Wednesday, October 21, 2015

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ்


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் : -

தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக வார்த்தைக்கு வார்த்தை கூறும் முதலமைச்சர் ஜெயலலிதா செயலில் மட்டும் அதை காட்டுவதில்லை. பொதுமக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இந்த ஆட்சியில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட வசதியாக ஒரு மாதத்திற்கு முன்பாக ரூ. 5000 முன்பணம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தீபாவளி திருநாளுக்கு இன்னும் 3 வாரங்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், இதுவரை முன்பணம் வழங்கப்படவில்லை. அதேபோல், தீபாவளி திருநாளையொட்டி போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும். நடப்பாண்டில் எத்தனை விழுக்காடு போனஸ் என்பது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சு நடத்த வேண்டும். இதற்கான கால அவகாசத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பாக போனஸ் குறித்த பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை  அதற்கான அறிகுறிகள் கூட இதுவரை தென்படாததால் ஊழியர்களிடையே மனக்குறை நிலவுகிறது.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு  பதவியேற்றதில் இருந்தே போக்குவரத்துக்கழக தொழிலாளர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 19 மாதங்கள் தாமதமாக கையெழுத்திடப்பட்ட நிலையில்,  அந்த காலத்திற்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ரூ. 300 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. அதேபோல், 5 ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புத் தொகை ரூ. 700 கோடி, அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை ரூ.140 கோடி, நான்கரை ஆண்டுகளில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1400 கோடி, வருங்கால வைப்பு நிதியாக வசூலிக்கப்பட்டு வைப்பு நிதி நிறுவனத்திடம் செலுத்தப்படாத தொகை ரூ. 4,000 கோடி என தொழிலாளர்களுக்கு மட்டும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் ரூ.6540 கோடி பாக்கி வைத்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் நலனில் அரசு காட்டும் அக்கறை இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் சமுதாயத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் ஆவர். முன்பணம் மற்றும் போனஸ் முன்கூட்டியே வழங்கினால் தான் தீபாவளியைக் கொண்டாட அவர்கள் தயாராக முடியும். எனவே போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான முன்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன் ஜூலை மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய 6 விழுக்காடு அகவிலைப்படி  உயர்வை உடனடியாக அறிவித்து, அதையும், அதற்கான நிலுவைத் தொகையையும் அக்டோபர் மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்களுக்கும் நடப்பாண்டு தீபாவளிக்கு 25% போனசை ஊதிய உச்சவரம்பின்றி தற்காலிக ஊழியர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் இவ்வாரத்திற்குள் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: