Wednesday, November 18, 2015

சென்னை: தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்

சென்னை: தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்

இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய மழை சற்று ஓய்ந்திருக்கிறது. அதேநேரத்தில் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நேரத்தில் இத்தகைய பாதிப்புக்கு காரணம் என்ன? என்பதை ஆய்வு செய்வதும், இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சிந்தித்து திட்டம் வகுப்பதும்தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்

மழை நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி நிதி போதுமானது அல்ல. கடலூர் மாவட்டத்தில் மட்டுமே சேதத்தின் மதிப்பு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதால் மத்திய அரசிடமிருந்து நிதி உதவி கோர வேண்டும்.மத்திய அரசின் அதிகாரிகள் குழுவை வரவழைத்து மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பிட வேண்டும். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் அதன் சந்தை மதிப்புக்கு குறையாமல் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.தொடர் மழையால் கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஏற்பட்ட மிகக்கடுமையாக பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். முதலமைச்சர் தான் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அல்லது இந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் இதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும். துணைத் தலைவரிடம் அனைத்து நிர்வாக அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.இந்த ஆணையத்திற்கு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மாவட்ட அளவில் இந்த ஆணையத்துக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். புயல், மழை உள்ளிட்ட இயற்கை சேதங்கள் ஏற்படும்போது மாநில அரசை எதிர்பாராமல் இந்த அமைப்பே நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும். மழை, புயல் வருவதற்கு முன்பாகவே இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.இந்த பணிகளை மேற்கொள்வதற்காக வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவற்றிலிருந்து தேவையான அதிகாரிகளை அழைத்துக்கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி, 2011 ஆண்டின் கடைசி நாளில் தாக்கிய தானே புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து தமிழகத்தை ஆண்ட கட்சிகள் பாடம் கற்றிருக்க வேண்டும். எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. ஆனால், 2004ம் ஆண்டில் சுனாமி தாக்குதலில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் கவலையடைந்த மத்திய அரசு, 2005 ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.அதன்பின்னர், இந்தியாவின் பேரிடர் மேலாண்மையில் அந்த ஆணையம் மிகச்சிறப்பாக பங்காற்றி வருகிறது. தமிழகத்திலும், பேரிடர் மேலாண்மையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வசதியாக தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: