சென்னை: மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது
அதுமட்டுமின்றி அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.தமிழகத்தின் மிகப்பெரிய சீர்கேடாக மது உருவெடுத்திருக்கிறது. மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதைத் தான் கோவன் அவரது பாடலில் விவரித்திருக்கிறார்.கோவனின் பாடலில் உள்ள சில ரசனைக் குறைவான வார்த்தைகளை ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் மதுவால் தமிழ்நாட்டில் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் பாடல்களில் இடம் பெற்றுள்ள கருத்துகள் உண்மையானவை. இந்த உண்மையை கூறியதற்காக ஒருவர் மீது தேசத் துரோக வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது.அடுத்தகட்டமாக கோவனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இது மனிதத் தன்மையற்ற செயலாகும். மது விற்பனையையே கடமையாகக் கொண்ட ஆட்சியாளர்களிடம் இதை எதிர்பார்க்கவும் முடியாது.தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதாக கூறி மாறி மாறி ஆட்சி செய்யும் திமுகவும், அதிமுகவும் மதுவைக் கொடுத்து மக்களுக்கு செய்த தீமைகள் மன்னிக்க முடியாதவை. டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர், கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை மதுவைக் கொடுத்து பறித்திருக்கிறார்கள்.தமிழக அரசே மது விற்கத் தொடங்கியதற்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை சரி செய்வதற்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மக்களால் செலவிடப்பட்டிருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 28 லட்சம் பேர் மது போதையால் இறந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் கைம்பெண்கள் ஆன கொடுமை நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிறுவர்களும், பெண்களும் புதிதாக மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே மதுவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வின் பயனாக மதுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், உளவுத்துறை மூலம் சில அரசியல் கட்சிகளின் உதவியுடன் அந்த போராட்டத்தை தமிழக அரசு திசை திருப்பி மழுங்கடித்தது.அதிமுக மற்றும் திமுக அரசுகள் இதைத் தான் செய்யும்; இதைத் தான் அவர்களால் செய்ய முடியும். அக்கட்சிகளால் போராட்டங்களையும், போராட்டக் காரர்களையும் ஒடுக்கத் தான் முடியுமே தவிர, மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய முடியாது.அதே நேரத்தில், மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய யாரால் முடியும் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மக்கள் தங்கள் உணர்வை வாக்குகளாக வெளிப்படுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment