போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.6540 கோடி நிலுவையை வழங்க வேண்டும் என தமிழக அரசை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த நான்கரை ஆண்டுகளில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களாகத் தான் இருப்பார்கள்.ஒரு பக்கம் பணிச்சுமை, மறுபக்கம் கிடைக்க வேண்டிய பணிப்பயன்கள் கிடைக்காதது என அனைத்து வழிகளிலும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களின் குறைகளைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே கடந்த 2010 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட 11-ஆவது ஊதிய ஒப்பந்தம் 31.08.2013 அன்றுடன் முடிவடைந்து விட்டதால், 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் 01.09.2013 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர் விரோத அ.தி.மு.க. அரசு செய்த தாமதத்தால் 13.04.2015 அன்று தான் புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தம் தாமதமாக கையெழுத்திடப்பட்டாலும், அது 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்து விட்டதால், இடைப்பட்ட 19 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியும் இந்நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி 6 மாதங்களாகியும், வாக்குறுதி அளித்தவாறு ரூ.300 கோடி ஊதிய உயர்வு நிலுவைத் தொகை இன்று வரை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும்போது அதற்கான தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், முந்தைய தி.மு.க. ஆட்சியில் தொடங்கி 5 ஆண்டுகளாக ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புத் தொகை ரூ.700 கோடி வழங்கப்படவில்லை. அதேபோல், அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை 19 மாதங்களுக்கு சுமார் ரூ.140 கோடி இன்னும் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இந்த வகையில் மட்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு போக்குவரத்துக் கழகங்கள் ரூ.1,400 கோடி வழங்க வேண்டும். இந்த தொகையை உடனடியாக வழங்கும்படி அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஆணையிட்ட போதிலும் அதை தமிழக அரசு மதிக்கவில்லை. இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளைக் கூட வட்டிக்கு கடன் வாங்கி நடத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.4,000 கோடி வருங்கால வைப்பு நிதியை வைப்பு நிதி நிறுவனத்திடம் செலுத்தாமல் போக்குவரத்துக் கழகங்களே தங்களின் செலவுக்கு பயன்படுத்துகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியிலிருந்து கடன் கிடைப்பதில்லை.
மேலும், இந்த தொகையை போக்குவரத்துக் கழகங்கள் செலுத்தும் வரை அத்தொகைக்கான வட்டியும் தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்படாது என்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு தொழிலாளர்களுக்கு நேரடியாக சேர வேண்டிய ரூ.2540 கோடி, வருங்கால வைப்புநிதி நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய ரூ.4,000 கோடி என மொத்தம் ரூ.6540 கோடி நிலுவைத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடக்கி வைத்துள்ளன. வருங்கால வைப்பு நிதிக்காக தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை வேறு பயன்பாடுகளுக்கு செலவழிப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால், சட்டத்தை மதிக்காமல் போக்குவரத்துக் கழகங்கள் தங்கள் விருப்பப்படி செயல்படுகின்றன.
தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளிடம் பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர். ஆனால், போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் தொழிலாளர்களுக்குரிய நிலுவைத் தொகையை வழங்க முடியாது என்று கூறியுள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்குவதற்கு காரணம் தமிழக அரசு தான். அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் 422 புதிய பேருந்துகள் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள போதிலும், அவற்றை முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைகளால் தான் தொடங்கி வைக்க வேண்டுமென்று 3 மாதங்களாக இயக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கப்பட்டிருந்த போதும் 500&க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு பல நூறு கோடி ஆகும். இத்தகைய நிர்வாக குளறுபடிகளால் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. இதுபோன்ற தங்களின் தவறுகளுக்கு தொழிலாளர்களை தண்டிப்பது நியாயமில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு அதன் துணை நிதிநிலை அறிக்கையில் வெறும் ரூ. 208 கோடியை ஒதுக்கியிருக்கிறது.
இது யானைப்பசிக்கு சோளப்பொறியைப் போன்றதாகும். எனவே, அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment