சமூக விரோத சக்திகளால் மருத்துவர் அய்யாவின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது - மருத்துவர் அய்யாவின் பாதுகாப்பில் அலட்சியம்: தமிழக அரசுக்கு கண்டன...ம் - பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிக்கை
==================================
தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகளும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவும் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விசயத்தில் தமிழக அரசு மிகுந்த அலட்சியத்துடனும், பழி வாங்கும் உணர்வுடனும் நடந்து கொள்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் அய்யா அவர்கள் கல்வி, சமூகநீதி உள்ளிட்ட மக்களை பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் போராடி வருகிறார். மதுவுக்கும், புகையிலைக்கும் எதிராக மருத்துவர் அய்யா நடத்தி வரும் போராட்டங்கள் ஒட்டு மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைப்பவை ஆகும். மருத்துவர் அய்யா வலியுறுத்தி வரும் கொள்கைகளால் பாதிக்கப் பட்டுள்ள வலிமை வாய்ந்த சமூக விரோத சக்திகளால் மருத்துவர் அய்யாவின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் அய்யா அவர்கள் புதுச்சேரி மாநிலம் அபிஷேகப் பாக்கம் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கும்பல் கொலைவெறி தாக்குதலை நடத்தியது. அப்போது மருத்துவர் அய்யாவின் பாதுகாப்புக்காக வந்த தொண்டர்கள் சமயோசிதமாக செயல்பட்டு, அவரது உயிரைக் காப்பாற்றினர்.
மருத்துவர் அய்யாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த தமிழக அரசு, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பு அளித்து வந்தது. மருத்துவர் அய்யாவின் இல்லத்திற்கும், அவர் செல்லுமிடங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டு வந்தனர். நிகழ்ச்சிகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லும்போது அம்மாவட்ட காவல்துறையினரும் பாதுகாப்புக்கு வருவது வழக்கமாகும். கடந்த சில மாதங்களாக மருத்துவர் அய்யாவுக்கு அச்சுறுத்தல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் தமிழக அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முறையீடு அளிக்கப்பட்டது. ஆனால், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 26.04.2013 முதல் மருத்துவர் அய்யாவுக்கும், அவரது இல்லத்திற்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென திரும்பப்பெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து கடந்த ஆண்டு இறுதியிலும், நடப்பாண்டின் தொடக்கத்திலும் மிரட்டல் கடிதங்கள் வந்தன. அதேபோல், பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு அவர்களுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இவை குறித்து, மிரட்டல் கடிதங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் கடந்த 03.01.2013, 19.02.2013 ஆகிய நாட்களில் தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோரிடம் நானும், பா.ம.க.வின் மாநில நிர்வாகிகளும் எழுத்துப் பூர்வமாக புகார் செய்தோம். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாசு, பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். மருத்துவர் அன்புமணி இராமதாசு கடந்த 27.02.2013 அன்று காவல்துறைத் தலைமை இயக்குனரை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை மனுவாக அளித்தார்.
அதன் பின்னர் பலமுறை இந்த அதிகாரிகளை நான் நேரில் சந்தித்து இக்கோரிக்கைகள் குறித்து நினைவூட்டினேன். ஆனாலும் பயனில்லை. மருத்துவர் அய்யா, அன்புமணி இராமதாசு, ஜெ.குரு ஆகியோருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர் அய்யா அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றதும், மற்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுப்பதும் கடுமையாக கண்டிக்கத் தக்கவை ஆகும்.
மருத்துவர் அய்யா உள்ளிட்ட பா.ம.க. தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதையும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையும் காவல்துறை அதிகாரிகளே தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அனைத்து சமுதாய பேரியக்கக் கூட்டங்களின்போது சென்னை, மதுரை, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கறுப்புக்கொடி போராட்டம் என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மருத்துவர் அய்யா அவர்களை தாக்க முயன்றனர் என்பதும் காவல்துறைக்கு தெரியும். ஆனாலும், பாதுகாப்பு வழங்க இன்று வரை அரசு முன்வராததற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் பொதுமக்களே சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில், மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாசு, ஜெ.குரு ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க மறுப்பதன் மூலம் என்ன நடக்க வேண்டும் என தமிழக அரசு விரும்புகிறது? என்பது தெரியவில்லை.
முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அவருக்கு வழங்கப்பட வேண்டியதை விட அதிகமாகவே, கறுப்புப் பூனை படையினர் 12 பேர், தமிழக காவல்துறை சார்பில் இரு துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 75 பேரைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் ஓய்வெடுப்பதற்காக செல்லும் கொடநாடு மாளிகை, சிறுதாவூர் மாளிகை ஆகியவற்றுக்கும், ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவை போதுமானதாக இல்லை என்று கூறி கடந்த 2008-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பைப் பெற்றார். அதன்பின், 2010-ஆம் ஆண்டில் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமரை சந்திக்க வைத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி வலியுறுத்தச் செய்தார்.
தமக்கும், தாம் ஓய்வெடுக்கும் மாளிகைகளுக்கும் கூட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, பா.ம.க. தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையினரே ஒப்புக் கொண்ட பிறகும், மருத்துவர் அய்யாவுக்கு 15 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு திடீரென திரும்பப் பெற்றதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதாகவே தோன்றுகிறது. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன; அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சேலம் நிகழ்விற்குப் பிறகாவது பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு, பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு ஆகியோருக்கு தமிழக அரசு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Tuesday, July 23, 2013
மருத்துவர் அய்யாவின் பாதுகாப்பில் அலட்சியம்: தமிழக அரசுக்கு கண்டன...ம் - பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment