பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை
’’தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,‘‘அதிக அளவு மழை பொழியும் போது சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும்’’ என கூறியிருக்கிறார். மழை&வெள்ள பாதிப்புகளை தடுக்க சிறு துரும்பை கூட நகர்த்தாமல் தமிழகம் சந்தித்த எல்லா பாதிப்புகளுக்கும் இயற்கை மீது பழி போட்டு தப்பிக்க முயல்வது பொறுப்பற்றதனமாகும்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 ஆம் தேதி காலை முதல் 10 ஆம் தேதி காலை வரை நெய்வேலியில் 48 செ.மீ. பண்ருட்டியில் 35 செ.மீ. சேத்தியாத்தோப்பு மற்றும் சிதம்பரத்தில் தலா 34 செ.மீட்டரும் மழை பெய்தது உண்மை தான். ஆனால், இம்மழையால் கடலூர் மாவட்டம் இழந்தது மிக அதிகம். 48 செ.மீ. மழைக்காக 40 அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதும், ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதும் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்படும் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஏற்பட்ட சேதங்கள் அனைத்துக்கும் தமிழக அரசின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை மற்றும் ஊழல் தான் காரணமாகும்.
கடலூர் மாவட்டத்தில் மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களில் 40 விழுக்காடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் ஓடி ஆறுகளில் கலக்க வகை செய்யப்பட்டிருந்தாலே பெருமளவு சேதங்களைத் தடுத்திருக்கலாம். ஆனால், அதிமுக அரசு அதை செய்யவில்லை. காரணம்... ஆக்கிரமித்தவர்களில் கணிசமானவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது தான். அதுமட்டுமின்றி, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப் பட்ட நிதி முற்றிலும் பதுக்கப்பட்டு விட்டதோ என எண்ணும் அளவுக்கு எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த பணிகள் செய்யப்பட்டிருந்தால் கடலூர் மாவட்டத்தில் 48 செ.மீ. மழை பெய்தது என்பது சாதாரண செய்தியாக இருந்திருக்குமே தவிர, மிகப்பெரிய சோகமான செய்தியாக மாறியிருக்காது என்பது உண்மை.
இப்பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையில், கடலூர் மாவட்டம் அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தால் குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுத்திருக்கலாம். ஆனால், இவற்றில் எதையுமே தமிழக அரசு செய்யவில்லை.
சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னை பெருநகர பகுதியின் 40% முறையான திட்டமிடல் இல்லாமல் உருவாக்கப்பட்டது தான் இதற்கு காரணம். குறிப்பாக வேளச்சேரி, முகப்பேர், அம்பத்தூர் ஆகிய பகுதிகள் நீர்நிலைகளை தூர்த்து உருவாக்கப்பட்டவை. இந்த நகரங்கள் உருவாக்கப்பட்ட பகுதிகளைத் தவிர நீர்நிலைகளின் மற்ற பகுதிகள் தூர்வாரப்பட்டு, அவற்றின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டிருந்தால் இந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதை தவிர்த்திருக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் தமிழக அரசு செய்யவில்லை.
சென்னையில் புதிதாக மழைநீர் வடிகால்களை உருவாக்க எல்லைக்கோட்டு வரைபடங்கள் (Contour Maps) தேவை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொலையுணர்வு மையம் இத்தகைய வரைபடங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்துக் கொடுத்தும், அதை முறையான வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்த இரண்டாவது பெருந் திட்டத்தில்(Chennai Second Master Plan) நீர்நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்காக தயாரிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் இப்போதைய அ.தி.மு.க. அரசோ, முந்தைய தி.மு.க அரசோ ஆர்வம் காட்டவில்லை. நீர்நிலைகள் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல ஆய்வுகளை நடத்தியுள்ள போதிலும், அத்திட்டங்கள் எதுவும் இன்னும் நடைமுறைப்படுத்தும் நிலைக்கு கூட வரவில்லை என்று பெருநகர திட்டமிடல் வல்லுனர் கூறியதாக நேற்றைய தி ஹிந்து ஆங்கில நாளிதழில் Rain spotlights the perils of poor planning என்ற தலைப்பில் வெளியான செய்திக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.
தமிழகத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததன் விளைவு தான் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வை யிடுவதும், அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் கால் நனைப்பதும் தமது உடல் நலத்திற்கு கேடு என்று அஞ்சும் முதலமைச்சர் ஜெயலலிதா, மழை&வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் லட்சக்கணக்கான மக்களை சிறுமைப்படுத்தும் வகையில், மழை பெய்தால் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என கூறியிருக்கிறார். ‘‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’’ என்று கூறி இலங்கைப் போரில் தமிழர்கள் படுகொலை செய்ததை நியாயப்படுத்திய ஜெயலலிதாவிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது.
மழை& வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழகம் முழுவதும் 60&க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும், ரூ.1000 கோடி இழப்பு ஏற்படவும் காரணமான ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகி விட்டார்கள் என்பது மட்டும் உண்மை.’’
No comments:
Post a Comment