ஒரே மாதத்தில் மூன்று முறை பெட்ரோல் விலை உயர்த்துவதென்பது மக்கள் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்ததைக் காரணம் காட்டி பெட்ரோல் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.2.32 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் ரூ. 69.39 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இப்போது ரூ.71.71 ஆக அதிகரித்திருக்கிறது.
கடந்த ஜூன் முதல் தேதியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் கடந்த 16&ஆம் தேதி மீண்டும் ரூ.2.54 உயர்த்தப்பட்டது. இப்போது மூன்றாவது முறையாக லிட்டருக்கு ரூ.2.32 உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரே மாதத்தில் மூன்று முறை பெட்ரோல் விலையை உயர்த்துவதென்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாகும். பெட்ரோல் விலை நிர்ணய கொள்கையின் படி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலையில், 12 நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களின் வயிற்றில் தீயை வார்த்திருக்கிறது மத்திய அரசு. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5.85 , அதாவது , சுமார் 10 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மக்கள் மீதான மனித நேயமற்ற தாக்குதல் ஆகும். இவ்வளவு கடுமையான விலை உயர்வை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள இயலாது. அடுத்தகட்டமாக, ஓரிரு நாட்களில் டீசல் விலையையும் கடுமையாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டதால் மக்களின் அன்றாட வாழ்க்கையே பெரும் போராட்டமாகியிருக்கிறது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களைக் கூறி பெட்ரோல், டீசல் விலைகளை மாதம் இரண்டு முறை அல்லது மூன்று முறை உயர்த்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ரூபாய் மதிப்பு ஏறுவதும், இறங்குவதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். இதன் தாக்கம் தற்காலிகமானதே. மத்திய அரசு வசூலிக்கும் சுங்க வரி, கலால்வரி, மாநில அரசு வசூலிக்கும் மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் இதை சமாளிக்க முடியும். அதை விடுத்து இந்த சுமையை மக்கள் மீது சுமத்தியதன் மூலம் மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பதை மத்திய அரசு நிரூபித்திருக்கிறது. ஏழை, எளிய மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக அவதிப்பட்டு வருவதால், அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment