Wednesday, September 30, 2015

நீதி கிடைக்க பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்ற விசாரணை தேவை: ஐ.நா. மனித உரிமை பேரவையில் அன்புமணி பேச்சு

 

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பாமக எம்பி அன்புமணி இராமதாசு கலந்து கொண்டிருக்கிறார்.  இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை மீதான பொது விவாதம் இன்று மாலை நடைபெற்றது. அந்த விவாதத்தில் அன்புமணி இராமதாசு பேசுகையில்,

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையை பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வரவேற்கிறேன்.

இலங்கைத் தமிழர்களின் நலன், உரிமைகள் மற்றும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள, 7.7 கோடி மக்களின் சார்பில் நான் இங்கு பேசுகிறேன். 

இலங்கையில் நடைபெற்ற போரின் போதும், போருக்கு பிறகும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வலிமையான, விரிவான  அறிக்கையை தாக்கல் செய்ததற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மனித உரிமை ஆணையர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் யார் என்பது  கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமானால், உள்நாட்டு நீதிமன்ற விசாரணைக்கு மேலான விசாரணை அமைப்பு தேவையாகும்.

மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான் குற்றச்சாற்றுகள் குறித்து கீழ்க்கண்ட தனித்தனி தலைப்புகளில் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

*சட்டவிரோத படுகொலைகள்
*சுதந்திரம் பறிக்கப்பட்டது தொடர்பான விதிமீறல்கள்
*கட்டாயக் ஆள்கடத்தல்கள்
*சித்திரவதைகள் மற்றும் பிற வடிவிலான கொடுமைகள், மனிதத்தன்மையற்ற மற்றும் சிறுமைப்படுத்தும் வகையில் நடத்தப்படுதல்
*பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகள்
*18 வயதுக்கு மேற்பட்டோரை கடத்துதல் மற்றும் கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல்
*குழந்தைகளை படையில் சேர்த்து போரில் பயன்படுத்துதல்
*போரின் காரணமாக அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் பயன்பாட்டுக்கான பொருட்கள் மீது ஏற்பட்ட தாக்கம்.
*மக்கள் நடமாட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
*மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்வதற்குக் கூட அனுமதி மறுத்தல்
* அடைக்கப்பட்ட முகாம்களுக்குள் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த உள்நாட்டு மக்களின் சுதந்திரத்தை பறித்தல் மற்றும் அவர்களை சோதனைக்கு உள்ளாக்குதல்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்ளக விசாரணையை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று இலங்கை திட்டவட்டமாக கூறிவிட்டது. இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத வகையில் கூட்டுத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை மனதில் கொண்டு, போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு விடப்பட்டுள்ள இந்த சவாலை சமாளிக்க சரியான நடவடிக்கை தேவைப்படுகிறது. 

போர்க்குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு, அதன் குற்றங்கள் குறித்து விசாரித்து தீர்ப்பளிக்க தார்மீக உரிமை கிடையாது. மனித உரிமை ஆணையர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கை புதிதாக பதவியேற்ற அரசு கூட மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவை  இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களாக இலங்கைத் தமிழர்கள் இன்னும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ் கிராமங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் தொடர்கின்றன. தமிழ் மக்கள் இன்னும் அச்சத்தில் வாழ்கின்றனர். அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அப்படியே நீடிக்கின்றன. 

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை கோரி ஐ.நா. மனித உரிமை பேரவையில் வலிமையான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வர வேண்டும் என்று கோரி 15.09.2015 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இந்த விஷயத்தில் பன்னாட்டு விசாரணை கோர வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு அமைதி காப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

போர்க்குற்றம் தொடர்பான விசாரணையின் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக  இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கிளை அலுவலகங்களை அமைக்க வேண்டும்  என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை பசுமைத்தாயகம் அமைப்பு கேட்டுக் கொள்கிறது. 

இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நீதி கிடைப்பதை உறுதி செய்ய வசதியாக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடைமுறையையும், பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கான அமைப்பையும் ஏற்படுத்தும்படி சர்வதேச சமுதாயத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: