகவே டீசல் விலையை மத்திய அரசு மாதம் தோறும் உயர்த்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.50.13 ஆக இருந்த டீசல் விலை தற்போது ரூ.54.16 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த 5 மாதங்களில் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய்க்கும் கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் டீசல் விற்பனையில் லிட்டருக்கு 8 ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படுவதாகவும், இதுவும் படிப்படியாக மக்கள் மீது சுமத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்து வரும் தவறான கொள்கைகளால் மக்கள் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். அரிசியில் தொடங்கி காய்கறிகள், இறைச்சி வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. அதேநேரத்தில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் டீசல் விலை மீண்டும்  உயர்த்தப்பட்டிருப்பது உணவு உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுப் பொருட்களின் விலைகள் உயரவே  வகை செய்யும்.

 இதையெல்லாம்  மத்திய அரசு உணர்ந்திருந்தும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு, எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு என ஏழை மக்களால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களைக் கூறி டீசல் விலையை உயர்த்தி இருப்பது கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும். இது மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கை ஆகும்.

எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். டீசல் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் கடமை தமிழக அரசுக்கும் உணடு. கடந்த 6 மாதங்களில் டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மாநில அரசுக்கு லிட்டருக்கு சுமார் 84 பைசா வீதம் கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. தமிழக மக்களின் நலனில் அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், மக்களுக்கு ஓரளவாவது நிவாரணம் அளிக்கும் வகையில் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: