Wednesday, November 18, 2015

மழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி இராமதாசு


மழை சீரழிவுகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மழை என்பது அழகான வரம். ஆனால், சென்னை நகர மக்களைப் பொறுத்தவரை அதை சாபமாக மாற்றிய பெருமை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையுமே சேரும். 

ஒரு நாள் மழைக்கே சென்னை சாக்கடையாகி, வாழத் தகுதியற்ற மாநகரமாக மாறுவதற்கு இந்த ஆட்சிகள் ஏற்படுத்திய கட்டமைப்பு குறைபாடுகள் தான் காரணமாகும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் இயல்பு வாழ்க்கை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். 

மீட்புப் பணிக்காக இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்தவர்களும் வரவழைக்கப்பட்டுள்ள போதிலும், வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை முழுமையாக மீட்க முடியவில்லை. சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தொடர்ந்து மிதந்து  கொண்டிருக்கின்றன. 

கோடிக்கணக்கில் செலவழித்து வீடு கட்டியவர்கள் வீட்டு மாடியில் நின்றவாறே ஒருவேளை உணவு கிடைக்காதா? என கையேந்தி நிற்கும் காட்சிகள் கண்ணீரை வரவழைப்பவை.

மாநகரமான சென்னை மா‘நரக’மாக மாறியதற்கு காரணம் யார்? 1971 ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24.69 லட்சம் ஆகும். சென்னையின் இப்போதைய மக்கள் தொகை 48.28 லட்சம் ஆகும். சென்னை பெருநகரப் பகுதிகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும். ஆனால், இடைப்பட்ட காலத்தில் சென்னையின் மக்கள் தொகை பெருகிய அளவுக்கு அடிப்படைக் உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்பட்டனவா? என்றால் இல்லை என்பது தான் பதில். 

1970-ஆம் ஆண்டுகளில் சென்னையில் சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குளங்கள் என 3,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்துள்ளன. ஆனால், இப்போது 40 ஏரிகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள நீர்நிலைகள் அனைத்தும் கான்க்ரீட் காடுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. வள்ளுவர் கோட்டம் உட்பட சென்னையின் அடையாளங்களாக பார்க்கப்படும் பல கட்டிடங்கள் ஏரி மற்றும் நீர்நிலைகளை அழித்து கட்டப்பட்டவை.
சென்னையில் நீர் ஓடும் பாதைகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்டன. 

பொதுவாகவே, வெள்ள நீர் இயல்பாகவும், விரைவாகவும் வழிந்தோடும் நில அமைப்பு சென்னைக்கு உண்டு.  கூவம், அடையாறு ஆகிய இரு ஆறுகள், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட 16 கால்வாய்கள் இயற்கையாக அமைந்திருந்தன. இவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்பட்டிருந்தால் சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடிந்து விடும். 

ஆனால், இப்போது 2 ஆறுகளும் சாக்கடைகளாக மாற்றப்பற்றதுடன், கால்வாய்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இந்த அனைத்து சீர்கேடுகளுக்கும்  மூல காரணம்  அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான். நீர்நிலைகள் அனைத்தையும் வளைத்து மனைகளாக்கி விற்பனை செய்த பாவம் இந்த இரு கட்சிகளையே சாரும். அவ்வகையில் சென்னை இன்று எதிர்கொள்ளும் சீரழிவுகளுக்கு இவை தான் பொறுப்பேற்க வேண்டும்.

யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே! என்பதைப் போல சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில் காய்ச்சல், காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. இதைத் தடுக்க எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மழை நீர் வடிந்த இடங்களில் தொற்று நோய்த் தடுப்பு மருந்து தெளிப்பு,  வெள்ளம் பாதித்த மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்குதல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். 

இவை தவிர அனைத்து பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், இவற்றில் இதுவரை எந்த பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பதில் இருந்தே ஆட்சியாளர்களின் அலட்சியத்தை தெரிந்து கொள்ளலாம். இனியாவது உறக்கத்தைக் கலைந்து  சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது உட்பட அனைத்து வகையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒட்டுமொத்த மாநகரமும் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், மழை மூலம் கிடைத்த தண்ணீரை சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் தரும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும். பல நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் ஏரிகள் நிரம்பி வீணாக கடலில் கலந்த தண்ணீரின் அளவு மட்டும் 25 டி.எம்.சி.க்கும் அதிகம் ஆகும். 

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாக  மழை  பெய்யும் போதெல்லாம் கூடுதல் நீர் வீணாக கடலில் கலப்பது வாடிக்கையாகி விட்டது. இப்போது பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும், பூண்டி ஏரியில் இருந்து 2,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வீணாக்கப்பட்டிருக்கிறது.  

சென்னையின் குடிநீர் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கவும், பருவமழைகளின் போது வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கவும்  கூடுதலாக குறைந்தபட்சம் 10 புதிய ஏரிகளாவது அமைக்கப்பட வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் ஒரு ஏரியைக் கூட புதிதாக அமைக்கவில்லை. இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றப் போவதாக கூறி இந்த கட்சிகளின் தொலைநோக்குப்பார்வை இவ்வளவு  தான்.

தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து சுரண்டுவது தான் இந்த இரு கட்சிகளின் நோக்கமாகும். தி.மு.க. ஆட்சியில் வெள்ளம் பாதித்தால் ஆட்சியாளர்களை அ.தி.மு.க. விமர்சிப்பதும், அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளம் வந்தால் ஆட்சியாளர்களை தி.மு.க. விமர்சிப்பதும் மட்டுமே நடக்கும். இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இல்லை. 

மழைக் காலங்களில் பொறுப்பற்ற அணுகுமுறையால் ஒரு கட்சி மக்களை பலி கொடுப்பதும், அதை வைத்து இன்னொரு கட்சி அரசியல் செய்வதும் வாடிக்கையாகி வருவதைப் பார்க்கும் போது ‘‘இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?’’ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

மாறி மாறி ஆட்சி... மாற்றி மாற்றி ஏமாற்றம் என்ற அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் நாடகம் இனியும் நீடிக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மக்களை மதிக்காத இரு கட்சிகளுக்கும் மறக்க முடியாத தண்டனையை அடுத்த ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் வழங்கப் போவது உறுதி! இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: