Saturday, July 27, 2013

அமைச்சர்களை நீக்குவாரா? முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவாரா? ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கேள்வி!



பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 27.07.2013 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிகையில்,

கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 151 பேரில் 16 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம், மேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.சாமி, ஆண்டிப்பட்டி தங்கத் தமிழ்ச்செல்வன், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் வெற்றிவேல், கரூர் செந்தில் பாலாஜி, கோபிச் செட்டிபாளையம் கே.ஏ. செங்கோட்டையன், அரியலூர் துரை. மணிவேல், நன்னிலம் ஆர். காமராஜ், கிருஷ்ணராயபுரம் எஸ். காமராஜ், மதுரை தெற்கு செல்லூர் ராஜு, ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி. சண்முக நாதன், நெய்வேலி எம்.பி.எஸ். சுப்பிரமணியன், மானாமதுரை எம்.குணசேகரன், நாகர்கோவில் நாஞ்சில் முருகேசன், மணப்பாறை சந்திரசேகரன், சாத்தூர் ஆர்.பி. உதயக்குமார் ஆகியோர் மீது பல்வேறு கால கட்டங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த 16 பேரில் 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 15-ஆம் தேதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘‘ ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால், ஜனநாயக ரீதியில், அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும்; வன்முறை மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்கமுடியாது. கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் கடமை ஆகும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் கூறிய முதலமைச்சர் அதை தாமும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யயாததுடன், பொதுச் சொத்துக்களை சேதப் படுத்தியவர்களையும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியவர்களையும் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார். இதன்மூலம் பேரூந்துகளை எரித்தவர்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கும் தான் அ.தி.மு.க.வில் பதவி வழங்கப்படும் என்று மறைமுகமாக கூறுகிறாரா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கி, பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பில் அவர்களையே அமர்த்துவதைவிட ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயல் எதுவும் இருக்க முடியாது. தாம் வகிக்கும் முதலமைச்சர் பதவி மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே மரியாதை இருக்குமானால், சட்டப்பேரவையில் கூறியவாறு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாற்றுக்கு ஆளாகியிருக்கும் 5 அமைச்சர்களையும், 11 சட்டப்பேரவை உறுப்பினர்க¬ளையும் பதவி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, அ.தி.மு.க.வினரால் சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களுக்காக இழப்பீட்டை கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவே செலுத்த வேண்டும். இதற்கெல்லாம் மேலாக பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சக்திகளுக்கு அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வழங்கி ஊக்குவித்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: