Monday, November 16, 2015

பெட்ரோல், டீசல் விலைகளை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்: ராமதாஸ் கண்டனம்

 
பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரித்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். விலைகளை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை உயர்த்தியுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 36 பைசா உயர்ந்து ரூ.61.38 ஆகவும், டீசல் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.42.00 ஆகவும் மாறியுள்ளன. இவ்விலை உயர்வு சட்டவிரோதமானது; கண்டிக்கத்தக்கது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. இன்னும் கேட்டால் இம்மாதத் தொடக்கத்தில் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 44.72 டாலராக இருந்தது. கடந்த 13 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை 42.41 டாலராக குறைந்து விட்டது. அதன்படி பார்த்தால் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்க முடியாததாகும்.

உண்மையில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 40 பைசா குறைத்த எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்திவிட்டன. அதன்பின் நவம்பர் 7 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1.60 வீதமும், டீசல் மீதான கலால் வரியை 40 காசுகளும் உயர்த்துவதாக மத்தியஅரசு அறிவித்திருந்தது. அதேநேரத்தில் இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது; இந்த சுமையை நாங்களே ஏற்றுக் கொள்வோம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தாராளம் காட்டின. ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக கலால் வரி உயர்வை ஈடு கட்டும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியிருக்கின்றன. மொத்தத்தில் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து மக்களை ஏமாற்றியிருக்கின்றன.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், அதன் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு தருவதற்கு பதிலாக பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை ரூ.9.35 அளவுக்கும்,  டீசல் மீதான உற்பத்தி வரியை ரூ.6.90 அளவுக்கும் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத, தாங்கிக்கொள்ள முடியாத சுமை ஆகும். பன்னாட்டு சந்தையில் இப்போதைய  நிலையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 42.41 டாலராக உள்ளது. இதற்குமுன் 2004-ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை இதே அளவில்(43.05 டாலர்) இருந்த போது  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.41.25 ஆகவும், டீசல் விலை ரூ.29.30 ஆகவும் இருந்தது. ஆனால்,  இப்போது சுமார் 20 ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இது முழுக்க முழுக்க மக்கள் மீது சுமத்தப்பட்ட கூடுதல் சுமையாகும். இந்த சுமையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் மீது கடந்த ஓராண்டில் விதிக்கப்பட்ட அனைத்து கூடுதல் வரிகளையும் நீக்கி விட்டு, பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டு எரிபொருட்களுக்கு புதிதாக விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: