Sunday, February 6, 2011

பா.ம.க.வின் தயக்கமும், தி.மு.க.வின் வியூகமும்

கூட்டணி பேரம் நடக்கும் முன்னே, தேர்தல் வரும் பின்னே' என்பது தமிழக அரசியலில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதப்படாத சட்டம். "மியூசிக்கல் சேர்' ஆட்டத்தில் சுற்றிச் சுற்றி ஓடி, கிடைத்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும் ஆர்வத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் அல்லாத ஏனைய கட்சிகள் நடத்தும் தகிடுதத்தங்கள் ஏராளம் ஏராளம்.

÷பல கட்சிகளுக்கும் இப்போதுதான் தங்களது சுயமரியாதை நினைவுக்கு வரும். ஜாதிய பலமும், வாக்கு வங்கிப் புள்ளிவிவரங்களும் பயன்படும். கடந்த முறை பெற்ற இடங்களைப் பற்றியே கவலைப்படாமல், கடந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களைவிட அதிக இடங்களில் போட்டியிட்டுத் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும்.

÷தில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து தி.மு.க.வுடனான காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்து கொள்ளச் சென்ற முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தங்களது கூட்டணியில் இருக்கிறது என்று அறிவிக்க, பா.ம.க. தர்மசங்கடத்தில் நெளிய இப்போது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பது, பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது என்பதுதான்.

÷பென்னாகரம் இடைத்தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு 41,282 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, ஏதாவது கூட்டணியில் அங்கம் வகித்ததாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையில் உறுப்பினர் பலம் இல்லாமல் போனால், அந்த அரசியல் இயக்கம் வலுவிழந்துவிடும் என்பதை ம.தி.மு.க.வின் அனுபவத்திலிருந்து பா.ம.க. பாடம் கற்றுக் கொண்டிருக்கிறது.

÷""பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டு கட்சிகளிடமும் அதிக இடங்களுக்காக பேரம் நடத்திக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதாக அறிவித்தார். எதிர்பாராத இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் ராமதாஸ், நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம்'' என்று கருத்துத் தெரிவித்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

÷முதலில் பா.ம.க. தங்களது கூட்டணியில் இருக்கிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி பிறகு பொதுக்குழுவில், "எதிரிகளை நம்பலாம், துரோகிகளை நம்பக்கூடாது' என்று சோனியா காந்தி கருத்துத் தெரிவித்ததாகக் கூறியிருப்பது ஏன் என்ற கேள்விக்கு- ""இதையெல்லாம் யார் சோனியா அம்மையாரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளப் போகிறார்கள்? பா.ம.க.வை வழிக்குக் கொண்டுவர முதல்வரின் ராஜதந்திரமாகக் கூட இருக்கலாம் அது'' என்று பா.ம.க.விலேயே பலர் விமர்சிக்கிறார்கள்.

÷தி.மு.க., இந்தத் தேர்தலில் "ஸ்பெக்ட்ரம்' ஊழல் என்கிற மிகப்பெரிய சுமையுடனும், அரைகுறை மனதுடன் கூட்டணியில் தொடரும் காங்கிரஸ் எந்த அளவுக்கு உதவும் என்று தெரியாத மனநிலையுடனும்தான் மக்களைச் சந்திக்க இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்கிற உத்தரவாதம் அளிக்காத வரையில் காங்கிரஸ் தொண்டர்களின் முழுமனதுடனான ஆதரவு கூட்டணிக்கு இருக்காது என்பதை தி.மு.க. தலைமை நன்றாகவே உணர்ந்திருக்கிறது.

÷மேலும், காங்கிரஸ் தலைமை, தி.மு.க. கூட்டணிக்குச் சம்மதித்தாலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டாலும், சராசரி காங்கிரஸ் வாக்காளர்கள் எந்த அளவுக்கு தி.மு.க. கூட்டணியை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற கேள்விக்குறி, தி.மு.க. தலைமையை அலட்டவே செய்கிறது. மக்களவைத் தேர்தலில் ஆதரவளித்த காங்கிரஸ் வாக்காளர்கள் இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் 1980-ல் நடந்ததுபோல தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கக் கூடும் என்கிற சந்தேகமும் பரவலாகவே காணப்படுகிறது.

÷ஆரம்ப காலம் முதலே தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பைக் கணிசமாகத் தருவது வன்னியர்கள் அதிகமாக உள்ள வட மாவட்டங்கள்தான். ஏறத்தாழ 100 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வட மாவட்டங்களில் அதிக இடங்களில் தி.மு.க. போட்டி போட விரும்புவதும் அதனால்தான். கூட்டணிக் கட்சியான காங்கிரஸýக்குக் குறைந்தது 20 இடங்களையாவது வட மாவட்டங்களில் தரவேண்டிய நிலையில், பா.ம.க.வுக்கும் கணிசமான தொகுதிகளை அளித்தால் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளே சுமார் 50க்கும் குறைவானதாக இருக்கும்.

÷""50 இடங்களில் போட்டியிட்டால் 50 தொகுதிகளிலுமா வெற்றி பெற்றுவிட முடியும்? வெறும் 30 இடங்களில்தான் வட மாவட்டங்களில் வெற்றி பெறுகிறோம் என்றால், கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த 60 இடங்கள்தான் தி.மு.க.வுக்கும் கிடைக்கும். பா.ம.க.வைச் சேர்த்துக் கொள்ளாமல் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டும் இருந்தாலே வட மாவட்டங்களில் மட்டும் நாம் 60க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற முடியும்'' என்பது தி.மு.க.வில் பரவலாக இருக்கும் கருத்து.

÷அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமானால், கொங்கு மண்டலத்தில் ஒற்றை இலக்க இடங்கள்தான் தி.மு.க. கூட்டணிக்குக் கிடைக்கும் என்று தி.மு.க.வினரே முடிவுக்கு வந்துவிட்டனர். தென் மாவட்டங்களில் தி.மு.க. கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலும், அந்த உறுப்பினர்கள் அழகிரிக்கு வேண்டியவர்களாக இருப்பார்கள் என்றும் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் பதவிப் போட்டியில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் கரம் பலவீனமாகாமல் இருக்க வட மாவட்டங்களில் தி.மு.க. கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

÷பா.ம.க.வைப் பொறுத்தவரை, தனியாகப் போட்டியிடுவது என்பது விஷப்பரீட்சை என்பது ராமதாஸýக்குத் தெரியும். அதே நேரத்தில், தி.மு.க.வுடனான கூட்டணி என்றால், எந்த அளவுக்கு அந்தக் கட்சியில் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் பா.ம.க.வுடன் ஒத்துழைப்பார்கள் என்பதுதான் டாக்டர் ராமதாஸின் கவலைக்கான காரணம்.

÷""தி.மு.க.வைப் பொறுத்தவரை, வட மாவட்டங்களில் மாவட்ட மற்றும் வட்டத் தலைவர்களில் பெரும்பாலோர் வன்னியர்கள். தங்களுக்குப் போட்டியாக பா.ம.க.வினர் வளர்ச்சி அடைவதை ஒருபோதும் விரும்பாதவர்கள். அதனால்தான், 2001 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களில் போட்டி போட்டு 20 இடங்களில் வெற்றி பெற்ற பா.ம.க., 2006 தேர்தலில் வலுவான தி.மு.க. கூட்டணி இருந்தும் 31 இடங்களில் போட்டியிட்டு வெறும் 18 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. பா.ம.க. அதிக இடங்களில் வெற்றி பெற முடியாமல் போவதற்குத் தி.மு.க.வில் கீழ்மட்டத் தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்ததுதான் காரணம்'' என்று குறிப்பிட்டார் குடியாத்தத்தைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ஒருவர்.

÷அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக் கொள்வதிலும் பா.ம.க.வுக்கு சில தர்மசங்கடங்கள் இருக்கின்றன. என்னதான் வலியுறுத்தியும் சி.வி. சண்முகம் கொலை முயற்சி வழக்கை அ.தி.மு.க. தலைமை திரும்பிப் பெற ஒத்துழைப்பு நல்குவதாக இல்லை. தேர்தல் உறவு தனிப்பட்ட பகையை அகற்றுவதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது எப்படி என்கிற தயக்கமும் பா.ம.க. தரப்பில் காணப்படுகிறது.

÷கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் சூழல் ஏற்பட்டால், அ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு எத்தனை இடங்களை அளித்துவிட முடியும் என்கிற சந்தேகத்தை எழுப்புகிறார்கள் பார்வையாளர்கள். தே.மு.தி.க.வைவிடக் குறைவான இடங்களில் போட்டியிட பா.ம.க. தயங்கக் கூடும். 2001-ல் நடந்ததுபோல குறைந்த இடங்கள் நிறைவான வெற்றி என்று அமையுமானால் மட்டுமே, குறைந்த இடங்களை பா.ம.க. ஏற்றுக் கொள்ள முன்வரும். பா.ம.க. கேட்கும் தொகுதிகளை எல்லாம் அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் விட்டுக் கொடுக்குமா என்பது அடுத்த பிரச்னை.

÷அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானால், பா.ம.க.வுக்கு அந்தக் கூட்டணியில் குறைந்த இடங்களே தரப்படும் என்பது தி.மு.க. தலைமைக்குத் தெரியும். ""குறைந்த இடங்களை பா.ம.க. எங்கள் கூட்டணியில் ஏற்றுக்கொண்டால் நல்லது. பலமான கூட்டணி அமையும். இல்லையென்றால், பா.ம.க.வைத் தனிமைப்படுத்தித் தனித்துப் போட்டியிட வைப்பது என்பதுதான் முதல்வர் கருணாநிதி வகுக்கும் வியூகம்'' என்று சொல்லி நிறுத்தினார் மூத்த தி.மு.க. தலைவர் ஒருவர்.

÷தி.மு.க.வைப் பொறுத்தவரை எப்படியும் மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால் மட்டுமே தங்களது அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று கருதுகிறது. ஒன்று, தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டு எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரிக்க வேண்டும். இல்லையென்றால், பா.ம.க. தனிமைப்படுத்தப்பட்டு தனித்துப் போட்டியிட்டுத் தனது செல்வாக்கை இழக்க வேண்டும். அ.தி.மு.க. அணியையும் பலவீனமாக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் பலன் கிடைக்கும். பா.ம.க. பலவீனப்படுவதால் தி.மு.க. பலப்படும் என்று தி.மு.க.விலுள்ள வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

÷தி.மு.க. அணியும், அ.தி.மு.க. அணியும் ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றன. வட மாவட்டங்களில் ஏறத்தாழ 120 தொகுதிகளுக்கு மேல் பரவலாக வன்னியர் வாக்கு வங்கி இருக்கிறது. இதில் 50 தொகுதிகளில் வன்னியர்கள் நிர்ணாயகமாக இருக்கிறார்கள். இந்த 50 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சராசரியாக 20,000 வாக்குகளுக்கு மேல் இருக்கிறது. பா.ம.க.வைத் தனிமைப்படுத்துவதாலோ, மாற்று அணியில் இணையவிடுவதாலோ இந்த வாக்குகளை அந்தக் கூட்டணி இழக்க நேரிடும்.

÷""இந்தக் கணக்கெல்லாம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே எங்களுக்குச் சாதகமாக இருக்கும். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் எங்கள் வாக்குகளை அவர்கள் பெறுவார்கள். வெற்றி அடைவார்கள். ஆனால், நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.வினர் எங்களை வெற்றி பெறச் செய்வதில்லை'' - இது பரவலாகப் பா.ம.க.வினர் மத்தியிலுள்ள அபிப்பிராயம்.

÷தி.மு.க. கூட்டணியில் சேர்வதில் பா.ம.க. தயக்கம் காட்டுவதன் காரணம் இதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் இடம் பெறுமானால் தங்களுக்கு அங்கே என்ன மரியாதை இருக்கும் என்பது இன்னொரு தயக்கம். தனித்துப் போட்டியிட்டால், பென்னாகரத்தில் ஏற்பட்டதுபோல சில இடங்களில் இரண்டாவது இடமும், பல இடங்களில் மூன்றாவது இடமும், 1996-ல் தனித்துப் போட்டியிட்டு 4 இடத்தில் வெற்றிபெற்றது போல சில வெற்றிகளும் பெற முடியுமே தவிர, கணிசமான எம்.எல்.ஏ.க்களைப் பெற முடியாது என்கிற தயக்கம்.

÷பா.ம.க.வின் இந்த தயக்கத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறது தி.மு.க. ஒன்று, குறைந்த இடங்களைக் கொடுத்துக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது. இல்லையென்றால், மும்முனைப் போட்டியை ஏற்படுத்தி, எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்து அதில் குளிர்காய்வது.

÷பா.ம.க.வின் தயக்கம் விலகுமா, இல்லை, தி.மு.க.வின் வியூகம் ஜெயிக்குமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: