அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழக அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பிரிவு அதிகாரிகளாக பணியாற்றி வரும் 85 பேருக்கு போதிய கல்வித் தகுதி இல்லை என்று கூறி பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப் பட்டிருக்கிறது.
இது ஒரு தொடக்கம் தான் என்றும், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றிவரும் ஊழியர்களின் பணி ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அந்தப்பணி முடிவடைந்த பின்னர் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் ஆபத்து இருப்பதாகவும் பல்கலைக்கழக பணியாளர் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முந்தைய நிர்வாகத்தில் விதிமுறைகள், கல்வித்தகுதிகள் உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல் ஆசிரியப் பணியாளர்களும், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர் என்பதை மறுக்க முடியாது. தமிழக அரசின் நிதி உதவியைக் கொண்டு தான் இந்தப் பல்கலைக் கழகம் செயல்பட்டு வந்தது என்பதால் இந்த முறைகேடுகளை அப்போதே தமிழக அரசு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறிவிட்ட தமிழக அரசு, இப்போது தமது புதிய நிர்வாகத்தின் மூலம் போதிய தகுதி இல்லை என ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்யத் துடிப்பது முறையல்ல.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, 4500-க்கும் அதிகமான பணியாளர்களை பணி நீக்கம் செய்யவும், மீதமுள்ள ஊழியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது. அதை எதிர்த்து பணியாளர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியததைத் தொடர்ந்து தான், பல்கலைக் கழக நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.
எந்த நேரமும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ள பல்கலைக் கழக ஊழியர்களிடையும், மாணவர்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே பல்கலைக்கழகத்தை அரசே ஏற்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இப்போது தகுதியில்லை என்று கூறி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது ஏற்கனவே அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயலாகும்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவர்களில் பலரும் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்கள் ஆவர்; இவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள் என்பதால், இவர்களை இப்போது திடீரென பணி நீக்கம் செய்தால் அவர்களும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்திலும் மீண்டும் அமைதியற்ற சூழல் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே இப்பிரச்சினையை தமிழக அரசு கருணையுடன் அணுக வேண்டும்.
இதுபோன்ற சூழல் ஏற்படும் போதெல்லாம், சம்பந்தப்பட்டப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக, அவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து, அதற்குள் கல்வித் தகுதியை பெற்றுக்கொள்ளலாம் என்று சலுகை அளிப்பது தான் கடந்த கால நடைமுறை ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லை என்று பணி நீக்கம் செய்யப்பட உள்ள ஊழியர்கள் விவகாரத்திலும் தமிழக அரசு இதே அணுகுமுறையை கடைபிடித்து, அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Wednesday, July 17, 2013
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment