சென்னை: சிலுவையில் அறைந்து கொண்ட ஷிகான் ஹூசைனியின் செயல் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கராத்தே வீரர் ஷிகான் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சிலுவையில் அறைந்து கொண்ட ஷிகான் ஹூசைனியின் செயல் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம் என்று கூறியுள்ளதோடு, இதனை ஜெயலலிதா ஊக்குவிப்பது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் மத மாற்றம் செய்வதே அன்னை தெரசா சேவையின் நோக்கம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் பேசியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், "காமலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தானோ?" என விமர்சித்துள்ளார்.
மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காமெடிக்கு அளவே இல்லையா? என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
Saturday, February 28, 2015
மத்திய பட்ஜெட் : திட்டங்கள் இனிப்பு தனி நபர் வரிவிதிப்புகள் புளிப்பு...! : ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றியிருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு திட்டங்கள் வரவேற்கத்தக்கவை
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்தில் மருத்துவக் கல்வியும், மருத்துவ சேவையும் மேம்படுவதற்கு வகை செய்யும். ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்புகளும் வரவேற்கப்பட வேண்டியவை ஆகும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா? என்ற வினா எழுந்த நிலையில், அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும், அதற்கு ரூ.34,699 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களுக்கான பிரதமரின் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான முத்ரா வங்கி, அடுத்த 7 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்குடன் மொத்தம் 7 கோடி புதிய வீடுகள் கட்டப்படவிருப்பது, 80 ஆயிரம் இடைநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படவிருப்பது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது ஆகியவை அறிவிப்புகள் முறையாக செயல்படுத்தப்பட்டால் சமூகத்திற்கு பயனளிக்குமென்பது உறுதி.
கல்வித்துறைக்கு ரூ.68,968 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.33,152 கோடியும், ஊரகவளர்ச்சித் துறைக்கு ரூ.79,526 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட சற்று அதிகம் தான் என்றாலும் போதுமானதல்ல. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு 6 விழுக்காடும், சுகாதாரத்திற்கு 2 விழுக்காடும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற இலக்கை எட்ட மத்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்ய வேண்டும். விவசாயக் கடனுக்காக ரூ.8.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நாட்டின் மின் உற்பத்தியை பெருக்கும் வகையில் 5 அல்ட்ரா பவர் மெகா மின் திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதும், அதிக அளவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்திருப்பதும் பயனுள்ள நடவடிக்கைகள்.
கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், மீட்கவும் நிதி அமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் மிகவும் அவசியமானவை. ஆனால், அவை எந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தனிநபர் வரிவிகிதம் தொடர்பான அறிவிப்புகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. பெரு நிறுவனங்களுக்கான வரியை 30 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக குறைத்துள்ள மத்திய அரசு, தனிநபர்களின் வருமானவரி விகிதத்தில் மாற்றம் செய்யாதது சரியல்ல. நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும்போது பெரு நிறுவனங்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்குமோ? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
தனிநபர்களின் வரவும், செலவும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றவாறு பணவீக்க மதிப்பின் அடிப்படையில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ஆண்டு தானாகவே அதிகரிக்கும் வகையில் நேரடி வரிகள் கொள்கையில் மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும். மருத்துவக் காப்பீட்டிற்காக முதலீடு செய்யப்படும் தொகையின் வரிவிலக்கு வரம்பு ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பது ஓரளவு பயனளிக்கும். அதேபோல், போக்குவரத்துப் படி மீதான வருமானவரி விலக்கு உச்சவரம்பு இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பதும் மாத ஊதியதாரர்களுக்கு பயன்தருவதாக அமையும். ஆனால், கிட்டத்தட்ட அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி விதிக்கப்படும் நிலையில், அதன் விகிதத்தை 12 விழுக்காட்டிலிருந்து 14 விழுக்காடாக அதிகரித்திருப்பது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். இந்த நடவடிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும்.
மொத்தத்தில் 2015 - 16 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பும், புளிப்பும் கலந்து தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாகவே அமைந்திருக்கிறது. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களில் 2&வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருக்கின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றுடன் உள்ளூர் வரிகளும் சேர்க்கப்படும்போது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.53 என்ற அளவுக்கும், பெட்ரோல் விலை ரூ.63.50 என்ற அளவுக்கும் உயரும்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதைக் காரணம் காட்டி இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் அரசும், எண்ணெய் நிறுவனங்களும் நேர்மையான அணுகு முறையை கையாளவில்லை என்பதுதான் உண்மை.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறைந்தால், பெட்ரோல், டீசல் விலைகளை எந்த அளவுக்கு குறைக்கவேண்டுமோ அதைவிட குறைந்த அளவில்தான் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. அதே நேரத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்தால், எந்த அளவுக்கு விலையை உயர்த்தவேண்டுமோ அதைவிட அதிகமாக விலையை உயர்த்துவதை எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன. இது மிகவும் மோசமான வணிக நோக்கம் கொண்ட செயல். இது கடுமையாக கண்டிக்கத் தக்கது.
அதேபோல், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் முழு பயனையும் மக்களுக்கு அளிக்காமல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 7 ரூபாய் 75 பைசாவும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாய் 50 பைசாவும் உயர்த்திக்கொண்ட மத்திய அரசு, இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள பட்சத்தில், கலால் வரியை குறைத்துக் கொண்டு எரிபொருள் விலை உயராமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசும் அதன் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனை காவு கொடுத்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை குறைவால் ஏற்படும் பயன்களை அரசும், எண்ணெய் நிறுவனங்களும் அனுபவிக்க வேண்டும்; விலை அதிகரிப்பால் ஏற்படும் சுமையை மக்கள் தாங்க வேண்டும் என்பது மனிதநேயமற்ற கொள்கை.
கடந்த 15 நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பதால், சரக்குந்து வாடகை உயர்ந்து, அதன் விளைவாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தேவையில்லாத சுமையை சுமத்தும் என்பதால், பெட்ரோல் & டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.’’
Thursday, February 26, 2015
உணவு மானியத்துக்கு பணம்: பொது வினியோக முறையை அழிக்க துடிப்பதா? ராமதாஸ் கண்டனம்!
நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அவற்றுக்கான மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி பொது வினியோக முறையை அழிக்க துடிப்பதா என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொதுவினியோகத் திட்டத்தின்படி நியாயவிலைக் கடைகளில் உணவு தானியங்கள் வழங்குவதை கைவிட்டு, அதற்குப் பதிலாக நுகர்வோருக்கு உணவு மானியத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இச்சீரழிவு நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்திய உணவுக் கழகத்தை சீரமைப்பதற்காக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி அதன் அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்தது. உணவுப் பாதுகாப்பு சட்டப்படி பயனடைபவர்களின் எண்ணிக்கையை 67 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும்; உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது ஆகியவை தான் சாந்தகுமார் குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ஆகும். அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம் என்பது அடுத்த பரிந்துரையாகும்.
சாந்தகுமார் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுமே அதில் உள்ள பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்றும், அவற்றை செயல்படுத்தினால் நியாயவிலைக் கடைகளை மூட வேண்டிவரும் என்றும் மத்திய அரசை எச்சரித்திருந்தேன். இப்பரிந்துரைகளை நாடு முழுவதும் ஒரேநேரத்தில், ஒட்டுமொத்தமாக செயல்படுத்தினால் மக்கள் கொதித்து எழுவார்கள் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசு, இவற்றில் முதல் இரு பரிந்துரைகளை விடுத்து கடைசி பரிந்துரையை மட்டும் செயல்படுத்த தீர்மானித்திருக்கிறது. உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக உணவு மானியத்தை பணமாக வழங்க வேண்டும் என்ற இந்த பரிந்துரையை முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவது பற்றி அனைத்து யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பிப்ரவரி 10 ஆம் தேதி மத்திய உணவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் இந்த பரிந்துரையை 3 வழிகளில் செயல்படுத்தலாம் என்று மத்திய உணவுத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இவற்றில் முதலாவது, நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அவற்றுக்கான மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வெளிச்சந்தையில் பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி கூறுவது ஆகும். இரண்டாவது, நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை சந்தை விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்; இதற்காக பொதுமக்கள் கூடுதலாக எவ்வளவு செலவழிக்கிறார்களோ, அந்த தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது ஆகும். மூன்றாவது, உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை இப்போது உள்ளவாறே வழங்குவது; ஆனால், குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே உணவு தானியங்களை வழங்குவது என நிபந்தனை விதிப்பதாகும். முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ள இத்திட்டத்தை அடுத்தகட்டமாக மாவட்டத் தலைநகரங்கள், மாநகராட்சிகள் உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு முன்மொழிந்துள்ள 3 வழிகளில் கடைசி வழியை நடைமுறைப்படுத்தினால், மக்களுக்கு சில தேவையற்ற அலைச்சல்கள் தான் ஏற்படுமே தவிர, வேறு பாதிப்புகள் ஏற்படாது. அதுமட்டுமின்றி, ஆதாருடன் இணைக்கப்படுவதால், போலி குடும்ப அட்டைகளும் ஒழிக்கப்படும். ஆனால், 3 வழிகளை தெரிவித்துள்ள மத்திய அரசு, அதில் எதைக் கடைபிடிப்பது என்பதை யூனியன் பிரதேச அரசின் விருப்பத்திற்கு விடாமல், முதல் வழியை, அதாவது மக்களின் வங்கிக் கணக்கில் மானியத்தைச் செலுத்திவிட்டு, உணவுப்பொருட்களை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளும் முறையை செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது; கண்டிக்கத்தக்கது.
உணவு மானியத்தை பணமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினால், ஆண்டுக்கு குறைந்தது ரூ.30,000 கோடி மிச்சமாகும் என்ற எண்ணத்தில் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. ஆனால், இது பொது வினியோகத் திட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது ஆகும். ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொதுவினியோகத் திட்டம் கொண்டுவரப்பட்டது. உழவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் நேரடி கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இப்பரிந்துரை உன்னதமான இரு திட்டங்களையும் அழித்துவிடும். அத்தகைய சூழலில் ஏழை மக்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்கும் நிலையும், உழவர்கள் தங்களின் விளை பொருட்களை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலையும் ஏற்படும். அப்படி ஒரு நிலை உருவானால் ஏழைகளும், விவசாயிகளும் வாழ முடியாத நிலை உருவாகும்.
எனவே, பொதுவினியோகத்திட்டத்தையும், விவசாயத்தையும் அழிக்கும் சக்தி கொண்ட இந்தப் பரிந்துரையை செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
Wednesday, February 25, 2015
மதம் மாற்றுவதற்காக சேவை செய்தாரா?அன்னை தெரசாவை அவமதிக்கக்கூடாது: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை:
’’ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தான் அன்னை தெரசா சேவை செய்தார் என்று கூறியிருக்கிறார். அன்னை தெரசாவை இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது; அவரது சேவையை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. பாகவத்தின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது.
அன்னை தெரசா என்றாலே அவரது தன்னலம் கருதாத சேவை தான் நினைவுக்கு வரும். அவர் மதம், இனம், மொழி ஆகிய அனைத்தையும் கடந்தவர். அதனால் தான் மதம், மொழி, இனம் ஆகிய மூன்றின் அடிப்படையிலும் எந்த தொடர்பும் இல்லாத இந்தியாவுக்கு வந்து சேவை செய்தார். தாய், தந்தையை கடுமையான நோய் தாக்கிவிட்டால் அவர்களை கவனித்துக் கொள்ள பிள்ளைகளே முன்வராத இந்த காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தமது அன்புக் கரங்களால் அள்ளி எடுத்து கவனித்துக் கொண்டனர். இப்படிப்பட்ட சேவைக்கு மோகன் பாகவத் உள்ளர்த்தம் கற்பித்திருப்பது வேதனை அளிக்கிறது. இந்த குற்றச்சாற்றை அவரது மனசாட்சி கூட ஏற்றுக்கொள்ளாது.
அன்னை தெரசாவின் சேவையை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதை விட, மதமாற்றம் குறித்த சர்ச்சைத் தீ அவிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தான் மோகன் பாகவத்தின் நோக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். காரணம் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்தே மத வெறுப்பைத் தூண்டும் செயல்களில் தான் சங்க பரிவார் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த திசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் பாகவத்,‘‘இந்தியா என்பது இந்துக்களின் தேசம். கடந்த காலங்களில் இழந்ததை இப்போது மீட்போம். கடந்த காலங்களில் மதமாற்றம் செய்யப்பட்டோரை கட்டாயமாக மறு மதமாற்றம் செய்வோம். அதன்பின் இந்துக்களை எவரும் மதமாற்றம் செய்யாமல் தடுக்க கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவோம்’’ என்று எச்சரிக்கும் வகையில் பேசினார். அதன்பிறகு தான் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.
மற்றொருபுறம், இந்தியா ஒரே நாடு, இங்கு ஒரே மதம் தான் இருக்க வேண்டும், ஒரே மொழி தான் பேசப்பட வேண்டும் என்று நாட்டின் ஒற்றுமைக்கே உலை வைக்கும் வகையில் பேசினார். அதுமட்டுமின்றி, இந்தியாவிலுள்ள இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கு விரட்டியடிப்பது தான் உண்மையான மதமாற்றம் என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பும், சிவசேனாவும் விஷம் கக்கின. இதற்கெல்ல்லாம் மேலாக நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடி விடுங்கள் என எச்சரிக்கை விடுத்த பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் கிரிராஜ் சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து பா.ஜ.க. அழகு பார்த்தது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவோம் என்ற முழக்கங்களும் எழுந்தன.
தேசத் தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலை வைப்போம் என்று இந்து மகாசபை அமைப்பும், இந்துக்களின் மக்கள் தொகையை அதிகரிக்க அனைத்து இந்து பெண்களும் குறைந்தது 10 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்து அமைப்புகளும் பேசி வருவது சிறுபான்மையினரின் மனதில் வெறுப்பைத் தான் வளர்க்குமே தவிர நம்பிக்கையை ஏற்படுத்தாது. மத சகிப்பற்ற தன்மையை பொறுத்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி தில்லியில் எச்சரித்த பிறகும், அனைவரும் மதச்சகிப்பு தன்மையை பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிட்ட பிறகும் இத்தகைய பேச்சுக்கள் தொடர்வது சரியல்ல.
சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ வகை செய்யாத நாடு முன்னேற முடியாது என்பதை இந்து அமைப்புக்களின் தலைவர்கள் உணர்ந்து இத்தகைய பேச்சுக்களைக் கைவிட வேண்டும். இதுபோன்ற பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tuesday, February 24, 2015
ஊழல் குற்றவாளிக்கு அரசு செலவில் பிறந்த நாள் கொண்டாட்டமா?: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அன்னை தெரசாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறதோ என்று நினைக்கும் அளவுக்கு, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவுக்காக அரசு எந்திரமும், அரசு நிதியும் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 670 தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று தொடங்கி 8 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 60 முதல் 100 மருத்துவமனைகளில் இலவச மருத்துவமுகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமுகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு மேல்சிகிச்சை ஏதேனும் தேவைப்பட்டால், அவர்களுக்கு அதே மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பொது சுகாதாரத் துறையின் சார்பில் நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் அளிப்பதையும் நான் ஒருபோதும் எதிர்ப்பவன் அல்ல.
ஆனால், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக இதையெல்லாம் செய்ய நினைக்கும் அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களின் சொந்த நிதியிலிருந்தோ அல்லது அ.தி.மு.க.வின் கட்சி நிதியிலிருந்தோ செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதாக இருந்தால் ஆண்டின் 365 நாட்களுக்கும் கூட அவர்கள் மருத்துவ முகாம்களை நடத்தலாம். மாறாக அரசு நிதியிலிருந்து ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதும், இதற்காக கடந்த கால நடைமுறைகளை மீறி தலைமைச் செயலக வளாகத்தையே கொண்டாட்டக் களமாக மாற்றுவதும் கண்டிக்கத்தக்கவை. அதிலும் குறிப்பாக ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறை சென்ற ஒருவருக்காக இவ்வளவையும் செய்வதை மன்னிக்கமுடியாது.
மருத்துவ முகாம்கள் ஒருபுறமிருக்க ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். மரக்கன்றுகள் நடுவது நல்ல விஷயம் தான். இதற்கான திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ, எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த நாளிலோ அல்லது இயற்கையை காக்கவே வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட நம்மாழ்வாரின் பிறந்த நாளிலோ இத்திட்டத்தை தொடங்கி வைத்திருந்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும். மாறாக ஊழல் குற்றவாளியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அரசு சார்பில் புதிய திட்டத்தை அறிவித்து தொடங்குவதை ஏற்கவே முடியாது.
இன்னொருபுறம், அ.தி.மு.க. அரசின் சாதனைக் கண்காட்சி என்ற பெயரில் சென்னை கோயம்பேடு புறநகர் பேரூந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கண்காட்சிக்கு அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர, அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஜெயலலிதாவை வாழ்த்தி நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக கோடிக்கணக்கில் அரசு நிதி செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக ஜெயலலிதா பிறந்த நாள் குறித்த அ.தி.மு.க.வின் செய்திக் குறிப்பை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அரசு செய்திகளை வெளியிடவேண்டிய இந்த இயக்குனரகத்தை எப்போது அ.தி.மு.க. குத்தகைக்கு எடுத்தது என்பது தெரியவில்லை.
தமிழக ஆட்சியாளர்கள் ஜனநாயக நடைமுறைகளையோ அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையோ மதிக்கவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. தமிழக அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் உருவப்படங்களை மாட்டுவதும், அரசு சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை முன்னிலைப் படுத்தி வைப்பதும், குடியரசு நாள் கொண்டாட்டங்களில் அணிவகுக்கும் அலங்கார ஊர்திகளில் ஜெயலலிதா படங்களை இடம்பெறச் செய்ததும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும். இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் ஊழல் குற்றவாளியின் பிறந்தநாளை எந்தவித வெட்கமும் இன்றி அரசு செலவில் அ.தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்வது தங்களை தட்டிக் கேட்க யாருமே இல்லை என்ற ஆணவத்தையே காட்டுகிறது.
அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்ததே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான். இந்த கலாச்சாரத்தின் உச்சகட்டமாகத் தான் ஊழல் குற்றவாளியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் அளவுக்கு அரசியலின் தரம் தாழ்ந்திருக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க தமிழகத்தில் யாரும் முன்வருவதில்லை என்பது தான் வேதனை அளிக்கிறது. எனினும், இவற்றையெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவர்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செலவிடப்பட்ட தொகையை அ.தி.மு.க.விடமிருந்து வசூலிக்க வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்ட விளம்பரங்களுக்கான செலவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும். ’’
தியாகி மாயாண்டி பாரதி மறைவை ஏற்க மனம் மறுக்கிறது.. டாக்டர் ராமதாஸ் வேதனை
சென்னை: தியாகி ஐ. மாயாண்டி பாரதியின் மறைவு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஊழல் எதிர்ப்பாளருமான தியாகி மாயாண்டி பாரதி, உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்திகேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.மாயாண்டி பாரதி அவரது இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார். இதற்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் இனி ஈடுபடமாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலையாகும்படி, அப்போது அவர் சார்ந்திருந்த அமைப்பு கட்டாயப்படுத்திய போதிலும், அதை ஏற்க மறுத்து, தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்த கொள்கை உறுதிக்கு சொந்தக்காரர்.இந்திய விடுதலைக்குப் பிறகு சமூகப் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மகளிர் மதுஒழிப்பு மாநாடுகளில் என்னுடன் இணைந்து கலந்துகொண்டவர். மது ஒழிப்பை உயிர் மூச்சாகக் கொண்டவர். இதழியல் துறையிலும் முத்திரை பதித்தவர்.தள்ளாத வயதிலும் முதுமையைப் பொருட்படுத்தாமல், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலை வெளிக்கொண்டுவருவதற்காகப் போராடினார். இன்னும் இரு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாடவிருந்த நிலையில், அவர் காலமானதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.ஊழல் எதிர்ப்புப் போராளி மாயாண்டி பாரதியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dr-ramadosss-condoles-the-death-i-mayandi-bharathi-221646.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dr-ramadosss-condoles-the-death-i-mayandi-bharathi-221646.html
வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிவிட்ட நிலையில், 26-ல் ரயில்வே பட்ஜெட்டும் 28-ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான முதல் பட்ஜெட் என்பதால் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்தக் குறையுமின்றி நிறைவேற்றும் வகையில் அவற்றை தயாரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. புதிதாக அறிவிக்கப்பட்ட 58 ரயில்களில் வெறும் 5 மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன. அதே போல தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்து வதற்காக ரூ.645 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்துக்காக அறிவிக்கப் பட்ட திட்டங்களில் பெரும் பாலானவை போதிய நிதி இல்லாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் அமைய வேண்டும்.
பொது பட்ஜெட்டைப் பொறுத்த வரை அனைத்துதரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என்பது தான். வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டாவது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இதை ரூ. 5 லட்சமாக உயர்த்த பிரதமரும், நிதி அமைச்சரும் முன்வர வேண்டும். அதேபோல, சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அவற்றின் மீதான வரிவிலக்கு வரம்பை குறைந்தபட்சம் ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவத்துக்காக செலவிடப்படும் தொகையில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படுகிறது. இதை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
'சிலுவையில் அறைந்து கொண்டது அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம்'!
'சிலுவையில் அறைந்து கொண்டது அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம்'!
|
Monday, February 23, 2015
பட்ஜெட்: மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்கிவிட்ட நிலையில், நாளை மறுநாள் தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையும், 28ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கைகள் இவை தான் என்பதால் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த குறையுமின்றி நிறைவேற்றும் வகையில் அவற்றை தயாரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. புதிதாக அறிவிக்கப்பட்ட 58 தொடர்வண்டிகளில் வெறும் 5 மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்தன. அதேபோல் தமிழகத்தில் தொடர்வண்டித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ.645 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் பாதிக்கும் குறைவாகும். தொடர்வண்டி நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டாவது தமிழக கோரிக்கைகள் சேர்க்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை போதிய நிதி இல்லாததால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக கடந்த 12 ஆம் தேதி தொடர்வண்டித்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்களை தில்லியில் சந்தித்து பேசிய பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள், தருமபுரி & மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டம் உட்பட 19 தொடர்வண்டித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், இதற்காகத் தேவைப்படும் ரூ.9215 கோடி நிதியில் கணிசமான தொகையை வரும் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். தமிழகத்தின் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் தொடர்வண்டி நிதிநிலைஅறிக்கை அமைய வேண்டும்.
பொது நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா? என்பது தான். வருமான வரி செலுத்துவதற்கான வருவாய் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டில் இந்த வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக மட்டுமே உயர்த்தப்பட்டது. நடப்பாண்டிலாவது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இதை ரூ. 5 லட்சமாக உயர்த்த பிரதமரும், நிதி அமைச்சரும் முன்வர வேண்டும். அதேபோல், சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அவற்றின் மீதான வரிவிலக்கு வரம்பை குறைந்தபட்சம் ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகையில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரத்திற்கு மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படுகிறது. இதை ரூ.50 ஆயிரமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலும் பெருமளவு வெட்டப்பட்டது. குறிப்பாக உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.77,307 கோடியில் சுமார் ரூ.11,000 கோடியும், சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.30,645 கோடியில் சுமார் ரூ.7,000 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.80,043 கோடியில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடியும் வெட்டப்பட்டது. இதனால் இத்துறைகளின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
இந்த நிலையை மாற்றும் வகையில், சமூகத் துறைகளுக்கு வரும் நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நாடு முழுமைக்குமான திட்டம் என்ற நிலையிலிருந்து 200 மாவட்டங்களுக்கு மட்டுமான திட்டமாக மாற்றப்பட்டு விட்டது என்ற எண்ணம் மக்களிடம் நிலவுகிறது. இதை மாற்றும் வகையில், ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Sunday, February 22, 2015
பரவும் பன்றிக் காய்ச்சல்: நோய் தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்: ராமதாஸ்
பன்றிக் காய்ச்சல் பரவுவதையடுத்து, நோய் தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. நிலைமை சமாளிக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாலும், உயிர்களைப் பறிக்கும் இந்நோயைக் கட்டுப்படுத்த இது போதுமானதல்ல.
பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை 8 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருகிறது. உண்மையில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். தொடக்கத்தில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலின் தாக்கமே இல்லை என்று கூறிவந்த அரசு, ஒரு கட்டத்தில் நிலைமை மோசமடைந்த பிறகு தான் விழித்துக் கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.
தமிழகத்தில் 250&க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களில் சுமார் 100 பேர் இன்னும் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்கள். பன்றிக் காய்ச்சல் தாக்கினால் இறப்பு உறுதி என்பதைப் போன்று தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் மக்களிடையே ஒருவித அச்சமும், கவலையும் ஏற்பட்டிருகிறது.
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது, சிகிச்சை அளிப்பது ஆகியவை ஒருபுறம் இருந்தாலும், பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன? அந்தக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பன்றிக் காய்ச்சல் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் அச்சமூட்டும் செய்திகள் தான் பரப்பப்படுகின்றனவே தவிர, நம்பிக்கையூட்டக் கூடிய உண்மையான செய்தி மக்களை சென்றடையவில்லை.
பன்றிக் காய்ச்சல் பரவுவதற்கு பன்றிகள் தான் காரணம் என்று தவறாக கருதிக் கொண்டு பன்றிகளையெல்லாம் காட்டுக்குள் விரட்டியடித்து விட்டதாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுகாதார அதிகாரிகள் கூறியிருப்பதிலிருந்தே பன்றிக் காய்ச்சல் குறித்து மக்களிடம் எந்த அளவுக்கு தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது என்பதை உணரலாம்.
தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் ஆய்வு செய்வதற்காக ரூ.8,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இதைத் தடுக்கும் வகையில் பன்றிக் காய்ச்சல் ஆய்வுக்கு ரூ.3750-க்கும் மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில் பன்றிக் காய்ச்சலுக்கான மருத்துவ ஆய்வுக்கு அதிகபட்சமாக ரூ.1500 தான் செலவாகும் என்று தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியிருக்கிறார்.
அவ்வாறு இருக்கும் போது தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது. பன்றிக் காய்ச்சல் தாக்குதலை ஓர் அசாதாரண நிகழ்வாகக் கருதி, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தனியார் மருத்துவமனைகளும் அரசுடன் கைகோர்க்க வேண்டும். இதை ஒரு சேவையாக கருதி இலவசமாகவோ அல்லது இப்போது நிர்ணயிக்கப்பட்டிருப்பதைவிட குறைந்த கட்டணத்திலோ மருத்துவ ஆய்வும், சிகிச்சையும் வழங்க தனியார் துறையினர் முன்வர வேண்டும்.
சென்னை போன்ற மாநகரங்களுக்கு வெளியாட்கள் அதிகம் வந்து செல்வார்கள் என்பதால் விமான நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் மட்டுமின்றி, பேரூந்து நிறுத்தங்களிலும் பன்றிக் காய்ச்சல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பன்றிக் காய்ச்சல் தாக்கியதாக உறுதி செய்யப்பட்டவர்கள் வாழும் பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பி மக்களுக்கு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவியபோது, மருத்துவர்களும், மருத்துவத்துறையின் இதர பணியாளர்களும் ஆற்றிய பணி காரணமாக நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல், இப்போதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஒன்றாக கைகோர்த்து பன்றிக் காய்ச்சலை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்
பனைமரங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் : ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழர்களின் அடையாளங்களுடன் இரண்டறக் கலந்ததும், தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்க உதவியதுமான பனை மரங்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றன. மனிதர்களை வாழ வைக்கும் அவை உயிருடன் வீழ்த்தப்பட்டு செங்கல் சூளைகளுக்கு விறகாக்கப்பட்டு வருகின்றன.
தமிழர்களுக்கு பசு எப்படி புனிதமானதோ, அதேபோல் பனை மரமும் ஒரு காலத்தில் புனிதமாக கருதப்பட்டு வந்தது. உள்நாட்டு பொருளாதாரத்தின் தூண்களாக விளங்கியவற்றில் பனை மரங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சுமார் 5 கோடி பனை மரங்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது ஒட்டுமொத்த இந்தியாவிலும் காணப்படும் பனைகளில் பாதி அளவு ஆகும். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பனை மரங்களின் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. பனைமரத்தின் அனைத்து உறுப்புகளும் மக்களுக்கு பயன் தரக்கூடியவை ஆகும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 24 கிலோ பனை வெல்லம், 6 பாய்கள், 2தூரிகைகள், 2 கூடைகள் ஆகியவற்றை தயாரிக்க முடியும். எண்ணற்ற குடும்பங்களுக்கு ஒற்றை வாழ்வாதாரமாக பனைமரம் விளங்கியதாக வரலாறு கூறுகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள பனை மரங்கள் பல்வேறு காரணங்களால் இப்போது வேகமாக அழிந்து வருகின்றன. வறட்சி, கருவேல மரங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி உள்ளிட்ட இயற்கையான காரணங்களால் பனை மரங்கள் ஒருபுறம் அழிந்து வருகின்றன. இன்னொருபுறம் செங்கல் சூளைகளுக்கான முதன்மை எரிபொருளாக பனைமரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் காய்த்துக் கொண்டிருக்கும் மரங்கள் கூட வெட்டி வீழ்த்தப் படுகின்றன. அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதும் பனைமரங்களுக்கு ஆபத்தாகியிருக்கிறது. ஏதேனும் நிலங்களில், பனை மரங்கள் இருந்தால் அவை விளநிலங்களாக கருதப்பட்டு அவற்றை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதி மறுக்கப்படுகிறது. இது நல்ல நடவடிக்கை தான்.ஆனால், விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கத் துடிக்கும் மனை வணிகர்கள் பனைகளை வெட்டி வீழ்த்திவிட்டு தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
பனை மரங்கள் வாழ்வாதாரமாக திகழ்ந்தவை என்பது ஒருபுறமிருக்க உயிர் காக்கும் மருந்தாகவும் விளங்குகின்றன. உடல்நலனுக்கு பெரும் கேடு விளைவிக்கும் வெள்ளை சர்க்கரையிலிருந்து மக்களை காக்க பனை வெல்லத்தால் மட்டும் தான் முடியும். அதுமட்டுமின்றி, பதநீர் குடிப்பதால் சிவப்பு ரத்த அணுக்கள் பெருகுவதுடன், நோய் உண்டாக்கும் கிருமிகளும் அழிக்கப்படுகின்றன. இத்தனை சிறப்புக்களையும் கொண்ட பனையை நாம் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
இதை வலியுறுத்தும் வகையில் ‘அழகின் சிரிப்பு’ என்ற தலைப்பில் பனையின் பெருமை பேசும் கவிதையை காட்சியாக்கி குறுந்தகடாக நான் வெளியிட்டேன். அதில் பனை மீது இடியே விழுந்தாலும் அதனால் ஏற்படும் ஓட்டைகள் பறவைகள் வாழ்வதற்கு கூடாக மாறும் என்றும், வறட்சிக் காலத்தில் பெற்ற தாயாலேயே சோறு ஊட்ட முடியாத அளவுக்கு பஞ்சம் நிலவினாலும், பனையை வெட்டி இரண்டாக பிளந்தால் அதன் தண்டுப் பகுதியில் உள்ள வெள்ளை சோறு பலருக்கு உணவாகி உயிர் காக்கும் என விளக்கப்பட்டிருந்த வரிகளையும், அதற்கான காட்சிகளையும் பார்த்தவர்கள் கண் கலங்கினர். அதுமட்டுமின்றி, அதிசயமரம் என்று போற்றப்படும் பனைமரத்தின் படத்தை தைலாபுரம் இல்லத்தில் உள்ள என் அறையில் வைத்து என்னை சந்திக்க வருபவர்களுக்கு அதன் சிறப்பை விளக்கியுள்ளேன்.
பனைகளை பாதுகாப்பது கடினமான பணி இல்லை. பனையிலிருந்து போதிய அளவில் வருவாய் கிடைக்காததால் தான் அதை பாதுகாப்பதில் பலரும் அக்கறை காட்டவில்லை. இதற்கு மாறாக, பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டுவதற்கான பயிற்சியையும், அவற்றை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருவதன் மூலம் பனை வளர்ப்பை லாபகரமான தொழிலாக மாற்ற முடியும்.
இதனால் பனையை காப்பதுடன், அதை நம்பியிருப்பவர்களுக்கு அதிக வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தர முடியும். வீட்டு மனைகளை பிரிக்கும் போது அவற்றில் பனை உள்ளிட்ட எந்த மரங்கள் இருந்தாலும் அந்த மனையில் வீடு கட்டப்படும் வரை அவற்றை வெட்டத் தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சந்தன மரம், தேக்கு மரம் ஆகியவற்றுக்கு இணையாக பாதுகாக்கப்பட வேண்டிய வகையாக பனை மரத்தை அறிவித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் அனுமதி பெற்றால் தான் அதை வெட்ட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்; இதற்காக சட்டப்பேரவையில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும்.’’
Friday, February 20, 2015
தவறான மின்கொள்கை: தமிழகம் கடன்சுமை மாநிலமாக மாறிவிடும்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் கணேஷ் குமார், தி.மு.க. உறுப்பினர் ஐ.பெரியசாமி ஆகியோர் தெரிவித்தக் கருத்துக்களுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு 22,440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க தமது அரசு வகை செய்திருப்பதாக கூறியுள்ளார்.
முதலமைச்சரின் அறிவிப்பை கேட்கும் போது இனிப்பாகத் தான் இருக்கிறது. ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் அனைத்துமே கடந்த காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரால் கூறப்பட்ட புள்ளிவிவரங்கள் தான். அந்த விவரங்களை புள்ளி மாறாமல் இப்போது முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வாசித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 4640 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இவை எதுவுமே அ.தி.மு.க. அரசால் செயல்படுத்தப் பட்டவை அல்ல. முந்தைய ஆட்சியிலும், மத்திய பொதுத்துறை மின் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பயனாகத் தான் இந்த கூடுதல் மின்சாரம் கிடைத்தது. அடுத்த சில மாதங்களில் 2513 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவிருப்பதாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். இதற்கும் காரணம் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அல்ல என்பதே உண்மை.
மீதமுள்ள 8880 மெகாவாட் திறன் கொண்ட மின்நிலையங்களை அமைக்கும் பணிகள் எப்போது முடிவடையும்? என்பதை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தால் கூற முடியாது. அவர் பட்டியலிட்டுள்ள திட்டங்களில் பெரும்பாலானவை 2010 ஆம் ஆண்டுக்கு முன்பே அறிவிக்கப்பட்டவை ஆகும். அவை அனைத்தும் 5 ஆண்டுகளுக்கு மேலாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே தான் கிடக்கின்றன. அழும் குழந்தைக்கு வாழைப்பழத்தைக் காட்டி அமைதிப்படுத்துவதைப் போல தமிழகத்தில் மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்களை சமாதானப்படுத்துவதற்காக இத்தகைய புள்ளிவிவரங்களை அ.தி.மு.க. அரசு கூறிவருகிறது. பெரிய அளவில் மின்திட்டங்களைஅறிவிப்பதில் பெருமைப் பட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. அரசு, அதை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது தான் உண்மை.
தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் 05.09.2011 அன்று சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா,‘‘அடுத்த 5 ஆண்டுகளில் 15,140 மெகாவாட் அனல் மின்சாரம், 5000 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் என தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் 23,140 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கப்படும்’’ என்று அறிவித்தார். ஜெயலலிதா கூறிய காலக்கெடு இன்னும் ஓராண்டில் முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் ஜெயலலிதாவின் அறிவிப்பு நிச்சயமாக நிறைவேற்றப்படாது. ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் வழியில் இத்தகைய வெற்று புள்ளிவிவரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதற்கு முயன்றுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதா வெளியிட்ட சூரிய ஒளி மின்னுற்பத்திக் கொள்கையில், ஆண்டுக்கு 1000 மெகாவாட் வீதம் அடுத்த 3 ஆண்டுகளில் 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இதுவரை 2000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் கொள்கையே குப்பையில் போடப்பட்டது தான் மிச்சம். அதன்பிறகு சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை தருவதாக அரசு அறிவித்ததால் அதை நம்பி 2064 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்துத் தருவதற்கு 70 தனியார் நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், இதற்கான ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டுமானால், ஒரு மெகாவாட்டுக்கு ரூ.15 லட்சம் வீதம் கையூட்டு தர வேண்டும் என ஆளுங்கட்சித் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதால், பல தனியார் நிறுவனங்கள் தமிழகஅரசிடம் செலுத்திய வைப்பீட்டுத் தொகையைக் கூட திரும்பப்பெறாமல் விலகி விட்டன என்ற குற்றச்சாற்று கூறப்படுகிறது. மாநில வளர்ச்சிக்கு அவசியமான மின்திட்டங்களைச் செயல்படுத்துவதில் கூட அ.தி.மு.க. அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம் ஆகும்.
தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றப்போவதாக ஒருபக்கம் கூறிக்கொள்ளும் ஆட்சி யாளர்கள் மற்றொரு புறம் தனியாரிடமிருந்து 3330 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்காக நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். நாம் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பது மின்மிகையா? அல்லது மற்ற மாநிலங்களிலிருந்து நாம் மின்சாரத்தை வாங்குவது மின்மிகையா? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் தான் விளக்க வேண்டும். இதையெல்லாம் விட தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நியாயப்படுத்தி முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ள கருத்துக்கள் தான் மிகவும் ஆபத்தானவை ஆகும். 3330 மெகாவாட் மின்சாரத்தை தயாரிப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த ரூ.22,000 கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்றும், அதனால் தான் மின்திட்டங்களைச் செயல்படுத்தாமல் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கம் அபத்தத்தின் உச்சம் ஆகும்.
தமிழ்நாட்டின் மின்தேவையை சமாளிப்பதற்காக 2013-14 ஆம் ஆண்டில் வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்த தொகை ரூ.30,529 கோடி ஆகும். இதைக் கருத்தில் கொண்டால், இரு ஆண்டுகளுக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்க செலவிடப்படும் தொகையை மின்திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டால் 9,000 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் தான் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்ற முடியும். ஆனால், தமிழக அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை ‘‘ வாடகை சோபா 20 ரூபா விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா’’ என்ற வரிகளைத் தான் நினைவுபடுத்துகிறது. தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதென்பது ஊழலுக்குத் தான் வழி வகுக்குமே தவிர, வளர்ச்சிக்கு துணை செய்யாது .
இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறாது.... கடன்சுமை மாநிலமாகத் தான் மாறும் என்பதை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும்; கிடப்பில் போடப்பட்டுள்ள மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி தமிழகத்தின் மின்வெட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’
பன்றிக் காய்ச்சல் நோயை தடுப்பது குறித்து ஜெ.பி.நட்டாவுடன் ஆலோசனை: அன்புமணி தகவல்
திருவள்ளுர் ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழுக் கூட்டம் திருவள்ளுரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த பாமக எம்பியும், முதல் அமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
2016ஆம் ஆண்டு நடைறெ உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மதுஒழிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பை முன்நிறுத்தி மக்களை சந்திக்க இருக்கிறோம். பாமக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க 3 இலக்க தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல் நோயை தடுப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த நோயை கண்டுபிடிக்க இலவச மருத்துவ ஆய்வு மையங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
Tuesday, February 17, 2015
இலங்கை தப்பிக்க ஐ.நா. ஆணையம் காரணமாகக் கூடாது : ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’ இலங்கைப் பிரச்சினையில் எது நடக்கக் கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. இலங்கைப்போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படாது என்றும் அடுத்தக் கூட்டத்தில் தான் தாக்கல் செய்யப்படும் என்றும் ஆணையத்தின் தலைவர் கூறியிருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காத நிலையில், உலகம் முழுவதுமிருந்து ஆதாரங்களைத் திரட்டி ஐ.நா. மனித உரிமை ஆணையக்குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவடைந்து விட்டதால் அது குறித்த அறிக்கை அடுத்த மாதம் 25&ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை தடுப்பதற்கான முயற்சியில் இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டிருப்பதையும், அதற்கு இந்திய ஆதரவு கோரப்படுவதையும் கடந்த 10 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் விளக்கியிருந்தேன். இலங்கை போர்க்குற்ற விசாரணை அறிக்கை நிர்ணயிக்கப்பட்ட தேதியில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்படுவதை இந்தியா உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், இலங்கை மேற்கொண்ட முயற்சிகளின் பயனாகவும், திரைமறைவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக களம் இறங்கியதன் விளைவாகவும் போர்க்குற்ற விசாரணை அறிக்கை மார்ச் 25 ஆம் தேதிக்கு மாற்றாக வரும் செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த கொடியவன் இராஜபக்சேவும், அவனது கூட்டாளிகளும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டிக்கப்படவில்லை. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டிலேற்றப்பட்டு தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று பிறந்த நிலையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றம் தருகிறது. போர்க்குற்ற விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்காக கூறப்படும் காரணங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல.
போர்க்குற்ற விசாரணைத் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் இதுவரை வழங்கிய அறிவுரைகளில் ஒன்றைக்கூட இலங்கை மதிக்கவில்லை. மனித உரிமை ஆணைய விசாரணைக்குக் கூட இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை. இத்தகைய சூழலில், அந்நாட்டின் வேண்டுகோளை ஏற்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை 6 மாதங்களுக்கு ஆணையம் ஒத்திவைத்தது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கையில் புதிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், விசாரணை அறிக்கையை வலுப்படுத்தும் வகையில் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம் என்பதும் தமது முடிவுக்குக் காரணம் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அல் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.
போர்குற்றச்சாற்றுகளை வலுப்படுத்தும் வகையில் புதிய தகவல்கள் கிடைத்தால் அது முற்றிலும் வரவேற்கக் கூடியது தான். ஆனால், மனித உரிமை விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இந்த நிமிடம் வரை இலங்கை அரசு அறிவிக்கவில்லை. மேலும், போர்க்குற்றச்சாற்று குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தப் போவதாக மட்டுமே இலங்கை கூறி வருகிறது.
இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகளை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் அளவுக்கு விசாரணைக்குழுவிடம் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எந்த வாக்குறுதியும் அளிக்காத இலங்கையை நம்பி, விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை ஒத்தி வைப்பது போரில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை தாமதிக்கும் செயலாகவே அமையும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகி விடும். மேலும், இந்த தாமதத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்ப அனுமதிக்கக் கூடாது.
இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து அந்த நாட்டுக்குள் சென்று விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்குழுவுக்கு அனுமதி அளிப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே விசாரணை அறிக்கை தாக்கலை ஒத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏற்கனவே அறிவித்தவாறு விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 25 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்; அது தான் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்படும் நீதியாக இருக்கும். ’’
தமிழக அரசின் ஊழல்கள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கக் கோரி ஆளுனரிடம் பாமக கொடுத்த மனு - முழு விபரம்
தமிழக ஆளுனர் மேதகு ரோசய்யாவை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பா.ம.க.வின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் தலைமையிலான குழு சென்னை கிண்டியிலுள்ள ஆளுனர் மாளிகையில் இன்று மாலை 5.30 மணிக்கு சந்தித்து பேசியது.
அப்போது, தமிழ்நாட்டில் 2011- ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க ஆளுனரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவும், அதன் தமிழாக்கச் சுருக்கமும் :
பாட்டாளி மக்கள் கட்சி
தலைமை நிலையம்
63, நாட்டுமுத்து நாயக்கன் தெரு, வன்னிய தேனாம்பேட்டை, சென்னை&60 0018
சென்னை
17.02.2015
அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற
நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தி தமிழக
ஆளுனரிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் சுருக்கம்:
பெறுநர்:
டாக்டர். கே. ரோசய்யா அவர்கள்,
மேதகு ஆளுனர், தமிழ்நாடு
ஆளுனர் மாளிகை,
கிண்டி, சென்னை & 600 022
அய்யா வணக்கம்!
பொருள்: தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது,
ஊழல் செய்தது தொடர்பான குற்றச்சாற்றுகள் குறித்து முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க
வேண்டுதல் மற்றும் விசாரணை ஆணையம் அமைக்கக் கோருதல் & தொடர்பாக...
உலகம் முழுவதுமே ஊழல் ஒரு பெரும் தீமையாக பார்க்கப்படுகிறது. ஊழல் என்பது சமூகங்களை சீரழிக்கக்கூடிய, பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய, ஜனநாயகத்தின் மாண்பையும், பொதுமக்களின் நலனையும் பாதிக்கக்கூடிய பிரச்சினையாகத் தான் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஊழலுக்கு எதிராக மக்களிடையே கடுமையான வெறுப்பும், கோபமும் நிலவும் போதிலும், ஊழல்வாதிகளுடன் அரசுகளும் இணைந்து செயல்படுவதால், இந்தக் கொடுமையை சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர்.
ஊழலும், முறைகேடான நிர்வாகமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து செயல்படுகின்றன. நல்லாட்சி நடைமுறைகளை கடைபிடிக்கும் மாநிலத்திலும், சமூகத்திலும் வாழ்வது அடிப்படை மனித உரிமை என அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலம் அச்சுறுத்தல் மற்றும் ஊழல் நிறைந்த நிர்வாக அமைப்பின் அடிப்படையில் நிர்வகிக்கப்படாமல், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்யும் மிக முக்கியமான பணியை மாநில ஆளுனருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.
திறமையான நிர்வாகத்தை ஏற்படுத்தி தொடரச் செய்வதற்கும், சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அரசு நிர்வாகத்தின் தூய்மை மிகவும் அவசியமாகும். அரசு நிர்வாகத்தில் தூய்மையை உறுதி செய்வதற்கான முக்கியத் தேவை ஊழலற்ற செயல்பாடுகள் ஆகும். வாழ்வதற்கான உரிமை, கண்ணியம் மற்றும் பிற முக்கிய மனித உரிமைகளும், மாண்புகளும் ஊழலற்ற ஆட்சியை பெறுவதற்கான உரிமையை சார்ந்தே உள்ளன.
அ.இ.அ.தி.மு.க.வின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் என்ற முறையில் கடந்த 2011 ஆம்
ஆண்டு ஜெயலலிதா ஆட்சியமைத்துடன், தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அதன் பின், வருவாய்க்கு மீறி சொத்து குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, மாநில அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கியது.
ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர், திறமையில்லாத அரசுக்கும், முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கி வருகிறார். ஜெயலலிதா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுகளில்அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மீது அவர்களின் ஊழல் நிறந்த செயல்பாடுகளை காட்டும். செல்லுபடியாகக் கூடிய ஆதாரங்களுடன் கீழ்க் கண்ட குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறோம்.
அ ) இயற்கை வளங்கள் கொள்ளை:
குற்றச்சாற்று&1: கிரானைட் ஊழல்
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த இ.ஆ.ப. அதிகாரி உ. சகாயம் அவர்கள் கடந்த 19.5.2012
அன்று தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் இமாலய ஊழலுக்கான வளங்களில் ஒன்றாக கிரானைட் குவாரிகள் இருப்பது உறுதியாகியிருக்கிறது. சகாயம் அவர்கள் அப்போது அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப் பாதைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்கள், குளங்கள், பாசனக் கால்வாய்கள் ஆகியவை கிரானைட் தொழிலில் செல்வாக்கு மிக்க சிலரால் வளைக்கப்பட்டு, அவற்றில் இருந்த கிரானைட் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு அதிக வருவாயை ஈட்டும் வகையில் இந்த சட்டவிரோத கிரானைட் கொள்ளையைத் தடுக்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். முதல்கட்ட ஆதாரங்களின்படி, கிரானைட் கொள்ளையால் அரசுக்கு ரூ.16,388 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து மேலும் விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதன்படி, விசாரணை நடத்த தமிழக அரசு மறுத்துவிட்ட நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் மட்டும் ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த விசாரணையின்போது, மதுரை மாவட்டத்தில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம்
வாய்ந்த சமணர் படுக்கை மலைகள், பாண்டவர் மலைகள் உள்ளிட்ட மலைகளில் விதிகளை மீறி கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மதுரை மாவடட்டத்தில்தான் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது என்பதாலும், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெருமளவில் கிரானைட் கொள்ளை நடைபெற்றிருப்பதாலும். இந்த வகையில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 5 லட்சம் கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தயங்கியது, இதுகுறித்து விசாரணை நடத்த சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்ட பிறகும் அவரது விசாரணைக்கு ஆதரவு அளிக்க அரசு நிர்வாகம் மறுப்பது ஆகியவை இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதைக் காட்டுகிறது. இதுகுறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வர விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும்.
குற்றச்சாற்று&2: சட்டவிரோத தாதுமணல் கொள்ளை:
ஊழல் தொடர்பான வழக்கில் சில வாரங்களுக்கு முன் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “இந்த
நாட்டின் மிகப்பெரிய எதிரி ஊழல் தான்’’ என்று எச்சரித்திருந்தது. உச்சநீதிமன்றத்தால் எதிரி என்று எச்சரிக்கப்பட்ட ஊழல், தமிழக அரசு நிர்வாகத்தில் ஆழமாக ஊடுருவி தலைவிரித்தாடி வருவதாகத் தெரிகிறது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மோனோசைட் என்ற தாதுவை வெட்டியெடுப்பதற்கு அனுமதி அளிக்கும் அளவுக்கு, தமிழக அரசின் நிலவியல் மற்றும் சுரங்கத்துறையில் ஊழல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மோனோசைட் என்பது அணுசக்தியை உள்ளடக்கிய தாது ஆகும். இதிலிருந்து தோரியம், யுரேனியம் போன்ற தாதுக்களை பிரித்தெடுக்க முடியும். இந்த தாது இயல்பாகவே, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள கடற்கரை மணலில் பெருமளவில் காணப்படுகறது.
இந்த தாதுவைக் கொண்ட மணல் கடற்கரை மணல் அல்லது தாதுமணல் என்று அழைக்கப் படுகிறது. இது பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட தாது ஆகும். இதுவிர இல்மனைட், கார்னெட், ரூட்டைல், சிலிமனைட், ஜிர்கான் உள்ளிட்ட தாதுக்களும் கடற்கரை மணலில் அளவுக்கு அதிகமாக காணப்படுகின்றன.
தாது மணல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், 1998 ஆம் ஆண்டு வரை இதை
தோண்டியெடுக்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. தாது மணலை வெட்டியெடுக்கும் உரிமை இந்திய அரசுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. 1998 ஆம் ஆண்டு விதிகள் திருத்தப்பட்டு, கார்னெட், இல்மனைட், ரூட்டைல் ஆகியவற்றை கடுமையான விதிகளுக்கு உட்பட்டு தனியார் நிறுவனங்களும் வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்படடது. எனினும், மோனோசைட் தொடர்ந்து தடை செய்யப்பட்ட தாதுவாகவே இருந்து வந்தது. மோனோசைட் தாதுவை கையாளவேண்டுமானால், இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்திடமிருந்து உரிமம் பெறவேண்டும் என்று 1962 ஆம் ஆண்டின் அணுசக்தி சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெட்டியெடுக்கப்பட்ட தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோனோசைட் தாது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஹைதராபாத்தில் உள்ள அணு தாது வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின்படி, தாதுமணலை வெட்டியெடுப்பதற்கான உரிமங்களை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது; மாநில அரசுக்கு இல்லை. ஆனால், இந்தச் சட்டங்களை மதிக்காமல், கடந்த 2012&13 ஆம் ஆண்டில் மோனோசைட் கலந்த தாது மணலை வெட்டியெடுப்பதற்கான 16 உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் நிலவியல் மற்றும் சுரங்கத்துறை வழங்கியுள்ளது. அணுசக்தி எரிபொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளாகக் கருதப்படும் மோனோசைட்டைக் கொண்ட தாது மணலை விருப்பம்போல வெட்டியெடுப்பதற்கான உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விதிகளை மீறி வழங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, ஒரு டன் மோனோசைட்டை எடுப்பதற்கான உரிமத் தொகையாக வெறும் 125
ரூபாயை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மோனோசைட்
தாதுவை உற்பத்தி செய்து வெளிச்சந்தையில் விற்க மறைமுகமாக தமிழக அரசு அனுமதி
அளித்துள்ளது. இது இந்திய அரசின் சட்டத்தை மீறிய செயல் என்பது மட்டுமின்றி, தேசியப்
பாதுகாப்புக்கும் பெறும் அச்சுறுத்தலாகும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில்
இயற்கை கொடுத்த கொடையான தாதுமணல் ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற வைகுண்டராஜன் என்பவருக்கு சொந்தமான வி.வி. மினரல்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுகிறது.
இந்தியாவில் கார்னெட் மணல் அள்ளுவதற்காக வழங்கப்பட்ட 111 உரிமங்களில் 96 உரிமங்கள் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர இல்மனைட் எனப்படும் தாது மணலை அள்ளுவதற்கான 44 உரிமங்களும் இந்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டிருக்கின்றன. உரிமம் பெற்ற இடங்களை விட பலமடங்கு இடங்களில் தாது மணல் அள்ளப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
கடந்த 2002 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில்மட்டும் மொத்தம் 2.1 மில்லியன் டன் எடையுள்ள மோனோசைட் அல்லது 2.35 லட்சம் டன் தோரியத்தை கடற்கரைகளில் இருந்து தாதுமணல் நிறுவனங்கள் கொள்ளையடித்திருக்கின்றன. இதன் மதிப்பு அளவிட முடியாத அளவுக்கு அதிகம் என்ற போதிலும், மிகக்குறைவாக வைத்துக் கொண்டாலும் ரூ.60 லட்சம் கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களிலேயே உள்ளன.
இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணு தாதுக்களை கண்டுபிடித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கான இயக்குநரகத்தின் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்திய கடலோரப் பகுதிகளில் 10.7 மில்லியன் டன் அளவுக்கு மோனோசைட் தாது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இதே இயக்குநரகம் தாக்கல் செய்த அறிக்கையில், இந்திய கடலோரப் பகுதிகளில் 12.8 மில்லியன் டன் மோனோசைட் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் 2.1 மில்லியன் டன் மோனோசைட் அல்லது 2,35,000 டன் தோரியம் வெட்டியெடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அ) இந்தியா முழுவதற்கும் தோரியம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான்
வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 700 ஆண்டுகளுக்கான
மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
ஆ) உலகில் இப்போது எந்த அளவுக்கு அணுமின்சாரம் தயாரிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு
மின்சாரத்தை தயாரிப்பதாக இருந்தால் தாதுமணல் நிறுவனங்கள் கொள்ளையடித்த தோரியத்தைக்கொண்டு 23,500 ஆண்டுகளுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இ) தாதுமணல் நிறுவனங்கள் கொள்ளையடித்ததாக கூறப்படும் தோரியத்தில் 75% வி.வி. மினரல்ஸ்நிறுவனத்தால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் ரூ.45 லட்சம் கோடி ஆகும்.
* வி.வி. மினரல்ஸ் நிறுவனம் இந்த அளவுக்கு கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் போதிலும்,அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தாது மணல் கொள்ளை குறித்து அரசிடம் புகார் அளித்த அடுத்த நாளே (06.08.2013) அம்மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் இரு நாட்கள் கழித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அப்போதைய வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் அறிக்கை
17.09.2013 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த
அறிக்கையில் தாது மணல் கொள்ளை குறித்து திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக
கூறப்படுகிறது. அதனால், அந்த அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்த
அறிக்கையை ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; அடுத்த இரு வாரங்களில் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த 29.05.2014 அன்று தமிழக அரசுக்கு ஆணையிட்டது. ஆனால், இன்றுவரை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் உள்ள 71 தாதுமணல் குவாரிகளில் ககன்தீப்சிங் பேடி குழு ஆய்வு நடத்தி ஓராண்டு ஆகியும் அது குறித்த அறிக்கையை குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள தமிழக அரசு மறுத்து வருகிறது.
வி.வி. மினரல்ஸ்நிறுவனத்தின் தலைவரான வி.வைகுண்ட ராஜன் அ.தி.மு.க. தொலைக் காட்சியான ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருப்பதாலும், தாதுமணல் கொள்ளை மூலம் கிடைத்த பணத்தில் பெரும்பகுதி ஆட்சியாளர்களுக்கு செல்வதாலும் தான் இந்த விஷயத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள தாதுமணல் குவாரிகளை மூட கடந்த 17.9.2013 அன்று மாநில அரசு
ஆணையிட்டது. ஆனால், அதன் பின் 30.5.2014 வரையிலான 9 மாதங்களில் வி.வி. மினரல்-ஸ்
நிறுவனம் 4.45 டன் எடையுள்ள தாதுக்களை ஏற்றுமதி செய்ய தமிழக அரசு அனுமதித்திருப்பதாகவும்,இந்த வகையில் மட்டும் தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து, விசாரிக்க ஆணையிட வேண்டும் என்று கோரி ஜி.விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் தாக்கல் செய்ய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாற்று&3: ஆற்றுமணல் ஊழல்
தாதுமணல் அளவுக்கு ஆற்று மணலை வெட்டியெடுப்பதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில்,,
தமிழக அரசும் குற்றவாளிதான். மணல் வெட்டியெடுப்பதற்கான உரிமம் பெற்றிருந்த தொழிலதிபர்கள் கோவை ஆறுமுகசாமி, கரூர் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் மணல் விற்பனையில் தமிழக அரசுக்கு வரவேண்டிய வருவாயை தங்களுடையதாக்கிக் கொள்வதற்காக, அனைத்து வகையான சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடுவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. மணல் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், சுமார் 188கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய ஆறுகளிலும், விதிகளை மீறி, 20 அடி ஆழம் வரை வெட்டியெடுக்கப்பட்ட மணல், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படுகிறது. மணல் கடத்தை தடுக்கும் நோக்குடன், சென்னை
உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் செயல்படுத்த வில்லை. அதுமட்டுமின்றி,மணல் கடத்தலுக்கு தடையாக இருந்த அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் படுகொலை செய்யப்படுவதை அதிகாரிகளும், காவல்துறையினரும் கண்டும் காணாமலும் இருந்தனர்.
ஆ) மின்துறை ஊழல்:
தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் ஊழல் நடைபெற்ற துறைகளில் மின்துறையும் ஒன்று. 2011
ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையட்டி, அ.இ.அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்
மின்துறைக்கு புத்துயிர் ஊட்டவும், தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் தரமான
மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று
வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட
நிறைவேற்றப்படவில்லை. இதனால், தமிழகத்தில் காணப்படும் கடுமையான மின்வெட்டால் தொழில் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம், வாழ்வாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணம், ஊழலும், நிர்வாக குறைபாடுகளும்தான் என்பதை கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் விளக்கும். மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல் செய்வதற்காக, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டே மின்தட்டுப்பாட்டை உருவாக்கினார்கள்.
குற்றச்சாற்று & 4: மின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேவையில்லாத தாமதம்:
தமிழ்நாட்டில் மின்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தனியார் நிறுவனங்கள் தேவையில்லாத
தாமதங்களை ஏற்படுத்தின. உதாரணமாக, வடசென்னை அனல்மின் நிலையத் திட்டத்தின் முதல் அலகை செயல்படுத்துவதில் 29 மாதங்கள் தாமதம் ஆனது. இதனால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பு 944.767 கோடி யூனிட். வடசென்னை அனல்மின் நிலையத் திட்டத்தின் இரண்டாம் அலகை செயல்படுத்துவதில் 22 மாதங்களும், மேட்டூர் அனல் மின் திட்டத்தை செயல்படுத்துவதில் 24 மாதங்களும் தாமதம் ஆனது. இதனால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பு முறையே 663.321 கோடி, 647.631கோடி யூனிட்டுகள் ஆகும். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 4510 கோடி ஆகும்.
குற்றச்சாற்று &5: ஒப்பந்ததாரர்களிடமிருந்து தாமதத்திற்கான அபராதம்
வசூலிக்கப்படவில்லை
வடசென்னை அனல் மின்திட்டங்களுக்கான ஒப்பந்தம் பெல் நிறுவனத்திற்கும், மேட்டூர் அனல்
மின் திட்டத்திற்கான ஒப்பந்தம் பி.ஜி.ஆர். (ஙிநிஸி) நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்தன. இந்த
ஒப்பந்தங்களின் படி மேட்டூர் மின்திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் கால தாமதத்திற்காக மாதத்திற்கு ரூ.107 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். மேட்டூர் மின்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்காக முதல் 4 மாதங்களுக்கு ஒவ்வொரு வாரமும் திட்ட மதிப்பான ரூ.3114.71 கோடியில் 0.5 விழுக்காடு வீதமும், 5 மற்றும் 6 ஆவது மாதங்களில் ஒவ்வொரு வாரமும் 0.75% வீதமும், அதன் பின்னர் திட்டப்பணிகள் முடிவடையும் வரை ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு விழுக்காடு வீதமும் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். அதன்படி இந்த இரு நிறுவனங்களிடமிருந்தும் ரூ.7418. 07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், அவ்வாறு வசூலிக்கப்பட வில்லை என்றும் இந்திய தலைமைக் கணக்காயர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டிருக்கிறது. (ஆதாரம்: 2012&13 ஆம் ஆண்டிற்கான இந்திய தலைமைக் கணக்காயர் அறிக்கை, பக்கம்: 35&37 மற்றும் 101). தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து மின்திட்டங்களும் பல ஆண்டுகள் தாமதமாகத் தான் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த மின்திட்டங்களை செயல்படுத்தியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய அபராதத் தொகை மட்டும் சுமார் ரூ.10,000 கோடி இருக்கும்.
குற்றச்சாற்று&6: 3,600 மெகாவாட் மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம்
தமிழ்நாட்டில் 3,600 மெகாவாட் திறன்கொண்ட அனல்மின் திட்டங்களை செயல்படுத்துவதில்,
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தேவையற்ற காலதாமதம் செய்யப்படுவதாகவும் இதனால், மின் திட்டச் செலவுகள் அதிகரித்திருப்பதாகவும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர்
அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு
வரையிலான 11 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மொத்தம் 7,808 மெகாவாட் மின்உற்பத்தி
திறன் கொண்ட மின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்குக்கூட அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. 112 மெகாவாட் திறன்கொண்ட நீர் மற்றும் எரிவாயு மின் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றச்சாற்று&7: மின்சார கொள்முதலில் ஊழல்
தமிழ்நாடு மின்சார வாரியம் போதிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யாததால், தனியாரிடமிருந்து அதிக விலை குறித்து மின்சாரத்தை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. என்.எல்.சி., கல்பாக்கம் அனல்மின் நிலையம், தேசிய அனல்மின் கழகம் உள்ளிட்ட மத்திய அரசு மின் நிறுவனங்களிடமிருந்து மின்சார வாரியம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.2.94 முதல் ரூ.3.85 வரை விலை கொடுத்து வாங்குகிறது.
பிற தனியார் நிறுவனங்களிடமிருந்து, ஒரு யூனிட் 4.26 முதல் 4.76 வரை விலைகொடுத்து
வாங்குகிறது. ஆனால், சாமல்பட்டி மின் நிறுவனம், மதுரை மின் நிறுவனம், பிள்ளை பெருமாள் நல்லூர் மின்நிறுவனம், ஜி.எம்.ஆர். மின் நிறுவனம் ஆகிய 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.15.14 என்ற விலையில் நடப்பாண்டில் 79 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் தன்னிச்சையாக முடிவு செய்திருக்கிறது. தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும்போது ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்; ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.5.50க்கும் மேல் விலை தரக்கூடாது என்பவை ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளாகும்.
இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மிக அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது.
இ). பிற ஊழல்கள்
குற்றச்சாற்று &8: கட்டுமான மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் ஊழல்
அண்மையில் சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 12 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு ஊழல்தான் காரணம் என்றும், இந்தக் கட்டடத்தைக் கட்டியவர் அப்போதைய முதலமைச்சருக்கு நெருக்கமாக இருந்த அமைச்சரின் பினாமி என்று கூறப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுவதற்காக, பெருமளவில் கையூட்டு கொடுக்கவேண்டும் என்பது விதியாகிவிட்டது. சென்னையில் ஒரு வீடு கட்டுவதற்காக குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் கையூட்டு தர வேண்டியிருக்கிறது. அடுக்குமாடிக் கட்டடங்களை கட்டுவதற்கான அனுமதி பெறும்போது, ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கையூட்டு பெறப்படுகிறது.
இந்த வகையில் மட்டும் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 36,000 கோடி ரூபாய்
அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாற்று&9: பொது விநியோகத்திற்கான பருப்பு கொள்முதல் செய்வதில் ஊழல்
தமிழ்நாடு அரசின் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ், நியாயவிலைக் கடைகள் மூலம்
குடும்ப அட்டை தாரர்களுக்கு வினியோகிப்பதற்கான உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதிலும் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றி ருக்கின்றன.
அடுத்த ஓராண்டுக்கு தலா ஒரு லட்சம் டன் துவரம் பருப்பையும், உளுந்தம் பருப்பையும் வினியோகிப்பதற்கான ஒப்பந்தம் ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு எந்த நேரத்திலும் ஆணை பிறப்பிக்கப்படும் நிலையில் உள்ளது. ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கும் ஒரு டன் உளுந்தம் பருப்புக்கு ரூ. 89 ஆயிரமும், ஒரு டன் துவரம் ( பருப்புக்கு ரூ. 75 ஆயிரமும் விலையாக தரப்படவிருக்கிறது. ஆனால், அரசு அதிக விலை கொடுத்து வாங்கவிருப்பதால் உளுத்தம் பருப்புக் கொள்முதலில் ரூ.350 கோடி, மசூர்பருப்பு கொள்முதலில் ரூ.380 கோடி என ஆண்டுக்கு மொத்தம் ரூ.730 கோடி இழப்பு ஏற்படும்.
குற்றச்சாற்று&10: முட்டை ஊழல்
தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்திற்கான முட்டைகளை கொள்முதல் செய்வதிலும் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஒரு முட்டை ரூ. 4.51 என்ற விலையில் ஓராண்டுக்கு முட்டைகளை வினியோகிப்பதற்கான ஒப்பந்தம் நாமக்கல்லைச் சேர்ந்த நேச்சுரல் ஃபுட் புராடக்ட்ஸ், திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுவர்ணபூமி எண்டர்பிரைச-ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நாமக்கல் பகுதியில் முட்டை கொள்முதல் செய்வதற்காக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.3.31 என்ற விலையைவிட, 1 ரூபாய் 20 பைசா அதிகமாகும். ஒரு மாதத்திற்கு 8.55 கோடி முட்டை கொள்முதல் செய்யப்படும் நிலையில், அதற்கு அதிக விலை கொடுப்பதால், மாதத்திற்கு ரூ.12.31 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.
குற்றச்சாற்று & 11: ஆவின் பால் ஊழல்
ஆட்சியாளர்களின் ஆதரவுடன் ஆவின் பாலிலும் கலப்படம் நடைபெற்றிருக்கிறது. விழுப்புரம் அருகே ஆவின் பாலை ஏற்றி வந்த லாரியிலிருந்து 2 ஆயிரம் லிட்டர் பாலை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேதிப்பொருட்கள் அடங்கிய தண்ணீரை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகி வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த ஊழலில் முக்கியப்பங்கு வகித்த பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி பதவி நீக்கம் செய்யப் பட்டார். தமிழ்நாடு முழுவதும் 104 லாரிகளில் தலா 2 ஆயிரம் லிட்டர் வீதம் மொத்தம் ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் பால் கொள்ளையடிக்கப்பட்டு அதற்குப் பிறகு தண்ணீர் கலக்கப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 300 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஆனால், ரூ. 2.89 லட்சம் அளவுக்கு மட்டுமே ஆவின் பால் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி இந்த ஊழலை மூடிமறைக்க தமிழக அரசு முயன்று வருகிறது.
குற்றச்சாற்று&12: ஒப்பந்தங்கள் ஊழல்
நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவற்றின் சார்பில்
மேற்கொள்ளப்படும் பணிகளை செய்வதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அமைச்சர்கள் நிலையில் தொடங்கி கீழ்நிலை அதிகாரிகள் வரை அனைத்து மட்டங்களிலும் சதவீதக் கணக்கில் லஞ்சம் பெறப்படுகிறது. இந்த 3 துறைகளுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் ஒப்பந்த மதிப்பில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகை லஞ்சமாக வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது.
குற்றச்சாற்று&13: போக்குவரத்துத் துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல்
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7500 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை
தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலையில் சேர விரும்புபவர்களிடம் தலா ரூ. 3 முதல் 4 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் பணிக்கு ரூ.10 லட்சமும், இளநிலைப்பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சமும் லஞ்சமாக வாங்கப்படுகிறது.போக்குவரத்துப் பணியாளர்கள் நியமனத்தில் மட்டும் ரூ.300 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
குற்றச்சாற்று&14: கோகோ கோலா ஆலைக்கு அனுமதி ஊழல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் கோகோ கோலா ஆலை அமைப்பதற்கு அனுமதி அளிப்பதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இவர்களில் எடப்பாடி பழனிச்சாமி மூலமாக பல கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.9
குற்றச்சாற்று&15: கல்வித்துறை நியமனத்தில் ஊழல்
அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் கல்வித்துறையையும் விட்டு வைக்க வில்லை.
பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 30 கோடி வரை லஞ்சம் பெறப்படுகிறது.பல்கலைக்கழக பேராசிரியர்கள், இ¬ணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கையூட்டு பெறப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் நடந்திருப்பதை அதிகாரிகள் குழு உறுதி செய்ததை அடுத்து பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்கள்/ இணைப்பேராசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம்
செய்யப்பட்டு, அதற்காக ரூ.500 கோடி கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கையூட்டு பெற வேண்டும் என்பதற்காகவே பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத ஊர்களுக்கு இடமாற்றம் செய்யும் உத்தியை அரசு கடைபிடித்து வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ. 75 ஆயிரமும், தனியார் பள்ளிகளுக்கு புதிதாக அங்கீகாரம் வழங்க ரூ.7.5 லட்சமும் லஞ்சமாக தர வேண்டியுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் பணிக்கு ஆட்களை நியமிக்க ரூ.2.5 லட்சம் கையூட்டாக பெறப்படுகிறது.
குற்றச்சாற்று&16: பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புக் கட்டமைப்புடன் கூடிய பசுமை வீடுகளும், இந்திரா காந்தி வீட்டு வசதித் திட்டத்தின்படியான வீடுகளும் ஏழை மக்களுக்கு கட்டித் தரப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 2.40 லட்சம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதற்காக பயனாளிகளிடமிருந்து ரூ.900 கோடி கையூட்டாக பெறப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்டத்தின் 4 லட்சம் பயனாளிகளிடம் ரூ.1,000 கோடி கையூட்டாக வசூலிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாற்று&17: மது விற்பனையில் ஊழல்
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளின் மூலம் சில்லறையில் மது விற்பனை செய்வதே மிகப்பெரிய ஊழல் ஆகும். ஏனெனில், மது விற்பனை ஏழைகளின் வருமானத்தை கொள்ளையடிக்கிறது; தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை பாதிக்கிறது; குடும்பங்களைச் சீரழிக்கிறது; பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்குத் தேவையான மது வகைகளில் பெரும்பாலானவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான மது ஆலையிலிருந்து (மிடாஸ்) கொள்முதல் செய்யப்படுவது மிகப்பெரிய ஊழல் ஆகும். மதுவிற்பனை மூலம் இந்த ஆலை ஈட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வருமானம் கருப்புப் பணமாக பதுக்கப்படுவதுடன், தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
குற்றச்சாற்று&18: ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டை ஊக்குவிக்கும் நிழல் அரசாங்கம்
தமிழ்நாடு அரசு ஜனநாயக பரவலாக்கல், நிர்வாகத்திறமை ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட வில்லை. மாறாக, அனைத்து அதிகாரங்களும் மக்கள் முதல்வர் என்றழைக்கப்படும் நிழல் அதிகார மையத்திடம் குவிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படும் அவலம் நடைபெறுகிறது. இந்த நிழல் அரசுக்கு உதவ ஓய்வு பெற்ற அதிகாரிகள், வணிகக் கூட்டாளிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவும் உள்ளது. இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்திலிருந்து செயல்படுகிறார்கள். அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊழல் இலக்குகளை இக்குழு தான் தீர்மானிக்கிறது. அமைச்சர்களின் செயல்பாடுகள் அவர்கள் வசூலித்துத் தரும் லஞ்சப் பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றனவே தவிர, அவர்களின் பணித்திறன் அடிப்படையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மேதகு ஆளுனர் அவர்களே!
இந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகள் அனைத்தும் பொது ஊழியரால்
இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஒப்பானவையாகும். பொது ஊழியர்களாக இருப்பவர்கள், பணப்பயன் அடையும் நோக்குடன் தங்களின் பதவியை பயன்படுத்தி செய்யும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டமும், 1988 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டமும் தெளிவாக வரையரை செய்திருக்கின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163(1) பிரிவின்படி ஒரு மாநிலத்தின் ஆளுனராக இருப்பவர்
தமது அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரையின்படி ஏராளமான பணிகளையும், கடமைகளையும் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவர் அமைச்சரவையின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்ற போதிலும், சில நேரங்களில் அவர் தமது அதிகாரத்தை அவரது விருப்பப்படி செயல்படுத்த முடியும். இத்தகைய அதிகாரத்தை ஆளுனருக்கு வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளில் 167(பி) முக்கியமானதாகும்.
அந்த சட்டத்தின்படி,‘‘ ஒரு மாநிலத்தின் ஆளுனர் கோரும்போது மாநில அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களையும், புதிய சட்டம் தொடர்பான திட்டங்களையும் ஆளுனரிடம் வழங்க வேண்டியது அம்மாநில முதலமைச்சரின் கடமை ஆகும்’’. அதுமட்டுமின்றி, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 163(1)&ன் முதல் பகுதியில் அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் ஆளுனர் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் போதிலும், அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுனர் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களில் அவர் சுதந்திரமாக செயல்பட இந்த சட்டத்தின் பின்பகுதி அதிகாரம் அளிக்கிறது.
அமைச்சரவையின் அறிவுரைப்படி செயல்படுவது சாத்தியமில்லாத விஷயங்களில் ஆளுனர் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்த முடியும் . ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7, 11 ஆகிய பிரிவுகளின்படி அதிகாரத்தில் உள்ள பொது ஊழியர் ஒருவர் மற்றவர்களுக்கு சலுகை காட்டுவதற்காக பணப்பயன் அல்லது பரிசுகள் பெற்றால் அது ஊழலாக கருதப்படும்; இதற்காக அவர்களுக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை
தண்டனையும் வழங்கப்படலாம்.
மேதகு ஆளுனர் அவர்களே...!
மேற்குறிப்பிட்ட சட்ட விதிகளின்படி உங்களின் பரிசீலனைக்காக நாங்கள் இந்த மனுவை
வழங்குகிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167(பி) பிரிவின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கண்ட குற்றச்சாற்றுகள் குறித்து, பொதுநலனைக் காக்கும் நோக்குடன் தமிழக முதலமைச்சரிடமிருந்து விளக்க அறிக்கை கோருவீர்கள் என்று நம்புகிறோம். முதலமைச்சர் சார்பில் அளிக்கப்படும் விளக்கம் திருப்தியளிக்கும் வகையில் இல்லாவிட்டால், இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளின் உண்மைத் தன்மை குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்ற/ உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.’’
Subscribe to:
Posts (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited: