Wednesday, July 24, 2013

மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடி... தண்ணீர் திறக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட சாகுபடிக்கு அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவது காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அதேநேரத்தில் குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் விசயத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்து வருவது கவலையை உருவாக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டதாலும், பருவமழை பொய்த்ததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி குறிப்பிடத்தக்க பரப்பளவில் நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிரும் வறட்சி காரணமாக கருகியது.வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் போதிய அளவு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், நடப்பாண்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்தால் தான் கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பின் ஒரு பகுதியையாவது ஈடுகட்ட முடியும்.குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், நடப்பாண்டில் ஜூலை மாதம் முடிவடையப் போகும் நிலையிலும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.குறுவை சாகுபடி ஏற்கனவே 50 நாட்கள் தாமதமாகிவிட்ட நிலையில், இப்போதாவது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் தான் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அறுவடை செய்ய முடியும்; இல்லாவிட்டால் வடகிழக்கு பருவ மழையால் பயிர்கள் சேதம் அடைந்துவிடும்.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 83 அடியாக(45 டி.எம்.சி) உள்ளது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 75 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் நீர்வரத்து இனி வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும். கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அம்மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டதாலும் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து இப்போதே தண்ணீர் திறந்து விடப்பட்டால், பின்பருவ பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் போய்விடுமோ என்று தமிழக அரசு அஞ்சத் தேவையில்லை.மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால், வீராணம் ஏரியை நிரப்பி அதன்மூலம் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டையும் போக்க முடியும். எனவே, காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நலனையும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையையும் கருத்தில் கொண்டு, இனியும் தாமதிக்காமல் மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீரை திறந்து விட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: