Friday, February 4, 2011

பாமக வென்ற தொகுதிகளை மீண்டும் கேட்போம்: ராமதாஸ்

மயிலாடுதுறை, பிப். 4: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வென்ற தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளிடம் மீண்டும் கேட்போம் என்றார் அக் கட்சியின் நிறுவனர் ச. ராமதாஸ்.

நாகை மாவட்டம், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கான கிளை நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ராமதாஸ் பேசியது:

கட்சிப் பணியில் சரியாகப் பணியாற்றாத நிர்வாகிகளை மாற்றி, இளைஞர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 43 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா தொழில் சார்ந்தவர்களே தமிழகத்தை ஆள்கின்றனர். இந்த நிலையை பாமகவினால்தான் மாற்ற முடியும். இதற்கு கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

தமிழகத்தில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலும், அவர்களிடம் ஒற்றுமை இல்லாததால்தான் தமிழகத்தை பாமகவால் ஆள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாக்கு வங்கியாக மட்டுமே செயல்படும் வன்னிய சமூகத்தினர் அனைவரின் உள்ளங்களிலும், தமிழகத்தை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளவேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்தே போட்டியிடும். போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெற தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். தற்போது பாமக வசம் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் கூட்டணிக் கட்சியினரிடமிருந்து கேட்டுப் பெற்று, அந்தத் தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறுவது அவசியம் என்றார் ராமதாஸ்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: