Saturday, February 5, 2011

கூட்டணி குறித்து 4 நாளில் முடிவு, 45 தொகுதிகள் கேட்போம்-ராமதாஸ்

பர்கூர்& நாகப்பட்டிணம்: சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து 4 நாளில் முடிவெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கூட்டணியில் பாமகவுக்கு 40 முதல 45 இடங்களைக் கோருவோம் என்றும் அவர் கூறினார்.

பர்கூரில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், எந்தக் கூட்டணியாக இருந்தாலும் பர்கூர் தொகுதியை நிச்சயம் கேட்டுப் பெறுவோம் என்றார்.

முன்னதாக நேற்று நாகப்பட்டிணம் மாவட்டம், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கான கிளை நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தரங்கம்பாடியில் நடந்தது. அதில் பேசிய ராமதாஸ்,

சுமார் 43 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா தொழில் சார்ந்தவர்களே தமிழகத்தை ஆள்கின்றனர். இந்த நிலையை பாமகவினால்தான் மாற்ற முடியும். இதற்கு கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

தமிழகத்தில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலும், அவர்களிடம் ஒற்றுமை இல்லாததால்தான் தமிழகத்தை பாமகவால் ஆள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்கு வங்கியாக மட்டுமே செயல்படும் வன்னிய சமூகத்தினர் அனைவரின் உள்ளங்களிலும், தமிழகத்தை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆள வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்தே போட்டியிடும். போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெற தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். தற்போது பாமக வசம் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் கூட்டணிக் கட்சியினரிடமிருந்து கேட்டுப் பெற்று, அந்தத் தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறுவது அவசியம் என்றார் ராமதாஸ்.

இதற்கிடையே திமுக கூட்டணியில் பாமகவை மீண்டும் சேர்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதையடுத்து சோனியாவை பாமகவும் திமுகவும் சமாதானப்படுத்த முயன்று வருகின்றன.

ஆனால், சோனியா சாமாதானமாகவில்லை என்று கூறப்படுகிறது. அவரை எப்படியும் சமாதானப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் திமுக உள்ளது.

அதே நேரத்தில் சோனியாவின் கோபத்தையே காரணமாகக் காட்டி பாமகவுக்கு 18 இடங்கள் தான் தர முடியும் என்று திமுக கூறிவிட்டது.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் மட்டும் பாமக வென்றது. இப்போது பாமகவுக்கு 18 இடங்கள் மட்டுமே தர முடியும் என திமுக கூறியுள்ளது.

மேலும் புதிய நிபந்தனையாக, நாங்கள் கொடுக்கும் 18 இடங்களை வாங்கிக் கொள்ள வேண்டும், இந்தந்த தொகுதிகள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கக் கூடாது என்றும் திமுக கூறிவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பாமக அதிமுகவுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துவிட்டது.

ஆனால் அங்கும் எதிர்பார்த்த அளவுக்கு பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படவில்லை. தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூட்டணிக்குள் வந்துவிட்டால், கடைசி நேரத்தில் பாமகை ஜெயலலிதா கழற்றிவிடவும் தயங்க மாட்டார் என்பதால், திமுகவுடனும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது.

கடந்த முறை கிடைத்த 31ல் 6 இடங்களை விட்டுத் தருகிறோம். 25 இடங்கள் தரப்பட்டால் கூட ஓ.கே. என திமுகவிடம் லேட்டஸ்டாக பாமக தெரிவித்துள்ளது.

ஆனால், திமுக இவ்வளவு இடங்கள் தருமா என்பது சந்தேகமாகவே உள்ளதால் தான் 40 முதல் 45 இடங்கள் கேட்போம் என்று குண்டை வீசியுள்ளார் ராமதாஸ் என்கிறார்கள்.

மேலும் 4 நாளில் கூட்டணி குறித்து முடிவு என்று அறிவித்துவிட்டதன் மூலம், அதிமுக கூட்டணிக்குச் செல்லவும் தயார் என்பதை திமுகவுக்கும், குறிப்பாக, சோனியாவுக்கும் உணர்த்தியுள்ளார் ராமதாஸ்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: