பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் சீரமைப்பு குறித்த மத்திய அரசின் கருத்துரு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு மாளிகையில் ஆலோசனை நடத்தியுள்ளார். இக்கூட்டத்தின் முடிவு குறித்து தெரியவில்லை. ஆனால், மின்வாரிய நிதி சீரமைப்புக்கான நிபந்தனைகள் கடுமையானவை என்பதால் மக்களை பாதிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் குஜராத் தவிர மற்ற மாநிலங்களின் மின்வாரியங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளன. மாநில மின்வாரியங்களின் மொத்த கடன்சுமை ரூ.4,22,400 கோடியாக அதிகரித்திருக்கிறது. இவற்றில் தமிழ்நாடு மின்சார வாரியம் தான் மிக அதிக அளவாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக கடன் சுமையில் சிக்கித் திணறுகிறது. இதனால் மின்வாரியங்கள் புதிய திட்டங்களைச் செயல்படுத்த எந்த வங்கியும் கடன் தர முன்வருவதில்லை. இந்த நிலையை மாற்றும் நோக்குடன் மாநில மின்வாரியங்களின் கடன் சுமைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இத்திட்டத்தின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவையாக உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ள நிலையில், அது பற்றி தான் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார்.
மின்வாரிய கடன் சீரமைப்புத் திட்டத்தின்படி மத்திய அரசின் நிதி உதவியை பெற வேண்டுமெனில்...
1. ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டணத்தை குறிப்பிட்ட சதவீதம் உயர்த்த வேண்டும்,
2. விவசாய பயன்பாட்டுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை முதல்கட்டமாக மீட்டர் பொருத்தி அளவிட வேண்டும். அடுத்த கட்டமாக அந்த மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும்,
3. மின் பகிர்மான கழகத்தை பல கிளைகளாக பிரிக்க வேண்டும்,
4. தனியாரிடமிருந்து அதிக கட்டணத்திற்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்,
5. மின்வாரியங்கள் சொந்தமாக அனல் மின் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் அமைத்து குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க வேண்டும்.
& என்பன உள்ளிட்ட ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றில் கடைசி மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றுவதால் சாதகமான தாக்கங்கள் தான் ஏற்படும். தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும், தமிழ்நாடு மின்வாரியமே அதிக எண்ணிக்கையில் அனல் மின் நிலையங்களை அமைத்து குறைந்த செலவில் மின்சாரத்தை தயாரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உண்மையில் இந்த இரு அம்சங்களையும் தமிழக அரசும், மின்வாரியமும் இதுவரை கடைபிடிக்காதது தான் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக கடன் சுமையில் சிக்கிக் கொண்டதற்கு காரணமாகும்.
அதேநேரத்தில் முதல் இரு பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் தமிழக மக்களும், உழவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 2011&ஆம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.7874 கோடிக்கும், 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.7350 கோடிக்கும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்தது. அதேபோல், உழவர்களுக்கு தினமும் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கி, போதிய அளவு நீர் பாய்ச்ச முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தினால் அதை மக்களால் தாங்க முடியாது. அதேபோல், வேளாண்மை லாபமற்ற தொழிலாக மாறிவிட்ட நிலையில், உழவர்களுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க வேண்டியது கட்டாயமாகும். ஏற்கனவே கடந்த 2003 ஆவது ஆண்டில் விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தவர் தான் ஜெயலலிதா என்பதால், இம்முறையும் அதே பாதகத்தை செய்து விடுவாரோ? என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
தமிழ்நாடு மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம் அதில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளும், ஊழல்களும் தான். அதிக எண்ணிக்கையில் மின் திட்டங்களைச் செயல்படுத்தி குறைந்த செலவில் மின்சாரத்தை தயாரித்தாலே அடுத்த சில ஆண்டுகளில் கடனைக் குறைத்து மின்வாரியத்தின் நிதிநிலையை சீரமைக்க முடியும். இதற்கான செயல்திட்டங்கள் பா.ம.க. வரைவுத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. எனவே, மின் கட்டணத்தை உயர்த்துதல், விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பரிந்துரைகளை ஒரு போதும் தமிழக அரசு ஏற்கக்கூடாது. இது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை முதலமைச்சர் ஜெயலலிதா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment