Thursday, October 29, 2015

உயர்கல்வியில் இட ஒதுக்கீடு கூடாதா? உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதியை அழிக்கும்; ராமதாஸ்!

உயர்கல்வியில் இட ஒதுக்கீடு கூடாதா? உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதியை அழிக்கும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மருத்துவ உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறித்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடும் (Domicile Reservation) கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். சமூக நீதியின் அடித்தளத்தை தகர்க்கும் வகையிலான இத்தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களில் பிற மாநிலத்தவர்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை என்றும், இந்த நிலையை மாற்றி எல்லா மாநிலங்களிலும் எல்லா மாநிலத்தவருக்கும் இடமளிக்க வேண்டும் என்று ஆணையிடக்கோரி  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அதில் தான் இந்த அறிவுறுத்தல்களை நீதிமன்றம் வழங்கியுள்ளது. உண்மையில் இவ்வழக்கை தொடர்ந்தவர்களின் நோக்கம் வசிப்பிட இடஒதுக்கீடு கூடாது என்பது தான். ஆனால், அதை விடுத்து  உயர்கல்விக்கான, குறிப்பாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்புகளில் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

‘‘உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற பொது நலன் கருதியும், அதனால்  மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்த முடியும் என்பதையும் கருத்தில் கொண்டு உயர்கல்வித் துறையில் இட ஒதுக்கீடு என்பதே கூடாது’’ என 27 ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டியுள்ள நீதிபதிகள், அதே உணர்வை தாங்களும் பிரதிபலிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இதை ஏற்க முடியாது. இட ஒதுக்கீடு  வழங்குவதால் கல்வித்தரம் ஒரு போதும் குறைந்து விடாது. உதாரணமாக தமிழகத்தில் மருத்துவக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயின்ற  மருத்துவர்களில் பலர் நாட்டின் தலைசிறந்த மருத்துவ வல்லுனர்களாக திகழ்வதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

மற்றொருபுறம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தகுதியும் பின்பற்றப்படுவதில்லை; இட ஒதுக்கீடும்  பின்பற்றப்படுவதில்லை. பணம் இருந்தால் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தவர்கள் கூட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்புகளில் சேர முடிகிறது. இன்னும் சில மருத்துவக்கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் ஏலத்தில் விடப்படுகின்றன. இம்முறையில் உயர்படிப்பு படிப்பவர்களால் தரத்தில் ஏற்படாத பாதிப்பு, இட ஒதுக்கீட்டில் படிப்பவர்களால் ஏற்பட்டு விடாது. இத்தகைய தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை முறையை நெறிப்படுத்த கோரும் போதெல்லாம், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தொழில் செய்யும் உரிமையை பறிக்க முடியாது என்று திட்டவட்டமாக தீர்ப்பளித்த  உச்சநீதிமன்றம், இப்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுவது வினோதத்திலும் வினோதமாகும்.

அதுமட்டுமின்றி, இந்தியா சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் ஆன பிறகும் இட ஒதுக்கீட்டு சலுகை மாறாமல் தொடருவதாக நீதிபதிகள் கூறியிருப்பது கவலையளிக்கிறது. இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கான கருவியாகும்.  அவர்கள் சமுதாயத்தில் சம உரிமை, கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழும் நிலை ஏற்படும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். அதற்காக காலக்கெடு நிர்ணயிப்பதே பெரும் சமூக அநீதி ஆகும். சமத்துவம் விரும்பும் சமுதாயத்தில் இத்தகைய சிந்தனைகளுக்கு சிறிதும் இடம் தரக் கூடாது.

அதேபோல், வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு தொடர்பான விஷயத்தில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள சிறப்பு சட்டத்தைக் காரணம் காட்டி, இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என்று கூறிவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து அடுத்த மாதம் 4 ஆம் தேதி முடிவு செய்வதாக அறிவித்துள்ளனர். வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் பொதுவான நிலைப்பாடும் இயற்கை நீதிக்கு எதிரானது ஆகும். தமிழகத்தில்  தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி இடங்களை மற்ற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில், தமிழக அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு இல்லாததால் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாநில ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை பெருகி வரும் நிலையில், மாநில அரசின் சொந்த கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களையும் பறிக்க முயல்வது நீதியான செயலல்ல.

உயர் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் அதன் பார்வையில் சரியாக பட்டாலும், அவை சமூக நீதியை அழித்து விடும் ஆபத்து உள்ளது. எனவே, நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் சமூகம் சார்ந்த இட ஒதுக்கீடும், வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடும் தொடர்வதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: