பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கையில்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதார அமைச்சராக பதவி வகித்த நான் 2009 ஆம் ஆண்டில் அப்பதவிலியிருந்து விலகினேன். அதன் பின் சில ஆண்டுகள் கழித்து, லக்னோ மற்றும் இந்தூர் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை 2008 ஆம் ஆண்டில் புதுப்பித்து வழங்கியதில் விதிமீறல்கள் நடந்ததாகக் கூறி சிலர் மீது மத்தியப் புலனாய்வுப் பிரிவு(சி.பி.ஐ) வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணையிலும் (Preliminary Enquiry), பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் (First Information Report)) எனது பெயர் இல்லை. ஆனால், 2012-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் அரசியல் காரணங்களுக்காக எனது பெயர் சேர்க்கப்பட்டது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து எனது பெயரை நீக்க வேண்டும் என்று கோரி 2012-ஆம் ஆண்டில் நான் விடுவிப்பு மனு (Discharge Petition) தாக்கல் செய்தேன். அம்மனு கடந்த மூன்றரை ஆண்டுகளாக அடுத்தடுத்து 4 நீதிபதிகளால் விசாரிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்று ஆணை பிறப்பித்த நீதிபதி நான் தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை நிராகரித்திருக்கிறார்.
இந்த ஆணை வழக்கமான நீதிமன்ற நடைமுறை தான். இந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், இது எந்த வகையிலும் பின்னடைவை ஏற்படுத்தாது. இதை எதிர்த்து சட்டப்படியான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நான் மேற்கொள்ள இருக்கிறேன். அதன் முடிவில் எனக்கு நீதி கிடைக்கும்; வழக்கிலிருந்து வெளிவருவேன் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. இது போன்ற வழக்குகளின் மூலம் எங்களின் செயல்பாடுகளை முடக்க முடியாது. ஊழலுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் பயணம் முன்பை விட அதிக வேகத்தில் தொடரும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment