Sunday, November 8, 2015

126 மீனவர்கள் விடுதலை மகிழ்ச்சி: 46 படகுகளையும் மீட்க வேண்டும்!: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’இலங்கைச் சிறைகளில் கடந்த இரு மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர் கள் 126 பேர் இன்று விடுதலை செய்யப்படுகிறார்கள். தீபஒளிக்கு முன் அவர்கள் விடுதலை செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படாதது இந்த மகிழ்ச்சியை தடுக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடலில் கச்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மீன் பிடிக்க பாரம்பரிய உரிமை இருக்கும் போதிலும், அவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 

வங்கக்கடலில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன் பிடித்தாலும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத் தொடக்கம் வரை 126 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளனர். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 86 பேர் கடந்த மாதம் 28 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன. ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில் மேலும் 40 மீனவர்களை சிங்களப்படை இரு கட்டங்களில் கைது செய்தது.

இலங்கை அரசின் இந்த அட்டூழியத்தை பா.ம.க. சார்பில் நான் கடுமையாக கண்டித்திருந்தேன். அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக 126 மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மீனவர்களின் விடுதலைச் செய்தி அவர்களின் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வருவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. மீனவர்கள் அவர்களின் குடும்பத்தினருடன் தீபஒளி திருநாளை கொண்டாடாவிட்டால் அவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதற்கே பொருள் இல்லாமல் போய்விடும். ஒருவேளை அவர்களை கடற்படை படகுகளில் அழைத்து வருவதற்கு மோசமான தட்பவெப்பநிலை ஒரு தடையாக இருக்குமானால், அவர்களை வான்வழியாக திருச்சி அழைத்து வந்து, தீபஒளி திருநாளைக் கொண்டாட வசதியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய முன்வந்துள்ள போதிலும், அவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்றும், இனிவரும் காலங்களில் மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்களின்  படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா கூறியிருக்கிறார். 

இப்போதைய நிலையில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 46 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்திருக்கிறது. படகுகளை பறிமுதல் செய்வது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். 46 படகுகள் 368 மீனவர்களுக்கு நேரடியாகவும், நூற்றுக்கணக்கானோருக்கு  மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும். எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: