Wednesday, October 14, 2015

வீட்டுக் கடன் மீதான வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்! : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தொழில் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும், அனைவருக்கும் குறைந்த விலையில் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடன் வட்டியை இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ள போதிலும், அதன் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. வாடிக்கையாளர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்தியாவில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கடந்த சில ஆண்டுகளாக கடன்கள் மற்றும் வைப்பீடுகள் மீதான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது. இதனால் தொழில் வளர்ச்சியும், கட்டுமானத் துறையின் வளர்ச்சியும் பின்னடைவை எதிர்கொண்டு வந்தன. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பண வீக்கம் குறைந்து வரும் நிலையில், வட்டியை குறைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தரப்பட்டன. அதன்பயனாக கடந்த மாத இறுதியில் கடன்கள் மற்றும் வைப்பீடுகள் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள்(0.5%) குறைத்தது. இதை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது தான் சரியானதாக இருக்கும். ஆனால், எந்த வங்கியும் வட்டிக் குறைப்பின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை.

உதாரணமாக ரிசர்வ் வங்கி அரை விழுக்காடு வட்டிக்குறைப்பை அறிவித்த நிலையில், பொதுத்துறை பாரத ஸ்டேட் வங்கி 0.20% அளவுக்கும், தனியார் துறையை சேர்ந்த எச்.டி.எஃப்.சி வங்கி 0.25% அளவுக்கும் மட்டுமே வீட்டுக்கடன் வட்டியை குறைத்துள்ளன. ஒரு சில பொதுத்துறை வங்கிகள் இதைவிட குறைவாகவே வீட்டுக்கடன் வட்டியை குறைத்துள்ளன. வேறு சில வங்கிகள் இன்னும் வட்டியை குறைக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி மொத்தம் 1.25% வட்டியைக் குறைத்து உள்ளது. ஆனால், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் அதிகபட்சமாக 0.45% மட்டுமே வட்டியைக் குறைத்துள்ளன. இதனால் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கியில் ரூ.50 லட்சம் வீட்டுக்கடனை 20 ஆண்டுகளில் செலுத்துவதாகக் கூறி ஒருவர் வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம். ரிசர்வ் வங்கி அறிவித்தவாறு  1.25% வட்டிக் குறைக்கப்பட்டிருந்தால் அவருக்கு ரூ.9,83,040 வட்டிக்கழிவு கிடைத்திருக்கும். ஆனால்,  இப்போது ரூ.3,58,080 மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒரு வாடிக்கையாளருக்கு, ரூ.50 லட்சம் கடனுக்கு  ரூ.6,24,960 கூடுதல் வட்டியை வங்கிகள் வசூலிக்கின்றன. அப்படியானால், பல்லாயிரம் கோடி ரூபாய்  வீட்டுக் கடனுக்கு வங்கிகள் பொதுமக்களிடமிருந்து எத்தனை நூறு கோடி ரூபாயை கூடுதல் வட்டியாக வசூலிக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே தலை சுற்றுகிறது. இது ஒரு நவீன கொள்ளையாகும்.

ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தாலும், அதிகரித்தாலும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்குவதில் தயக்கமும், தாமதமும் காட்டும் வங்கிகள், பாதிப்புகளை வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்துவதில் மட்டும் அதீத சுறுசுறுப்பு காட்டுகின்றன. கடந்த ஓராண்டில் ரிசர்வ் வங்கி 1.25% வட்டி குறைத்த நிலையில், வாடிக்கையாளர் பெற்ற கடன் மீது 0.45% மட்டுமே வட்டிக் குறைப்பு செய்துள்ள வங்கிகள், வாடிக்கையாளர்கள் செய்துள்ள வைப்பீடுகள் மீதான வட்டியை 1.30% அளவுக்கு குறைத்து விட்டன. அதேபோல், வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும் போது, வாடிக்கையாளர்கள் பெற்ற  கடன் மீதான வட்டியை உடனடியாக உயர்த்தும் வங்கிகள், அவர்கள் செய்துள்ள வைப்பீடு மீதான வட்டியை அதிகரிப்பதில்லை என்று இந்தியா ரேட்டிங்ஸ் (India Ratings) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வட்டிக் குறைப்பின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்  வங்கிகள் கடைபிடிக்கும் அணுகுமுறை கந்துவட்டிக்காரர்களை விட மிகவும் மோசமான அணுகுமுறையாகும்.

ஒருவர் ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் அடுத்த 20 ஆண்டுகளில் வட்டியாக மட்டும்  குறைந்தபட்சம் ரூ.67.79 லட்சம் செலுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டிக் குறைப்பு அவர்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுக்கும். ஆனால், வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது, அதை அப்படியே வாடிக்கையாளர் தலையில் சுமத்தும் வங்கிகள், வட்டி குறைக்கப்படும்போது அதன் பயன்களை தர மறுப்பது எந்த வகையில் நியாயம்? ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கத் தயங்கியபோது, அதன் ஆளுனரின் அதிகாரத்தை குறைக்க தீர்மானித்த  மத்திய அரசு, இப்போது பொதுத்துறை வங்கிகள் வட்டியை குறைக்க மறுப்பதை வேடிக்கை பார்ப்பது நியாயமா? 

நடுத்தர மக்களின் வீட்டுக் கனவை சிதைக்கும் வங்கிகளின் இப்போக்கை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ரிசர்வ் வங்கி அறிவித்தவாறு அனைத்து வங்கிகளும் வீட்டுக் கடன் வட்டியை உடனடியாக 1.25% குறைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: