மக்களுக்காக வாழ்கிறாரா ஜெயலலிதா? தமிழக மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் 44 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் தொண்டர்களுக்கு அதன் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மடல் எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாசகங்களைப் பார்க்கும் போது உருக்கமாக பேசி தமிழக மக்களை மிக எளிதாக ஏமாற்றி விட முடியும் என்பதில் ஜெயலலிதா அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
‘தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று ஜெயலலிதா அவரது மடலில் கூறியிருக்கிறார். ‘படிப்பது இராமாயணம். இடிப்பது பெருமாள் கோவில்’என்றொரு பழமொழி உண்டு. அதேபோல் தான் இப்போதைய நான்கரை ஆண்டு கால ஆட்சியில் மட்டுமின்றி, இதற்கு முந்தைய பத்தாண்டு கால ஆட்சியிலும் மக்கள் விரோத திட்டங்களை மட்டுமே செயல்படுத்திய ஜெயலலிதா மக்களின் மகிழ்ச்சி மட்டும் தான் எனது லட்சியம்... அவர்களுக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் என்று கூறுவது மிகக் குரூரமான நகைச்சுவை; மக்களை ஏமாற்றும் முயற்சி என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
2011&ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற போது மக்களுக்கு சேவை செய்வது தான் எனது நோக்கம் என ஜெயலலிதா கூறினார். அந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை இனிப்பு பூசப்பட்ட வார்த்தைகள் தொடர்ந்தன. உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த சில நாட்களில் பால் விலை, பேரூந்து கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி ரூ.20,000 கோடி சுமையை மக்கள் தலையில் சுமத்தியவர் ஜெயலலிதா. அதே ஆண்டில் வரி இல்லாத நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ததாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அதற்கு முன்பாகவே ரூ.4,200 கோடி அளவுக்கு மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி மக்களை வதைத்தவர் தான் ஜெயலலிதா. அடுத்த ஆண்டில் நிலங்களின் வழிகாட்டு மதிப்பை உயர்த்தி சுமார் ரூ.5,000 கோடியை மக்களிடமிருந்து பறித்து ஏழைகள் சொந்தமாக நிலம் வாங்க முடியாத சூழலை உருவாக்கியவர் இதே ஜெயலலிதாதான்.
அதுமட்டுமின்றி, அடுத்த மூன்றாண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். ஆனால், பால் கொள்முதல் விலையை அதே அளவுக்கு உயர்த்தாததுடன், கொள்முதலும் செய்யாததால் பாலை தரையில் கொட்டும் அவலம் நிலவுகிறது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.7350 கோடிக்கு இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு ஷாக் கொடுத்தவரும் இவர் தான். மின்சாரமே வழங்காமல் மின் கட்டணத்தை உயர்த்திய சாதனை ஜெயலலிதாவையே சாரும். நான்கரை ஆண்டு கால ஆட்சியில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு வரிச் சுமையை சுமத்தி விட்டு, மக்கள் மகிழ்ச்சியே தமது லட்சியம் என்று கூறுவது மனசாட்சி இல்லாதவர்களுக்கு மட்டுமே சாத்தியம்; அதனால் தான் இது ஜெயலலிதாவுக்கு சாதாரணம்.
மது விற்பனையும், மிடாஸ் வருமான அதிகரிப்பும் தான் நான் காண விரும்பும் இலக்குகள் என்று ஜெயலலிதா கூறியிருந்தால் அது மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். 2011&ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்கும் போது தமிழகத்தின் மது விற்பனை ரூ.14,965 கோடியாக இருந்தது. அதிமுக ஆட்சி முடியப்போகும் நடப்பாண்டில் ரூ.30,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நடப்பு 5 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. அப்படியானால் குறைந்தது ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பணத்தை ஏழைகளிடமிருந்து மதுவைக் கொடுத்து ஜெயலலிதா பறித்திருக்கிறார். 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் ஜெயலலிதா விற்பனை செய்த மதுவைக் குடித்து உயிரிழந்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள் புதிதாக உருவாகியிருக்கிறார்கள். 4 வயது குழந்தை, பள்ளி மாணவ, மாணவியர் தொடங்கி பெண்கள் வரை மதுவுக்கு அடிமையாகிருக்கிறார்கள். லட்சக்கணக்கான குடும்பங்கள் மதுவால் சீரழிந்திருக்கின்றன. மதுவையும், தேவையற்ற வரி உயர்வுகளையும் ஜெயலலிதா திணிக்காமல் இருந்திருந்தாலே மக்கள் மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியடைந்தும் இருந்திருப்பார்கள். ஆனால், மக்களின் துயரங்களுக்குக் காரணமாக ஜெயலலிதா மக்களின் மகிழ்ச்சியை பற்றி பேசுவது கண்டிக்கத் தக்கது.
‘எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் இல்லை. நான் வாழ்வதே தமிழக மக்களுக்காகத் தான்’ என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் இவ்வாசகங்கள் ஏதேனும் திரைப்படத்தில் வசனமாக இடம் பெற்றிருந்தால் கைத்தட்டல் பெற்றிருக்கும். அந்த நம்பிக்கையில் தான் தமிழகத்தையே நாடக மேடையாக்கி, மக்களை ஏமாற்றுவதற்கான வசனங்களை பேசிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட வாழ்வும், தனிப்பட்ட எதிர்பார்ர்புகளும் இல்லாததால் தான் தினம் தோறும் அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஊழல் பணம் வசூலிக்கப்படுகிறதா? எதிர்பார்ப்பே இல்லாத ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் 898 ஏக்கரில் மாளிகை, சிறுதாவூரில் 25.4 ஏக்கரில் பண்ணை வீடு, பையனூரில் 3 ஏக்கரில் பண்ணை வீடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 1190 ஏக்கர் நிலம், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 1167 ஏக்கர் நிலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 300 ஏக்கர் நிலம், முதல் 5 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் 23 கிலோ தங்க நகைகள் ஆகியவை எதற்காக? இவை உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? இந்த மாளிகைகளும், பிற சொத்துக்களும் மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்து சேர்த்தவை தானே ?
ஜெயலலிதா மக்களை ஏமாற்றி, ஊழல் செய்து சொத்துக் குவிக்கவில்லை என்பதை நம்புவதைப் போல தப்புக் கணக்கு குமாரசாமிகள் வேண்டுமானால் நடிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இனியும் இந்த நாடகங்களை நம்பத் தயாராக இல்லை. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பும் போது இந்த உண்மையை ஜெயலலிதா புரிந்து கொள்வார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment