Thursday, July 11, 2013

பா.ம.க.வுக்கு எதிரான அடக்குமுறை: தமிழக ஆட்சியாளர்கள் பதில் கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை: அன்புமணி

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் 11.07.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மரக்காணம் கலவரத்தில் இரு அப்பாவி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு அறவழியில் போராடிய ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி முன்னணி நிர்வாகிகளுக்கு எதிராக தமிழக அரசு மிகக்கொடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
விழுப்புரத்தில் போராட்டம் நடத்துவதற்காக சென்ற பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசை கைது செய்து 12 மணி நேரத்திற்கும் மேலாக சட்டவிரோதக் காவலில் வைத்திருந்த தமிழக அரசு, 20 மணி அலைக்கழிப்புக்குப் பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. ஒரு வழக்கில் பிணை கிடைத்தாலும் விடுதலையாகி விடக் கூடாது என்பதற்காக அடுத்தடுத்து 5 பொய்வழக்குகளில் அவரை தமிழக அரசு கைது செய்தது.
சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத கொட்டடியில் அடைத்த அரசு, மருத்துவ உதவிகளையும் வழங்க மறுத்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல், என்னையும், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட நிர்வாகிகளையும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களையும் கைது செய்த காவல்துறை சிறைகளில் அடைத்து பல்வேறு  இன்னல்களுக்கு உள்ளாக்கியது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக இந்தியாவில் இதுவரை இல்லாத அடக்குமுறையாக ஜெ.குரு உள்ளிட்ட 122 பேரை குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குருவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி நீதிமன்றம் ஆணையிட்டும், அவருக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு  மறுத்து வருகிறது.
தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகள் கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகும். அரசியல் சட்டத்தின்படி தனி மனிதர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை மனித உரிமைகளை சற்றும் மதிக்காமல் தமிழக அரசு செயல்படுவது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணனை கடந்த ஜூன் 6ஆம் தேதி தில்லியில் சந்தித்து மனு அளித்தேன்.
அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் எனது முறையீடு குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. தமிழ்நாட்டில் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதற்கும், மனித உரிமைகள் மீறப்பட்டதற்கும் முதல்நோக்கு ஆதாரம் இருப்பதை உறுதி செய்த தேசிய மனித உரிமை ஆணையம், எனது முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனருக்கும் ஆணையிட்டிருக்கிறது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்யும்படி ஜூன் 29ஆம் தேதியிட்ட கடிதம் மூலமாக தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான முதல் நடவடிக்கை ஆகும்.
ஆனால், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுக்குப் பிறகும் தமிழக அரசு அதன் மனித உரிமை மீறல் போக்கை நிறுத்திக்கொள்ளவில்லை. ஜெ.குரு உள்ளிட்ட 20 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டும், அதை மதிக்காமல் அவர்கள் அனைவரையும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டங்களில்  தமிழக அரசு மீண்டும் கைது செய்திருக்கிறது. பயங்கரவாதம் தலைவிரித்தாடும் ஜம்மு காஷ்மீரில் கூட கடந்த சில ஆண்டுகளில் 86 பேர் மீது மட்டுமே தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே மாதத்தில், ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 122 பேர் மீது தடுப்புக் காவல் சட்டம் ஏவப்பட்டிருப்பது மனித உரிமை மீறலின் உச்சகட்டமாகும். இதற்கெல்லாம் தமிழக ஆட்சியாளர்களும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளும் பதில் கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: