பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கை
’’வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை சிங்களக் கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர். அவர்களுடைய 4 படகுகளையும் சிங்களப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சட்டவிரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆகும்.
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை அத்துமீறி சிங்களப் படையினர் கைது செய்வது வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டது. இந்தியத் தரப்பில் அதிக அழுத்தம் தரப்பட்டால் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்படுவதும், படகுகளை சிங்கள அரசே வைத்துக் கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக பறிப்பதும் தொடர்கதையாகி விட்டது. இத்தகைய நிகழ்வுகளைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிடுவதும், பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவதும், அக்கடிதம் பிரதமர் அலுவலகக் கோப்பில் உறங்குவதும் வழக்கமான சுழற்சியாகி விட்டதே தவிர மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டு மீனவர்களின் துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
கடந்த 20 நாட்களில் மட்டும் 6 நிகழ்வுகளில் தமிழக மீனவர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய 12 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தவிர தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 26 படகுகள் ஓராண்டிற்கும் மேலாக இலங்கை அரசிடம் உள்ளது. இந்த 6 நிகழ்வுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 6 முறை கடிதம் எழுதியதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் முதலமைச்சர் ஜெயலலிதா எடுக்கவில்லை. அதேபோல் அக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் மத்திய அரசும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய சூழலில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
தமிழக மீனவர்களை இலங்கைப் படைகள் கைது செய்தால் 3 மாதங்களுக்கு சிறையில் அடைத்து வைத்திருப்பார்கள்... அதன்பின்னர் விடுதலை செய்து விடுவார்கள்... இதில் நாம் பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை என்ற மனப் போக்கிலிருந்து மத்திய அரசு மாற வேண்டும். இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்வது இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதை உணர்ந்து, அதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாகவும் அவ்வப்போது குற்றச்சாற்றுக்கள் எழுப்பப்படுகின்றன. அவ்வாறு எல்லை தாண்டுவது தவறில்லை என்பது தான் உண்மை.
இரு நாடுகளுக்கு இடையே கடல் எல்லை மிகவும் குறுகியதாக இருக்கும் போது, ஒரு நாட்டைச் சேர்ந்த மீனவர் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிப்பது சட்டப்பூர்வமான உரிமையாகும். இதை பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்புகள் பல்வேறு தருணங்களில் உறுதி செய்திருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது எல்லை தாண்டினார்கள் என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பான பன்னாட்டு சட்டங்களின் அடிப்படையில் வங்கக்கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்யும் வகையில் இலங்கை & இந்திய அரசுகள் ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.
அதற்கு முன்பாக இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 78 பேரையும், மீனவர்களுக்கு சொந்தமான 38 படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்து விட்டதாக ஜெயலலிதா கருதக் கூடாது. மீனவர்களை மீட்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.’’
No comments:
Post a Comment