பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 20.07.2013 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாரதீய ஜனதாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மூத்த தணிக்கையாளருமான இரமேஷ் சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தணிக்கையாளர் இரமேஷின் வீட்டு வளாகத்தில் பதுங்கியிருந்த கொலைகாரர்கள் தான் அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இரமேஷின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே முறையீடு அளித்திருந்த போதும், அவருக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை தவறிவிட்டது. ஒரு தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் படுகொலையை காவல்துறை தடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.
கடந்த 9 மாதங்களில் மட்டும் இவர் சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த கொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது தமிழகக் காவல்துறையின் திறமையின்மையை காட்டுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன; 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரோ, பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வது, அப்பாவித் தொண்டர்களை குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டங்களில் கைது செய்து சிறையில் அடைப்பது, பா.ம.க. மீது அவதூறு பரப்புவது ஆகியவற்றில் மட்டுமே அக்கறை காட்டி வருகிறார். பா.ம.க.வினரை பழிவாங்குவதில் காட்டும் தீவிரத்தில் பத்தில் ஒரு பங்கை சட்டம் & ஒழுங்கை பாதுகாப்பதில் காட்டியிருந்தால் இது போன்ற படுகொலைகளை தடுத்து, தமிழகத்தை அமைதிப் பூங்காவாக பராமரித்திருக்க முடியும்.
ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது சாதாரணமானதாக தோன்றவில்லை. இதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். இந்த கொலைகளுக்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தலைவர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment